இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்களில் புரிந்து கொள்வதற்கு கடினமாயிருக்கும் இன்னுமொரு வசனம் யோவான் 9:4 குறிப்பிடப்பட்டடுள்ளது. இவ்வசனத்தில், “பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; என்று தெரிவித்த இயேசுகிறிஸ்து “ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.“ என்றும் முன்னறிவித்துள்ளார். (யோவான் 9:4) இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் “பகற்காலம்“ “இராக்காலம்“ என்னும் வார்த்தைகள் என்ன அர்த்தத்தோடு உபயோகித்துள்ளார் என்பது பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. எனினும், இவ்விரு வார்த்தைகளையும் இயேசுகிறிஸ்து சொல்லர்த்தமாக உபயோகித்துள்ளார் என்னும் விள்ககம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனென்றால் யோவானுடைய சுவிசேஷத்தில் இவ்விரு சொற்பிரயோகங்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உருவக விபரணங்களாக “மக்களின் ஆவிக்குரிய நிலையை அறியத்தரும் சொற்பதங்களாகவே உள்ளன(1) எனினும், சில சந்தர்ப்பங்களில் ஒரே நேரத்தில் இவ்வித அர்த்தங்களுடன் இவ்வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதையும் நாம் அவதானிக்கலாம் (2)
“பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; (3) என்று இயேசுகிறிஸ்து கூறும்போது, இவ்வுலகத்தில் பணிபுரிவற்காகத் தமக்கு நியமிக்கப்படப்டுள்ள காலத்தையே குறிப்பிட்டுள்ளார். “இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பணியாற்றிய காலம் அவருக்குப் பகற்காலமாய் இருந்தது (4) இவ்வசனத்தில் “நான்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் “நாம் என்றே உள்ளது (5) எனவே, இயேசுகிறிஸ்து தம்முடைய சீடர்களையும் சேர்த்து “நாங்கள் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்“ என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார் (6) பிறவிக் குருடனைக் கண்ட சீடர்கள், அவன் குருடனாகப் பிறப்பதற்கு யார் காரணம் என்று கேட்டபோதே இயேசுகிறிஸ்து இவ்வாறு கூறியமையால் (யோவான் 9:1-4) அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை விட்டுவிட்டு, தேவன் தங்களுக்கு கொடுத்துள்ள காலம் முடிவடைவதற்குள் அவர் தந்த பணியைச் செய்ய வேண்டும் என்பதையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேவனால் கொடுக்கப்பட்ட பணியைச் செய்யவேண்டியதன் அவசியத்தைச் சீடர்களுக்குச் சுட்டிக் காட்டுவதறகாக “ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது என்று இயேசுகிறிஸ்து கூறினார். இதற்கு அடுத்த வசனத்தில் இயேசுகிறிஸ்து தாம் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருப்பதாக தெரிவித்துள்ளார். (யோவான 9:5) “இயேசுகிறிஸ்து இவ்வுலகிலிருக்கும் காலமே பகற்காலம் என்றும் அவர் பரலோகத்திற்குச் சென்ற பின்னர் வருவது இராக்காலம்“(7) என்றும் சிலர் கருதுகின்றனர். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் இருக்கும் காலமே பகற்காலம் என்பது உண்மை என்றாலும், (8) வரவிருக்கும் இராக்காலத்தில் ஒருவராலும் கிரியை செய்ய முடியாது எனறும் இயேசுகிறிஸ்து கூறுவதனால், அவர் பரமேற்றிச் சென்ற பின்னர் அவரது சீடர்களினால் தேவனுடைய கிரியைகளைச் செய்ய முடியாதிருந்தது என்றும் நாம் கூறவேண்டும். ஆனால், அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் அறியத்தருவது போல, இயேசுகிறிஸ்துவின் சீடர்கள், அவர் குறிப்பிட்ட விதமாக, அவரையும் விட பெரிய கிரியைகளைச் செய்துள்ளமையால் (யோவான் 14:12) ஒருவரும் கிரியை செய்ய முடியாத இராக்காலம், இயேசுகிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் உள்ள காலம் என்று கூற முடியாது.
உண்மையில் ஒருவரும் கிரியை செய்ய முடியாத இராக்காலம் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமே உள்ளது(9). எனவே, அதற்கும் முன்னர், தேவன் தமக்குக் கொடுத்த பணியைச் செய்ய வேண்டும் என்பதேயே இயேசுகிறிஸ்துவின் இவ்வசனத்தில் தம் சீடர்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளார். இராக்காலம் முடிவடைய மறுபடியும் பகற்காலம் வருவது போலவே, இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பின்னர் மறுபடியுமாகச் சீடர்கள் பரிசுத்த ஆவியானவருடைய உதவியுடன் உலகில் பணிபுரியக் கூடியதாக இருந்தாலும், தமது சிலுவை மரணத்திற்கு முன்னர் தாம் செய்ய வேண்டிய பணிணைச் செய்து முடிக்க வேண்டும் என்பதையே இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் தம் சீடர்களுக்கு அறிவித்துள்ளார். (10) மேலும், அடுத்த வசனத்தில் “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்“ (யோவான் 9:5) என்று இயேசுகிறிஸ்து குறிப்பிடப் பட்டுள்ளமையால், அவர் இவ்வுலகத்திலிருந்து சென்ற பின்னர் உலகிற்கு ஒளி இல்லாமல் போய்விட்டது என்று நாம் கருதலாகாது. அதன் பின்னர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களும், தற்காலத்தில் கிறிஸ்தவர்களும் அவருடைய ஒளியை பிரதிபலிப்பவர்களாக இவவுலகத்தில் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.
Footnote and Reference
(1) G.L. Borchert, John 1-11 : The New American Commentary, p 170. அக்காலத்தைய இலக்கியங்களைப் போலவே, யோவானுடைய சுவிசேஷத்திலும் ஒளி நன்மையையும் ஆவிக்குரிய மெய்வாழ்வையும், இருள் தீமையையும் பாவத்தையும், சாத்தானின் ஆளுகையையும் உருவகிக்கும் விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன.
(2) உதாரணத்திற்கு யோவான் 3ம் அதிகாரத்தில் “நிக்கொதேமு“ இயேசுகிறிஸ்துவிடம் “இராக்காலத்தில் வந்தான்“ என்று குறி்பபிடப்பட்டிருப்பது, இவன் இரவு நேரத்தில் வந்தததையே“ (F. F. Bruce, The Gospel of John, p. 81) அறியத்தந்தாலும் (யோவான் 7:50) அவன் ஆவிக்குரிய அந்தகாரத்திலிருந்து (ஒளியாகிய இயேசுகிறிஸ்துவிடம்) வந்தான் என்னும் அர்த்தத்தையும் உள்ளடக்கியுள்ளது. அக்காலத்தைய யூதமதப் போதகர்கள் இரவு நேரத்திலேயே நியாப்பிரமாணத்தை ஆராய்ந்து படித்து வந்தமையால், யூதமதப் போதகனான நிக்கொதுமுவும இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவ்வித இடையூறுகளுமின்றி கற்பதற்காக இரவு நேரத்தில் அவரிடம் வந்தான் (G.R. Besley-Murray, John : Word Biblical commentary Volume 36, p 47) என்பதும் அவன் மற்ற யூதர்களுகு்குப் பயந்ததினால் எவருக்கும் தெரியாமல் இயேசுகிறிஸ்துவைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தைத் தெரிவு செய்தான். (W.Hendriksen, New Testament Commentary : John, p 132) எ்னபதும் உண்மை என்றாலும் “அவன் ஆவிக்குரிய அந்தகாரத்திலிருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்துள்ளான். (H. Hoskyns, The Fourth Gospel, p 211) என்பதை மறுப்பதற்கில்லை. “நிக்கொதேமு இரவுநேரத்தில் இயேசுகிறிஸ்துவிடம் வந்தாலும், அவனது ஆவிக்குரிய வாழ்வின் இருள் அவன் நினைத்ததைவிட அதிகமாக இருந்தது“ (E.W. Heisenberg, Commentary on the Gospel of John Volume 1, pp. 157-158; R.H. Lightfoot, St. John's Gospel : A Commentary p. 116)
(3) இயேசுகிறிஸ்து இவ்வுலகில் பணிபுரியும் போது, தம்மை அனுப்பிய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே செயற்பட்டு வந்தார் (யோவான் 6:38) இதனால்தான் இவ்வசனத்திலும் நான் “என்னை அனுப்பினவருடை கிரியைகளைச் செய்ய வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
(4) J.C. Ryle, Expository Thoughts on John Volume 2, p. 160
(5) இதனால்தான் புதிய இலகு தமிழ் மொழிபெயர்பபில் இவ்வசனம் “பகல்வேளையாய் இருக்கும் போதே என்னை அனுப்பினவருடைய வேலையை நாம் செய்ய வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிவிலியத்திலும் “நாம்“ என்றே மொழிபெயர்த்து்ள்ளனர். மேலும் “மோனஹன்“ மற்றும் “ராஜரீகம்“ என்போரது தமிழ் வேதாகம மொழிபெயர்ப்புகளிலும் இதனை நாம் அவதானிக்கலாம்.
(6) R.C.H. Lenski, The Interpretation of St. John's Gospel, P. 677
(7) J.C. Ryle, Expository Thoughts on John Volume 2, p 160 இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திலிருந்து சென்றபின்னர் உள்ள காலமே இராக்காலம் என்னும் கருத்திற்கு ஆதாரமாக இவர்கள் ரோமர் 13:12 ஐ சுட்டிக்காட்டுவது வழமை. இவ்வசனத்தில் “இரவு சென்று போயிற்று பகல் சமீபமாயிற்று“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் இரவு என்பது இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் சரீரப்பிரகாரமாக இல்லாத காலம் என்றும் வரவிருக்கும் பகல் அவரது மறுவருகை என்றும் கூறுகின்றனர். (Ibid, p. 161)
(8) D.A. Carson, John : Pillar New Testament Commentary, pp 362-363
(9) G.L. Borchert, John 1-11 the New American Commentary, p. 314
(10) D.A. Carson, John: Pillar New Testament Commentary, pp 362-363
(11) E.A. Blum, John: The Bible Knowledge Commentary New Testament, p. 307
(அவ்வாக்கமானது Dr.வசந்தகுமார் அவர்கள் எழுதிய “கர்த்தரின் வார்த்தைகளில் கடினமானவரிகள்“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
சகோதர் அவர்களுக்கு... Dr.வசந்தகுமார் அவர்கள் எழுதிய புத்தகங்கள் எனக்குத் தேவை தயவு செய்து அதை அனுப்பி வைக்கவும். My Gmail ID mytrustjesus@gmail.com
ReplyDeleteKarthikstephen
அன்பின் சகோதரருக்கு
ReplyDeleteஇலங்கையிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுமே அவரின் நூல்கள் விற்பனையாகின்றன. Copyright உரிமம் இருப்பதனால் அவற்றினை தங்களுக்கு வழங்க முடியாது உள்ளது. மதுரை சத்தியவசனத்தில் சில நூல்களை பெற முடியும்.
ஆசிரியரின் இணையத் தளம்
http://tamilbibleresearchcentre.com/
மரணத்தின் மறுபக்கம் மென்நூலை இங்கிருந்து தரவிறக்குங்கள்
http://www.4shared.com/document/p__H9Nt6/Life_after_the_Death.html
God Bless You