- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday, 21 September 2012

நோவாவின் சாபம் (2)


நோவாவின் சாபம் (2) பகுதி 1 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்

காமினுடைய தவறுக்கு அவனது மகன் கானான் சபிக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்களை வேதவியாக்கியானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். “காம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தமையால்(ஆதி 9:1) நோவாவினால் அவனை சபிக்க முடியவில்லை'.(08) என பலர் கருகின்றனர். இக்கருத்திற்கு ஆதாரமாக பிலேயாமின் சரிதை உள்ளது. இஸ்ரவேல் மக்கள் தேவனினால் ஆசீர்வதிக்கபட்டிருந்தமையால் அவர்களைச் சபிப்பதற்குச் சென்ற பிலேயாமால் அவர்களைச் சபிக்க முடியாமல் போய்விட்டது. இது உண்மையாயினும் தேவன் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராய் இருப்பதனால் (யாத். 20:5) காமினுடைய தவறுக்காக அவனது மகன் சபிக்கப்பட்டுள்ளான். (09) என்பதையும் மறுப்பதற்கில்லை. அதே சமயம் “காமின் தன்மைகளையே நோவா அவனது குமாரன் கானானிலும் கண்டமையும் கானான் சபிக்கப்பட்டதற்கான காரணமாய் உள்ளது. (04) எனினும் நோவாவின் சாபத்தை தனிப்பட்ட மனிதன் மீதான சாபமாக மட்டும் கருத முடியாது. ஏனென்றால் “நோவாவின் வார்த்தைகள் தீரக்கதரிசன முன்னறிப்பாகவே உள்ளன. (10) உண்மையில் “கானான் செய்யாத குற்றத்திற்காக அவன் சபிக்கப்பட்டதைப் பற்றியல்ல மாறாக கானானின் சந்த்தியினரது எதிர்கால முன்னறிவிப்பாகவே கானானின் மீதான சாபம் சொல்லப்பட்டுள்ளது. (11). ஏனென்றால் நோவாவின் சாபம் அதாவது கானான் தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாய் இருப்பான் எனும் சாபம் (ஆதி. 9.25) கானானின் வாழ்வில் அல்ல மாறாக அவன் வம்சத்திலேயே நிறைவேறியுள்ளது பாலஸ்தீனாப் பகுதியில் குடியிருந்த பல்வேறு வகையான ஜாதியினரும் கானானின் வம்சத்தினராவார். (ஆதி 10:15-20) இவர்கள் சேமினதும் யாப்பேத்தினதும் வம்சத்தினருக்கு அடிமைகளாயிருந்துள்ளதைப் பிற்கால சரித்திரம் அறியத் தருகின்றது. எகிப்தியரும் மொசப்பத்தேமியரும் கானானியரை அடிமைப்படுத்தி யிருந்தனர். இஸ்ரவேலர்கள் கானானை ஆக்கிரமிப்பதற்கு முன்பு கானான் எகிப்துக்கு அடிமையாய் இருந்தது(04) ஆதி. 9:26 இல் சேமை ஆசீர்வதிக்கும் நோவா கானான் அவனுக்கு அடிமையாய் இருப்பான் என்று கூறினான். சேமின் வம்சத்தினரான இஸ்ரவேலர்கள் யோசுவாவின் தலைமையில்  கானானை ஆக்கிரமித்தபோது நோவா முன்னறிவித்த இவ்விடயம் நிறைவேறியது. (யோசுவா 9:23, 16:10) இஸ்ரவேல் மக்களது பிற்கால சரித்திரங்களிலும் இதனை நாம் அவதானிக்கலாம். (1 இரா 9:21) ஆதியாகமப் புத்தகத்தில் ஒரு வம்சத்தின் தகப்பன் அவ்வம்சத்தைப் பிரதிநிதிப்படுத்துபவனாக இருக்கிறான். உதாரணமாக ஏசா யாக்கோபு என்போரது சரிதை அவர்களது வம்சத்தினரான ஏதோமியர் இஸ்ரவேலர் என்போரது பிற்கால நிலைகளுக்கான முன்விபரணமாக உள்ளது. நோவாவின் ஆசீர்வாதங்களும் சாபங்களும் அவனுடைய பிள்ளைகளின் வம்சத்தினர் மீதான ஆசீர்வாதமாகவும் சாபமுமாகவே உள்ளன. எனவே, “கானானின் மீதான நோவாவின் சாபம் கானானிய வம்சத்தினர் மீதான சாபமாகவே உள்ளது(10)

கானானின் வம்சத்தினரே பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு கானான் மீது கடுமையான சாபம் கொடுக்கப்படுவதற்கு அவனது தகப்பனுக்கு காம் செய்த பாவத்தின் தன்மை பற்றி வேதவியாக்கியானிகள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. குடிவெறியில் நோவா நிர்வாணமாய் படுத்திருந்த்தைக் கண்டு அதைத் தன் சகோதர்ருக்கு அறிவித்தமைக்காக காமின் மகன் கானானின் வம்சத்தினர் அடிமைகளாக இருக்கும்படி சபிக்கப்பட்டது நியாயமற்றது என்று எண்ணுபவர்கள் காமின் பாவம் நிர்வாணமாயிருந்த தகப்பனை மட்டும் பார்த்த்தாக கூற முடியாது எனக் கூறுகின்றனர். “இவர்கள் 22ம் வசனத்திலுள்ள தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு எனும் சொற்பிரயோகத்தை பாரிய குற்றச் செயலை வர்ணிக்கும் உருவகவிபரணமாகவே கருதுகின்றனர் (12) 

யூதமதப் போதகர்கள் நோவாவிற்கு சேம், காம், யாபேத் என்னும் மூன்று பிள்ளைகள் மட்டுமே இருந்ததை அடிப்படையாகக் கொண்டு “தன் தகப்பனுக்கு வேறு பிள்ளைகள் பிறக்கக்கூடாது என்பதற்காக காம் நோவாவிற்கு விதையடிப்பு செய்தாக செய்த்தாக கருதினர்(13) எனினும் ஆதியாகமப் புத்தகத்தில் காமின் இவ்வித செயல்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இன்று பெரும்பாலான வேத வியாக்கியானிகள் காமின் செயலை பாலியல் பாவமாகவே கருதுகிறார்கள். “ஆதியாகம்ம் 9:22 இல் உள்ள “காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு“ எனும் சொற்பிரயோகம் ஆரம்பத்தில் தகப்பனை நிர்வாணமாக்குதல் என்றே இருந்தது. “ஆதியாகமப் புத்தகத்தை பிற்காலத்தில் தொகுத்தவர் நிர்வாணமாக்குதல் என்னும் எபிரேய மரபுத் தொடரின் அர்த்த்த்தை அறியாதவராக அதைச் சொல்லர்த்தமாக “நிர்வாணத்தைக் கண்டு' என மாற்றியுள்ளார். என தர்க்கிப்பதோடு “நிர்வாணமாக்குதல்“ என்னும் பதம் எபிரேய மொழி வழக்கில் பாலுறவைக் குறிப்பதனால் (லேவி. 18:20) காமின் பாவம் பாலியலோடு சம்பந்தப்பட்டுள்ளது(04) என விளக்குகின்றனர். இவர்களில் சிலர் கானான் தன் தகப்பனுடன் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டான்(130 எனக் கூறுகையில் ஏனையவர்கள் “காம் நோவாவின் மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டான்“ அதன் விளைவாகப் பிறந்த கானானையே நோவா சபிக்கின்றான்(14) என்றும் தர்க்கிக்கின்றனர் எனினும் இத்தகைய பாலியல் விளக்கங்களுக்கு வேதாகமத்தில் எத்தகைய ஆதாரங்களும் இல்லை. “ஆதி. 9:21 'வஸ்திரம் விலக்கிப் படுத்திருந்தான்“ எனும் வாக்கியத்தை மூலமொழியின் இலக்கணமுறைபடி மொழிபெயர்த்தால் நோவா தன் உடையை தானே விலக்கிப் விட்டுப் படுத்திருந்ததை அறிந்திடலாம்(09) அதேசமயம் 22ம் வசனத்தில் காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சில வேதவியாக்கியானிகள் பாலுறவு விளக்கத்திற்கு ஆதாரமாக காம் தன் தகப்பனை நிர்வாணமாக்கினான் என கருதுகின்றனர். காம் தன் தகப்பனை நிர்வாணமாக்கினான் என அவ்வசனம் கூறவில்லை எனவே காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைப் பார்த்தைத் தவிர வேறு எதுவும் செய்தமைக்கு அவ்வசனத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை(12) அதேசமயம் 22ம் வசனத்தில் சொல்லர்த்தமாய் எழுதுப்பட்டுள்ள விடயத்தை அதாவது நிர்வாணத்தை கண்டு என்பதைக் கண்களினால் பார்த்தான்“ எனும் சாதாரண மொழியியல் அர்த்தத்தின் அடிப்படையில் விளக்காமல் அதை ஒரு உருவக விவரணமாக மாற்றி பாலுறவு என விளக்க முடியாது. உண்மையில் காமினுடைய பாவம் முறைகேடான பாலுறவாய் இருந்திருந்தால் அதை அவன் தன் சகோதரருக்கு மறைத்திருப்பானே தவிர 22ம் வசனம் அறியத் தருவதுபோன்று அவன் அதை தன் சகோதரரிடத்தில் சொல்லியிருக்க மாட்டான். எனவே காமின் பாவத்தை பாலுறவுடன் தொடர்புபடுத்துவதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

காமின் தவறு அவன் தன் தகப்பனை நிர்வாணமாய் பார்த்த்து மட்டுமே என்றால் அதற்காக நோவா கடுமையான முறையில் அவனது மகன் கானைனைச் சபித்தது எவ்வகையில் நியாயமானதாக இருக்கும் என நாம் கேட்கலாம். ஆதி 9.22 “கண்டு“ என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் “உற்றுநோக்குதல் அல்லது கூர்ந்து பார்த்தல் என்னும் அர்த்தம் உடையது.(15) இது மனமகிழ்வுடன் திருப்தியுடன் பார்ப்பதாகும்.(16) எனவே, காம் தன் தகப்பனை நிர்வாணக்கோலத்தில் பார்ப்பதில் இன்புற்றுள்ளான். அதேசமயம் தகப்பனை நிர்வாணமாய் பார்த்த காம் தகப்பனை பரிச்சிப்பவனாகவும் இருந்தான் (11) “காம் தன் தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும் மதிப்பையும் கொடுக்காமல் (09) தகப்பனை இழிவுபடுத்துவதற்காக தான் கண்டதைப் பற்றி தன் சகோதரரிடம் சொன்னான். இவ்வசனத்தில் அறிவித்தான் என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் “சந்தோஷத்தோடு அறிவித்தான்“ எனும் அர்த்தமுடையது. (15) “நீதியைப் பிரசங்கித்தவன் நிர்வாணமாய் கிடக்கின்றானே“ என காம் நோவாவை பரிகசித்தான்(17) தன் தகப்பனைப் பற்றி காம் சொல்லியவற்றைக் கேட்ட அவனது இரு சகோதரர்களும் செய்வற்றை காமின் செயலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது காம் தன் தகப்பனை இழிவுபடுத்துபனாகவும் நிந்திப்பனாகவும் இருப்பதை அறிந்திடலாம். காமைப் போல் அவன் சகோதர்கள் சந்தோஷப்படவில்லை. அவர்கள் உடனடியாக ஒரு ஆடையால் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள். 23ம் வசனத்திலுள்ள அவர்களது செயல்முறை அவர்கள் தகப்பனை நிர்வாணக்கோலத்தில் விரும்பவில்லை என்பதை அறியத் தருகின்றது. உண்மையில் அவர்கள் தம் தகப்பனை கனப்படுத்தியபோல காம் தன் தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை கொடுக்கவில்லை. பெற்றோரை கனப்படுத்த வேண்டியது பிள்ளைகளின் கடமையாக உள்ளது. பத்து கற்பனைகளில் பெற்றோரைக் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்த்த்தமுள்ள ஒரே கற்பனையாகவும் (எபே. 6:2-6) தேவனுடனான உறவு பற்றிய அறிவுத்தல்களுக்கு அடுத்துள்ள கட்டளையாகவும் உள்ளது. (யாத். 20.12) பெற்றோரை அடிப்பவனுக்கும் சபிக்கின்றவனுக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதே தேவன் வகுத்த சட்டமாகவும் இருந்தது. (யாத். 21.15,17) இதனால் காம் தன் தகப்பனின் நிர்வாணத்தைக் கண்டு மகழிந்த்தோடு தகப்பனைப் பரிகசிக்கும் நோக்குடன் அவனது நிலையத் தன் சகோதருக்கு அறிவித்தமை கடுமையான ஒரு குற்றமாகவே உள்ளது. இதனாலேயே நோவாவின் சாபமும் கடுமையாக உள்ளது.

References
(01) A Guide to Genesis by John Hargreaves
(02) The Message of Genesis 1-11 by David Atkinson
(03) The Genesis Record by Henry M. Morris
(04) Genesis Vol 1 The Bible Students Commentary by G.Ch Aalders
(05) Legends of Genesis by Herman Gunkel
(06) Cited in Aalders Genesis Commentary
(07) Cited in Victor Hamilton’s Genesis Commentary
(08) More Hard Saying fo the Old Tetament by Walter C. Kaiser
(09) Genesis : An the Expositional Commentary Vol 1 by James M. Boice
(10) Genesis in the Expositors Bible Commentary
(11) Genesis in Bible Knowledge Commentary
(12) The Curse of Cain (An Article) by Allen P. Ross
(13) Cited by Boice’s Genesis Commentary 

இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய ஆதியாகமம் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment