(உ) அறியப்படாத தேவன்(அப்போஸ்தலர் 17:23)
இயேசுகிறிஸ்து சகல மதங்களிலும் இருக்கிறார் என்னும் உபதேசத்திற்கு ஆதாரமாகப் பவுல் அத்தானே பட்டணத்தில் “அறியப்படாத தேவனைப்“ பற்றி குறிப்பிட்ட விடயமும் சுட்டிக் காட்டப்படுகின்றது. அத்தேனே பட்டணத்து மக்களிடம் உரையாடிக்கொண்டிருந்த பவுல், அப்போஸ்தலர் 17:23 இல் “எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாததேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.“என்று குறிப்பிட்டுள்ளார். அத்தேனே பட்டணத்தார் வழிப்பட்ட அறியப்படாத தேவனே பவுல் அறிவித்து வந்த தெய்வம் என்பதே இவ்வசனத்தின் அர்த்தம் என்பது இன்று பொதுவாகக் கிறிஸதவர்கள் மத்தியில் இருக்கும் கருத்தாகும். ஏனெனில், “ நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்“ என்னும் வாக்கியம் இதை நேரடியாக அறியத் தருவது போலவே தென்படுகின்றது. இதனால் “பவுலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எம்மால் கிரேக்கர்களின் அறியப்படாத தேவனைப் பற்றி மட்டுமல்ல இந்து மதத்தில் மறைந்திருக்கும் கிறிஸ்துவைப் பற்றியும் பேசலாம்(66) என்பது தற்கால கிறிஸ்தவ இறையியலாளர்களின் தர்க்கமாகும். எனினும்., பவுல் குறிப்பிடும் அறியப்படாத தெய்வம் அவர் அறிவித்து வந்த தெய்வம் அல்ல. ஏனென்றால் அத்தேனே பட்டயத்தில் கண்டது இது போன்று அறியப்படாத தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பலிபீடங்கள் அக்காலத்தில் பல இடங்களில் இருந்துள்ளன. (68) அத்தோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலிபீடத்தைப் புதுப்பிக்கும்போதும், அது ஆரம்பத்தில் எத்தெய்வதற்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது என்பதை அறியமுடியாதபோது, அவையும் அறியப்படாத தெய்வங்களுக்கே அர்ப்பணிக்கப்பட்டன. (69). மேலும், கட்டிடங்களைக் கட்டும்போது பழைய கல்லறைகள் பாதிக்கப்பட்டால் மரித்தவரைச் சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் அவ்விடங்களிலும் இத்தகைய பலிபீடங்கள் கட்டப்பட்டன. (70) எனவே, அறியப்படாத தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பலிபீடங்கள் ஆரம்ப காலத்தில் புறஜாதியாருடைய தெய்வங்களுக்கான பலிபீடங்களாக அல்லது மரித்த மனிதர்களுடைய பலிபீடங்களாக இருந்துள்ளனவே தவிர, அவை பவுல் அறிவித்து வந்த தேவனுடைய வழிபாட்டிடங்களாக இருக்கவில்லை.
அத்தேனே பட்டணத்தில் இருந்த பலிபீடங்கள் உருவான வரலாறும்அறியப்படாத தேவனுக்கு அர்பணிக்கப்பட்ட பலிபீடம் கிறிஸ்தவர்கள் வழிபடும் தெய்வத்தின் பலிபீடம் அல்ல என்பதை அறியத்தருகிறது. கி.மு. 6 நூற்றாண்டில் அத்தேனே பட்டணத்தில் கொடிய கொள்ளை நோய் பரவியபோது, அவர்களால் அதைத் தடுக்க முடியாதிருந்தது. இதனால். கிரேத்தா தீவில் வாழ்ந்த “எப்பிமென்டிடஸ்“ என்னும் தீரக்கதரிசியிடம் தங்களுக்கு உதவி செய்யும்படி மக்கள் கேட்டபோது, கருப்பும் வெள்ளையுமான செம்மறி ஆடுகளை அத்தேனே பட்டணத்திலிருந்த மார்ஸ் மேடையிலிருந்து (71) அனுப்பும்படியும் அவைகள் எவ்விடங்களில் படுத்துக் கொள்கின்னறனவோ அவ்விடங்களில் அப்பிரதேசத்து தெய்வங்களுக்கு (72) பலியிடும்படியும் எப்பிமென்டிடஸ் அறிவித்தான். கொள்ளை நோய் பரவுவது நிறுத்தப்பட்ட பின், பலியிடப்பட்ட இடங்களில் ஞபகார்த்த பலிபீடங்கள் கட்டப்பட்டன. இவற்றில் எந்த ஒரு தெய்வத்தின் பெயரும் குறிப்பிட்டப்பட்டவில்லை. அப்பலீப்பீடங்களே பிற்காலத்தில் “அறியப்படாத தெய்வங்களுக்கு“ என்னும் பெயரைப் பெற்றன. (73) எனவே, பவுல் குறிப்பிடும் அறியப்படாத தேவனுக்கு அர்ப்பணிக்க்பபட்டிருந்த பலிபீடம் அவர் அறிவித்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த பலிபீடம் அல்ல. “டொன் ரிச்சர்சன்“ என்னும் கிறிஸ்தவ மிஷனரி, அத்தேனே பட்டண பலிபீட வரலாற்றைத் தவறாக விளங்கிக் கொண்டு, எப்பிமென்டிடஸ் என்பவன் மெய்யான தேவனுடைய தீரக்கதரிசி என்றும், அவன் அத்தேனே பட்டண மக்களுக்கு பிராயச்சித்த பலியைப் பற்றி போதித்தான் என்றும் தர்க்கித்து வந்தார். (74) இதனால் அத்தேனே பட்டண மக்கள் வழிபட்ட அறியப்படாத தேவன், பவுல் அறிவித்து வந்த மெய்யான தெய்வம் என்று பல கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், “அறியப்படாத தேவன், என்று ஒருமையில் ஒரு தெய்வத்தை மட்டும் குறிப்பிடும் விதத்தில் அக்காலத்தில் எந்த ஒரு இடத்திலும் பலிபீடம் இருந்தத்தற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இத்தகைய பலிபீடங்கள் அனைத்தும் பல தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவைகளாகவே இருந்தன. (75) இவை தனிப்பட்ட ரீதியாக எந்த ஒரு தெய்வத்திற்கும் அர்ப்பணித்துக் கட்டப்படவில்லை. ““இருக்கின்ற தெய்வங்களில் ஒன்றையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் தங்கள் வழிபாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே இத்தகைய பலிபீடங்கள் கட்டப்பட்டன. (76) பவுல் அத்தேனேயில் கண்ட பலிபீடமும் பல தெய்வங்களுக்கு அர்பணிக்கப்பட்டிருந்த ஒரு பலிபீடமே என்பதை மறுப்பதற்கில்லை. பவுல் ஒருமையில் “அறியப்படாத தேவன்“ என்று குறிப்பிட்டுள்ள போதிலும், அககாலத்தில் ஒவ்வொரு பலிபீடமும் அறியப்படாத பல தெய்வங்களுக்கே அர்பணிக்கப்பட்டிருந்தது(77) எனவே, பவுல் குறிப்பிடும் அறியப்படாத தேவனுக்கான பலிபீடத்தை அவர் அறிவிக்கும் தெய்வத்திற்கான பலிபீடமாக கருத முடியாது.
பவுலின் கூற்றானது சிலர் தர்க்கிப்பது போல “அத்தேனே பட்டணத்தார் தேவனை அறியாத போதிலும் அவரையே வழிபட்டு வந்தனர். (78) எனும் அர்த்தமுடையது அல்ல . “பிறமதங்களில் இருந்து கிறிஸ்தவத்திற்கு வருபவர்களின் வழிபாடு, ஒரு புதிய தெய்வத்திற்கான வழிபாடாயிராமல், அவர்கள் ஏற்கனவே அறியாமையில் பிழையான முறையில் ஆராதி்த்து வந்த தெய்வத்தை சரியான முறையில் வழிபாடுவது (79) என்னும் சிலரது கருத்திற்கும் பவுலின் கூற்று எவ்விதத்திலும் ஆதரவு தருவதாயில்லை. ஏனென்றால் அத்தேனியர்களின் அறியப்படாத தெய்வத்திற்கும் பவுல் அறிவித்த மெய்யான தேவனுக்கும் எந்தவித தொடர்புமில்லை. (80) மூலமொழியில் “நீங்கள் அறியாமல் வழிபடுகின்ற அவரையே“ என்னும் சொற்பிரயோகத்தில் “அவரையே“ என்று மொழிபெயர்க்கபட்டுள்ள பதம் “ஒன்றன்பால் பதமாகவே உள்ளது. எனவே “அவர்“ என்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. இலகு தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வாக்கியம் மூலமொழியில் உள்ள விதமாக “நீங்கள் அறியாமல் வழிபடுகின்ற இதையே நான் உங்களுக்கு பிரசித்தம் பண்ணுகிறேன்“ என்று உள்ளது. (81) அதாவது “அத்தேனியர்கள் “எதை“ வழிபட்டார்கள் என்று பவுல் கூறுகிறாரே தவிர “யாரை“ வழிபட்டார்கள் என்று கூறவில்லை. அவர்கள் மெய்யான தேவனை வழிபடவில்லை“(82) என்பதையே இச்சொற்பிரயோகம் கூட்டிக்காட்டுகின்றது.
மூலமொழியில் பவுலினுடைய கூற்றில் வழிபாட்டுக்கு அல்ல, மாறாக “அறியாமைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.“(83) அதாவது, அவர்களின் வழிபாடு அறியாமையின் வழிபாடு என்பதையே பவுல் சுட்டிக்காட்டுகின்றார். “அறியப்படாத தேவன்“ என்னும் சொற்பிரயோகம் அத்தேனியர்களின் அறியாமைக்கான அடையாளமாகவே இருந்தது. (84) அவர்கள் பல தெய்வங்களை வழிபட்டு வந்த போதும் மெய்யான தெய்வத்தை அறியாதவர்களாகவே இருந்தனர். (85) “தாம் வழிபடாமல் விட்டுவிட்ட வேறு தெய்வங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் தாம் வழிப்பட வேண்டும் இல்லையென்றால் அவற்றின் கோபத்திற்குப் பலியாகி விடுவோம் என்னும் பயத்துடன் வாழ்ந்து அத்தேனியர்கள், தாம் அறிந்திராத தெய்ங்களுக்கெல்லாம் பலிபீடங்கள் கட்டியிருந்தனர். (86) இத்தகைய மக்களுக்கு உண்மையான தெய்வத்தைப் பற்றி அறிவிப்பதற்காகப் பவுல், அவர்களது பலிபீடத்தைத் தனது பிரசங்கத்தை ஆரம்பிக்கும் ஒரு அறிமுக உரையாக உபயோகித்துள்ளார். இதற்காகவே பவுல் அறியப்படாத தேவனைப் பற்றி குறிப்பிட்டுள்ளாரே தவிர, அவர்களுடைய வழிபாடு தான் அறிவிக்கும் தெய்வத்தை மகிமைப்படுத்தும் வழிபாடு என்னும் அர்த்தத்தில் அவர் இவ்வாறு கூறவில்லை. அதாவது “அத்தேனே மக்கள் அநிந்திராத தேவனைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பதற்காக, அவர்கள் மத்தியில் இருந்த “அறியப்படாத தேவன்“ என்னும் வாசகத்தைப் பவுல் உபயோகித்துள்ளாரே தவிர, அவர்கள் அதுவரை காலமும் ஆராதித்துவந்த தெய்வத்தைப் பற்றி பவுல் அவர்களுக்கு அறிவிக்கவில்லை. (87) அத்தேனே பட்டணத்தார் உண்மையில்யே “பவுல் அறிவித்த மெய்யான தேவனையே வழிபட்டிருந்தால், மனந்திரும்பும்படி அவர் அவர்களுக்கு அறிவித்திருக்க மாட்டார் (அப். 17:30) . மெய்யான தேவனை வழிபடுவது மனந்திரும்ப வேண்டிய ஒரு பாவம் அல்ல என்பதனால், அத்தேனே பட்டணத்தார் மெய்யான தேவனை வழிபடவில்லை என்பதை எவ்விதத்திலும் மறுக்க முடியாதுள்ளது.
அறியப்படாத தேவன் பலிபீடத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, மெய்யான தேவனை வழிபடுகிறீர்கள் என்று பவுல் கூறவில்லை. மாறாக “நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளர்களென்று காண்கிறேன்“ என்றே குறிப்பிட்டுள்ளார். “தேவதாப பக்தி“ என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் “மார்க்கப்பற்று“ என்னும் அர்த்தமுடையது. இலகுதமிழ் மொழிபெயர்ப்பில் இச்சொற்பிரயோகம் “சமயபக்தி“ என்றும் திருவிவிலியத்தில் “சமயபக்தி“ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (89) உண்மையில் அத்தேனே பட்டணத்தார், மார்க்க விடயங்களில் ஆர்வமுடையவர்களாக இருந்தார்களே தவிர அவர்கள் உண்மையான தெய்வத்தை அறிந்தவர்களாக இருக்கவில்லை. அக்கால கிரேக்கத்தில் அத்தேனே பட்டணத்திலேயே அதிகமான விக்கிரக வழிபாட்டிடங்கள் இருந்தன. “கிட்டத்தட்ட 30,000 இற்கும் அதிகமான விக்கிரகங்கள் அத்தேனேயில் இருந்ததாக ஆராயசசியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (90)உண்மையில், “அத்தேனே பட்டணத்திலிருந்த அறியப்படாத தெய்வத்திற்கான பலிபீடம் அம்மக்களின் வி்ககிரக வழிபாடாகவே இருந்தது. (91) அவர்கள் உண்மையான தெய்வத்தைப் பற்றி அறியாதவர்களாக இருந்தமையால் பவுல் அவர்களுக்கு தேவனைப் பற்றி விளக்கிக் கூறினார். (அப். 24:31) உண்மையில், தேவனைப் பற்றிய பவுலின் பிரசங்கம் அத்தேனே பட்டணத்தார் உண்மையான தெய்வத்தை அறியாதவர்களாகவே இருந்து்ள்ளதையே காட்டுகிறது
(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)
Footnote and References
(63) Evangelical Alliance (UK) 'The Salvation of Gentiles : Implications for other Faiths; in Evangelical Review of Theology. p 39.
(64) இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே தேவனை வழிபடமுடியும் என்பதே வேதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். தேவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் ஒரேயொரு மத்தியஸ்தராக இயேசுகிறிஸ்வே இருக்கிறார். (1 தீமோ. 2:5) உண்மையில், இயேசுகிறிஸ்துவினுடைய சிலுவைப் பலியே மனிதர்கள் தேவனிடம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளமையினால் (எபே. 2:18, எபி. 10:19-22) இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே தேவனை வழிபட முடியும்.
(65) J. Baldwin, Malachi : Tyndale Old Testament Commentaries, p 230
(66) Raimundo Panikkar, The Unknown Christ of Hinduism, p 137
(67) Pausanias Description of Greece 1.1.4, 5.14.8, Quoted in William J. Larkin, Act : The New Testament Commentary, p 240-246
(68) Minucius Felix, Octavivus 6.2, Quoted in F.F.Bruce, Acts : The New International Commentary on the New Testament, p 335
(69) Ibid, p. 336
(70) R.E. Wycherley, 'St. Paul at Athens' in Journal of Theological Studies, pp. 619-621
(71) அத்தேனேயில் பவுல் இவ்விடத்திலிருந்தே பிரசங்கம் பண்ணினார்.
(72) ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தெய்வம் பொறுப்பாக இருப்பதாகவே அக்கால மக்கள் நமபினார்கள். இதனால்தான் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவனால் அற்புதமான முறையில் குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்த நாகமான் என்னும் சீரிய நாட்டு மனிதன், இஸ்ரவேல் நாட்டின் மண்ணில் இரண்டு பொதிகள் தரும்படி எலிசா தீர்க்கதரிசியிடம் கேட்டான் (2 ராஜா. 5:17) இஸ்ரவேல் நாட்டின் மண்ணைத் தன் நாட்டுக்குக் கொண்டுபோனால் இஸ்ரவேல் மககளின் தேவனைத் தன்னுடைய நாட்டிலும் வழிபடலாம் என்று அவன் எண்ணியதே இஸ்ரவேல் நாட்டின் மண்ணைக் கேட்டதற்கான காரணமாகும். (H.F. Vos, 1,2 Kings : Bible Commentary, p. 152; T.L. Constable, 2 Kings : the Bible Knowledge Commentary, p 548)
(73) D. Laertes, Lives of the Philosophers 1.110, Quoted in W. J. Larkin, Acts : The IVP New Testament Commentary, p 255.
(74) D. Richardson, Eternity in their Hearts, Ventura : Regal Books, 1984
(75) C.J.Hemer 'The Speeches of Acts, Part 2: The Areopagus Speech' in Tyndale Bulletin, pp. 239-259
(76) A.D. Clarke & B.W. Winter, One, God, one Lord in a World of Religious Pluralism, p. 138.
(77) Jerome, Commentary on Titus 1: 12 Quoted in F.F. Bruce, Acts: The New Testament Commentary on the New Testament, p. 335
(78) E. Haenchen, The Acts of the Apostles, p. 521
(79) J.R. W. Stott, The Message of Acts, 285
(80) I.H. Marshall, Acts in Tyndale New Testament Commentaries, p. 286
(81) ஆங்கில வேதாகமத்திலும் பவுலின் கூற்று இவ்விதமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
(82) J.B. Polhill, Acts : The New American Commentary, p 372.
(83) N.B. Stonehouse, Paul before the Areopagus and Other New Testament Studies, p. 19.
(84) A. Fernando, The Christian’s Attitude Toward World Religion, p. 41
(85) S.D. Toussaint, Act: The Bible Knowledge Commentary, p. 403.
(86) E.M.Blaiklock, Acts: An Introduction and Commentary, p. 140
(87) J.B. Polhil, Acts: The New American Commentary, p. 371
(88) W.J. Larkin, Act: The IVP Testament Commentaries, p. 256
(89) ராஜரீகம் என்பாரது புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பில் “நீங்கள் மதாச்சாரத்தைக் கடைபிடிப்பதில் சிறிதளவு தவறாதவர்கள்“ என்று இவ்வாக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளது.
(90) A.D. Clarke & B.W. Winter, One, God, one Lord in a World of Religious Pluralism, p. 138.
(91) Tertullian, adv. Marc 1.9 Quoted in E. Haenchen, The Act of the Apostles, p. 521
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment