- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday, 2 November 2010

வெற்றியின் இரகசியம்!

தாவீது கர்த்தருக்கென்று பெரிய காரியங்களைச் செய்தான். தாவீது தேவன் பேரில் கொண்டிருந்த வைராக்கியமும் அர்ப்பணிப்பும், ராஜாவாக அவன் நடத்திய அரிய செயல்பாடுகளும் வேதத்தில் விவரமாக எழுதப்பட்டுள்ளது. அந்நாட்களில் இருந்த பெரும் பராக்கிரமசாலிகளை சவால்விட்டுப் போருக்கு அழைத்த ராட்சதனாகிய கோலியாத்தை தாவீது வீழ்த்தினான். அவன் அபிஷேகத்தில் நிறைந்திருந்ததினால் அவன் இசைக்கருவியை இசைத்தபோது , அசுத்த ஆவிகள் அலறி ஓடின. கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவனாக அவன் இருந்தான்.

இவையெல்லாம் தாவீதுக்கு எப்படி சாத்தியமாயிற்று? கர்த்தருடைய வார்த்தையில் அவன் பயிற்றுவிக்கப்படவில்லை. ஒரு ராட்சதனோடு போராடுவது எப்படி என்று யாரும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. அவன் எல்லோருக்கும் இளையவனாக அவன் குடும்பத்தில் இருந்தபடியால் அவனுடைய சகோதர்களே அவனை சரிவர மதிக்கவில்லை.ஆடு மேய்க்கும் சிறியவனாக அவன் வெளிகளில் இருந்தபோது ஒரு அற்புதம் நடந்தது. காலை முதல் மாலை வரை அவன் செய்ததெல்லாம் புல்வெளிகளில் அலைந்து திரிந்து தன் மந்தையின் ஆடுகளை மேய்த்து வந்ததுதான். எனினும் இப்படிப்பட்ட சுவாரசியம் அற்ற மேய்ப்பனின் பணியிலேயே தேவன் அவனுக்கு பல உன்னதமான அனுபவங்களைத் தந்தார். இதை அவனைச் சுற்றிலும் இருந்த எவரும் அறிந்துகொள்ளவில்லை.

தாவீது தன் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்தான். எனவே தன் எல்லாத் தேவைகளுக்கும் தாவீது கர்த்தரை நோக்கிப் பார்த்தான். தாவீது கர்த்தரில் களிகூர்ந்து கொண்டிருந்தான். ஒரு முறை ஒரு சிங்கம் அவனுக்கு எதிராக வந்தது. கர்த்தர் அவனோடே இருந்து அதைக்கொன்றுபோட அவனுக்குப் பெலன் கொடுத்தார். பல சந்தர்ப்பங்களில் நாம் நமக்கு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் வனாந்தரத்தில் தனியே விட்டுவிடப்பட்டுள்ளோம் என்றும் குறைகூறித் திரிகின்றோம். ஆனால் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தான் தேவன் நம்மை உருவாக்கி கூர்மைப்படுத்தி நம் திறமைகளை சிறப்பாக்கி அவர் பேரில் உள்ள நம் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார். நீங்கள் கடந்துசெல்லும் துன்பம் துயரம் நிறைந்த போராட்ட வாழ்க்கை மட்டும்தான் பிறர் கண்களுக்குத் தெரியும். ஆனால் கர்த்தர் உங்கள் வாழ்வில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் எப்படி அவர் உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றும் யாரும் தெரிந்துகொள்வதில்லை.

தாவீது சிங்கத்தைக் கிழித்துப்போட்டபோது கை தட்டி ஆரவாரம் செய்து அவனைப் புகழ அங்கே யாரும் இருக்கவில்லை. ஆனால் பின்பு தேவன் அவனுடைய அனுபவத்தை பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேலரைக் காக்கப் பயன்படுத்தினார். தாவீது கோலியாத்தை ஒரு கூழாங்கல்லினால் வீழ்த்திய போது, அனைவரும் அதிசயித்தனர்.பல சந்தர்ப்பங்களில் தேவன் நம் வாழ்க்கையில் ஆழமான பல காரியங்களை இரகசியமாக நிறைவேற்றுகிறார். தனிமையில் நீங்கள் சிந்தும் கண்ணீர், தனிப்பட்ட முறையில் வனாந்திர வாழ்வில் நீங்கள் அனுபவிக்கும் அற்புதங்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட விடுதலைகள் இவை அனைத்தையும் கர்த்தர் பயன்படுத்தி உங்கள் முன்நிறுத்தி நீங்கள் ஏராளமானோருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி உங்களை உயர்த்துவார். உங்கள் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் தேவனுடைய கட்டுபாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. இன்று வனாந்திர அனுபவத்தில் நீங்கள் இருப்பதை எண்ணி சோர்ந்துபோக வேண்டாம். கர்த்தரை விசுவாசியுங்கள். ஆண்டவரை நேசியுங்கள். தேவனில் களிகூருங்கள். உறுதியாய் இருங்கள்.

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. ஆண்டவரை நேசித்து விசுவாசித்தால் உயர்த்துவார்

    ReplyDelete
  2. ஆம் கண்டிப்பாக. தேவன் உங்களையும் உயர்த்துவார்.

    ReplyDelete