- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday, 15 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா?(2)

இதன் முதல் பகுதியை வாசிக்க இங்கு அழுத்தவும்

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 1:16-25 இலும் லூக்கா 1:26-38 இலும் இவ்வுபதேசம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுகிறிஸ்து பிறக்கும்வரை, யோசேப்பு மரியாளை அறியாதிருந்தான்“ என கூறும் மத்தேயு (1:25) 'இருவரும் கூடிவரும் முன்பே மரியாள் பரிசுதத ஆவியினால் கர்ப்பவதியானாள்“ (1:18) என்று அறியத்தருகிறார். இச்சம்பவம் நடைபெற்றபோது மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் என்பதை லூக்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். (1:26-38) “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் என கன்னிப் பெண்ணான மரியாளிடம் கூறிய தேவதூதன் (லூக். 1:35) தான் அறியாமலேயே அவள் கர்ப்பவதியாயிருப்பதனால் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்த யோசேப்பிடம் “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது“ என அறிவித்தான் (மத். 1:20) 

இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அதாவது, கன்னிப் பெண்ணான மரியாள் கருத்தரித்து இயேசுவெனும் தெய்வீகக் குழந்தையைப் பெற்றெடுத்ததைப் பற்றி மத்தேயுவும் லூககாவும் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நம்பகமானவை என்பதி்ல் எதுவித சந்தேகங்களுமில்லை. இவை சரி்த்திர பூர்வமான ஆதாரக் குறிப்புகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் எரோது ராஜாவின் நாட்களில் நடைபெற்றதாக மத்தேயு அறியத்தருகிறார். (2:1) சீரிய நாட்டில் சிரேனியு என்பவன் தேசாதிபதியியாக இருந்த போது, முதலாம் குடிமதிப்பு எழுதப்பட்ட வேண்டுமென அகுஸ்துராயனால் கட்டளை பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே இயேசு பிறந்தாரென லூக்கா மற்றுமொரு சரித்திர பூர்வமான ஆதாரத்தைத் தருகிறார். (2:1-6) சரித்திராசிரியராகவும், வைத்தியராகவும் இருந்த லூக்கா தான் முழுநிச்சியமாய் நம்புகின்ற சங்கதிகளை ஆரம்பமுதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் தங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறி்த்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏவப்பட்டபடியினால் ஆதிமுதல் எல்லாவற்றையும் விசாரித்தறிந்து எழுதியுள்ளமை (1:1-4) அவருடைய நூல் நம்பகமான என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களை தந்தாலும் கூட, அவர்களுடைய குறிப்புகளில் ஒருசில் அம்சங்கள் சற்று தெளிவற்றது போல காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. னினும் அவை எவ்வகையிலேனும் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பொய்யாக்கிவிடவில்லை. இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மட்டுமே, .இதை காரணம் காட்டி கன்னிப்பிறப்பு நம்பக்கூடியதொன்றல்ல என வாதிடுகி்ன்றனர். எனவே தெளிவற்றதுபோல தென்படும் பகுதிகளை நாம் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை எதிர்ப்பவர்களுக்கு தகுந்த பதில்களைக் கொடுப்பது இலகுவானதாயிருக்கும். 

மரியாள் கன்னிப் பெண்ணாக இருக்கும்போதே பரிசுத்தவாயினால் கர்ப்பவதியானாள் (1:18-20) யோசேப்புடன் எவ்வித தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை (1:25) என நேரடியாக குறி்ப்பிட்டிருந்தபோதிலும் இருவருக்கும் இடையிலான உறவுமுறை முன்னுக்குப் பின் முரணான விதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் தென்படுகின்றது. 1:18 'யோசேப்பு மரியாளுக்குப் புருஷனாக நியமிக்கப்டப்டிருந்தவன்“ என அறியத் தருகையில், அடுத்தஅவனம் இதை மறுத்து, யோசேப்பு மரியாளின் புருஷன்“ (1:19) என கூறுவதோடு “மரியாள் யோசேப்பின் மனைவி“ என்றும் தெரிவி்ககின்றது. (1:20) மட்டுமல்ல. 1:19 இல் யேசேப்பு மரியாளை தள்ளிவிட (விவாகரத்து செய்ய) மனதாயிருந்தான் என்றும் காணக்கிறோம். மரியாள் கர்ப்பவதியாயிருக்கும்போது, அவளுக்கும் யோசேப்புக்கும் இடையிலிருந்த உறவுமுறை இரண்டுவிதமாக அதாவது, நிச்சயதார்த்தம் செய்து கொண்டவர்களாகவும், திருமணம் முடித்த கணவன்-மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரியாள் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாகத் தான் இருந்தாளா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாதுள்ளது என வாதிடுவோரும் நம்மத்தியில் உள்ளனர். இயேசு யோசேப்புக்கு பிறந்த பிள்ளையாயிருக்கலாம் எனும் சந்தேகத்தை இது தோற்றுவிப்பதாக உள்ளது. என்று அவர்கள் கருதுகின்றனர். 

மரியாளுக்கும் யோசேப்புக்கும் இடையிலான உறவுமுறை இரண்டுவிதமாக மத்தேயுவினால் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையேயானும் இதை வைத்துக் கொண்டு, இயேசு பிறக்கும்பரை மரியாள் கன்னிப் பெண்ணாயிருக்கவில்லை, இயேசு யோசேப்புக்குப் பிறந்த குமாரன் என வாதிட்டால், 18ம், 25ம் வசனங்களுக்கு எவ்விதான விளக்கங்களைக் கொடுக்க முடியும்? இவையிரண்டும் கனனிப்பிறப்பு உபதேசததை நேரடியாக போதிக்கின்றது. எனவே உறவுமுறை வித்தியாசமான முறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்க வேண்டும். பாலஸ்தீன கலாச்சாரத்தில் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த திருமண வைபவ சடங்காச்சார முறைகளே இதற்கான காரணம் என மறைந்த வேத வியாக்கியானி வில்லியம் பாக்ளே அறியத்தருகிறார். “அவர்களது திருமண வைபவம் மூன்று படிமுறைகளைக் கொண்டிருந்தது. தம் பிள்ளைகள் சிறுவர் சிறுமியராயிருக்கும்பேது திருமணப் பொருத்தம் பார்த்து, இன்னார்க்கு இன்னார் என முடிவு செய்வது பெற்றோரின் வழக்கமாயிருந்தது, உரிய காலம்வரும்போது நிச்சயதார்த்தத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்படும் இதன் பின் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்பட்டனர். கன்னிவிதவைகள் அக்காலத்தில் பலஸ்தீனாவில் இருக்க இதுவே காரணமாகும். நிச்சியதார்த்தமானது சட்டரீதியாக இருவரையும் இணைப்பதாயிருந்தமையினால், விவாகரத்தின் மூலமே இவ்விணைப்பை முறிக்கக் கூடியதாயிருந்தது. நிச்சியதார்த்தத்தை மேற்கொண்டவர்கள் ஒருவருடத்தின் பின்பே திருமணம் செய்து இல்லற வாழ்வை மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள்“ என தெரிவிக்கும் வில்லியம் பாக்ளே “மத்தேயு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் நிச்சியதார்த்தத்திற்குப் பின் நடைபெற்றவைகளாகும். இதனால்தான் மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டவளாகவும், அவனது மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாள். இதனாலேயே யோசேப்பு அவனது புருஷனாகவும், அவளை விவாகரத்து செய்ய சிந்தனையுள்ளனாகவும் இருந்தான் என மத்தேயு எழுதியுள்ளார்.” என கூறுகிறார். 

உண்மையில் நிச்சியதார்த்தத்தின் பின்பு மரியாள் கர்ப்பவதியாயிருப்பதை யோசேப்பு அறிந்திருப்பான். மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதல்ல என்பதனாலேயே அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (1:19) இச்சமயத்திலேயே, “மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்தாவியினால் உண்டானது“ என தேவதூதனால் அவனுக்கு அறிவிக்கப்பட்டது. (1:20) மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள். அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் யோசேப்பு அவளை அறியாதிருந்தான். (1:25) எனினும் அவர்கள் நிச்சியதார்த்தம் செய்துகொண்டிருந்தமையால், அக்கால கலாச்சாரத்தின்படி கணவன்-மனைவியாக இருவரும் சமுதாயத்தினால் கருதப்பட்டமையே உறவு முறைப்பற்றி இரண்டுவிதமாக மத்தேயு எழுத காரணம் என்பதில் சந்தேகமுமில்லை.

மத்தேயுவினுடைய குறிப்பில் இயேசு யோசேப்பின் குமாரன் இல்லை என்பதற்கான இன்னுமொரு ஆதாரத்தை அவர் குறிப்பிட்டுள்ள வம்ச வரலாற்று அட்டவணையில் நாம் காணலாம். 42 பரம்பரைகளைக் கொண்ட இவ்வட்டவணையில் “பெற்றான்“ எனும் பதம் ஒவ்வொரு பரம்பரைக்கும் அதாவது ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்பதை சுட்டிக்காட்ட உபயோகிக்ப்பட்டதை அவதானித்திடலாம். ஆனால் இயேசுவைப் பற்றி குறிப்பிடும்போது மட்டும் யோசேப்பு அவரைப் பெற்றான் என கூறவில்லை. மாறாக, “மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகின்ற இயேசு பிறந்தார். (1:16) என எழுதியுள்ளார். யோசேப்பு இயேசுவினுடைய தகப்பன் அல்ல என்பதை கூட்டிக் காட்டவே, இவ்விடத்தில் மட்டும் “பெற்றான்“ எனும் பதம் உபாயோகிக்கப்படவில்லை. மரியாளை இயேசுவின் தாயாக காட்டும் மத்தேயு யோசேப்பை அவருடைய தகப்பனாக காட்டவில்லை. பிறப்பைப் பொறுத்தவரையில் இயேசுவுக்கும் யோசேப்புக்குமிடையில் எவ்விதமான சம்பந்தமுமில்லை. தேவகுமாரனாகிய அவர் மரியாளின் குழந்தை, யோசேப்பின் பிள்ளையல்ல அவர், அவருடைய மாம்சமும், இரத்தமும் மரியாளிடமிருந்து பெறப்பட்டதுயன்றி, யேசேப்புக்கு இதில் எவ்விதமான பங்குமில்லை. ஏனெனில் அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்தவர்

கன்னிப் பிறப்பை பற்றிய மத்தேயுவினுடைய குறிப்பில் எவ்விதமான முரண்பாடும் எத்தகைய தெளிவின்மையும் இல்லை என்பதை அறிந்து கொண்டாலும் இதை லூக்காவின் குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டும் ஒருசில இடங்களில் வித்தியாசப்படுவது போல தென்படுவதை அவதானிக்கலாம். எனினும் இவை இரண்டிற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மத்தேயு எழுதாமல் விட்டதை லூக்கா எழுதியுள்ளாதே தவிர, மத்தேயு எழுதியற்றை முரண்படுத்தும் விதத்திலோ அல்லது பொய்யாக்கும் விதத்திலோ அவர் எதையும் எழுதவில்லை. இயேசுவினுடைய பிறப்பில் யோசேப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தேயு எழுதுகையில் லூக்கா, மரியாளுடைய வரலாற்றை எழுதியுள்ளார். இரண்டையும் ஒன்றாக்கும்போது முழுமையான சத்தியத்தை அறிந்துகொளள்க் கூடியதாய் உள்ளது.

(வளரும்) 
பகுதி 3 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment