தமது பரம எஜமானனுக்குத் தொண்டு செய்துவந்த சாது சுந்தர் சிங் பட்ட கஷ்டங்கள். பல தரம் உண்ணத் தகுந்த உணவு கிடடாததால் காட்டில் விளையும் கனி கிழங்குகளையே புசித்து தன் பசியின் அகோரத்தைத் தணித்துக்கொண்டார். கல் நெஞ்சரான ஊரார் இராத்தங்க இடங்கொடாமல் அவரை விரட்டினதால் அடிக்கடி மரத்தடியிலேயோ இருண்ட கெபியிலேயோ படுத்து நித்திரை செய்தேன் என்றும் சாது சுந்தர் சிங் கூறியிருக்கிறார். இக்கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்த நாடுகளில் விசேஷ அபாயங்கள் நிறைந்திருந்தன.
ஆகையால் சாது சுந்தர் சிங் இரவில் இளைப்பாறச் சென்ற இடங்களில் ஒரு காட்டு மிருகமோ, பாம்போ தம்மோடு தங்கியிருந்ததைக் கண்டு திடுக்கிட்ட சமயங்கள் அநேகம். தோரியோ என்ற தாலுக்காவின் ஒரு கிராமத்தில் சுந்தர் கழித்த காலமெல்லாம் பக்கத்திலிருந்த காடுதான் அவர் உறங்குமிடமாயிற்று. அக்கிராமத்தார் அவரை அவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள்.
ஓர் இரவு மனஞ்சோர்ந்து தேகம் களைப்புற்றவராய் சுந்தர் இருண்ட கெபிக்குள் நுழைந்து தன்னுடைய போர்வையை விரித்தபோது தன் பக்கத்தில் அயர்ந்து தூங்கின பெரிய சிவிங்கியொன்றைக் கண்டார். திகில் கொண்டெழுந்து அம்மிருகத்தின் வாயினின்று தப்புவித்த இயேசுவின் திருவடிகளைப் போற்றிக்கொண்டு சென்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவரோடு இருந்தததினால் துஷ்டமிருகமொன்றும் அவருக்குத் தீங்கு செய்ததில்லை.மற்றொரு தரம் ஊராரால் துரத்துண்டு தனியே தியானம் பண்ணும்படி ஒரு பாறையின்மேல் உட்கார்ந்தார். பாறையின் அருகிலிருந்த குகைக்குள்ளிருந்து தம்மைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கருஞ்சிறுத்தையைப் நித்திரையில் ஆழ்ந்திருந்த சுந்தர் கவனிக்கவில்லை. பிறகு தாமிருந்த அபாய நிலைமையையறிந்து பயங்கொண்டபோதிலும் இதுவரை தம்மைக் காத்துவந்த தெய்வத்தின் துணையில் சார்ந்து அமைதலாய் எழுந்து கிராமத்திற்குச் சென்றார்.
இந்த அதிசயக் தகவலைக் கேட்ட ஊரார். தம்மில் பலரைக்கொன்று தின்ற இந்த துஷ்டமிருகத்திற்கு இரையாகாது தப்பின இவர் ஒரு புண்ணிய புருஷர்போலும்! இவர் சொல்லும் நன்மொழியை நாம் கேட்பதும் தகுதியே என்று நினைத்து, சுந்தரை நயந்து அவருக்குச் செவிகொடுத்தார்கள். இதைக்கண்ட சுந்தர் தேவனைத் துதித்து மனத்திடன் கொண்டார்.
·
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment