- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday, 23 March 2014

வேதமும் விளக்கமும் -பிரசங்கி புத்தகம் எல்லாம் மாயை எனும் விரக்தி மனப்பான்மையில் எழுதப்படட்டுள்ளமைக்கான காரணம் என்ன?

பிரசங்கி புத்தகம் எல்லாம் மாயை எனும் விரக்தி மனப்பான்மையில் எழுதப்படட்டுள்ளமைக்கான காரணம் என்ன? (ஆர் தேவபாலன், யாழ்ப்பாணம்)
 
பிரசங்கியின் புத்தகம் மானிட வாழ்வை இரு கோணங்களில் அவதானித்துப் பார்த்து, இரு முக்கிய விடயங்களை நமக்குஅறியத் தருகின்றது. இப்புத்தகத்தை முழுமையாக வாசிக்கும்போது பிரசங்கி கூறும் இரண்டுவிதமான அறிவுறுத்தல்களையும் நாம் அறிந்திடலாம். ஒன்று சூரியனுக்கு கீழான இவ்வுலக வாழ்வு இது மாயையானது என பிரசங்கி கூறுகின்றது. மற்றது தேவனுடனான இவ்வுலக வாழ்வு இது மகிழ்ச்சிகரமானது என பிரசங்கி அறியத்தருகின்றது. எல்லாம் மாயை எனும் பிரசங்கியின் கூற்றை நாம் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. புத்தகத்தின் பல இடங்களில் மாயை எனும் வார்த்தை சூரியனுக்குக் கீழே எனும் சொற்பிரயோகத்துடன் சோர்ந்து வருவதை நாம் அவதானிக்கலாம். உண்மையில் சூரியனுக்குக் கீழே எனும் சொற்பதம் மானிட வாழ்வை மானிட கோணத்திலிருந்து அவதானித்து அறிவிப்பதையே குறிக்கின்றது. இது தேவனை அறியாத ஒரு மனிதனுடைய உலக நோக்கு எப்படிப்பட்டது காண்பிக்கின்றது. தேவனை அறியாத இவ்வுலகத்தினால் மட்டுப்படுத்தப்பட்டமானிட வாழ்வு மாயையானது என்றே பிரசங்கி கூறுகின்றார். எனினும் மறுபுறத்தில் பிரசங்கி தேவனை அறிந்த ஒரு மனிதனுடைய வாழ்வு எப்படிப்பட்டது என்றும் அறியத் தருகின்றார். மனித வாழ்வில் தேவன்  இருக்கும்போது அது மகிழ்ச்சிகரமானதாக இருப்பதனால், வாழ்வை அனுபவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்
 
தேவனுக்குப் பயந்து அவருடைய கற்பனையின்படி வாழ்வதே மகிழ்ச்சியின் இரகசியம் என்பதனாலேயே, வாலிப காலத்திலேயே சிருஷ்டிகரை நினைக்கும்படியும் அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழும்படியும் கட்டளையிட்டுள்ளார். எனவே, அப்புத்தகம் எல்லாம் மாயை என்றுமட்டும் கூறவில்லை. தேவனற்ற வாழ்வை மாயையானது என்று கூறும் பிரசங்கி, இவ்வுலக வாழ்வைத் தேவனோடு அனுபவிக்கும்படி அறிவுறுத்துகிறார். உண்மையில் பிரசங்கி என்பததற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள“கொஹெலெத்” எனும் பதம் உத்தியோகபூர்வமாக சபையைக் கூட்டி ஒரு கலந்துரையாடலைக ஆரம்பிப்பவனைக் குறிக்கும். இவன் ஒரு விடயத்தை சபைக்கு அறிமுகப்படுத்தி அதைப் பல்வேறு கோணங்களிலும் விமர்சித்து நடைமுறை ரீதியான ஒரு முடிவிற்கு வருவான். பிரசங்கி புத்தக ஆசிரியரும் இதேவிதமாக சூரியனுக்கு கீழான மானிடவாழ்வை இரு கோணங்களில் ஆராய்ந்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இவ்வுலகில் தேவனற்ற வாழ்வு மாயையானது தேவனுடனான வாழ்வு மகழ்ச்சிகரமானதுஎன்பதே பிரசங்கியின் முடிவாகும். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment