- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday, 13 January 2011

வேதாகம கால மக்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள்


நூல் : வேதாகமப் பிண்ணனி
கட்டுரையாசிரியர் : கலேப் ஸ்ரீ கர்ணகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி


இன்றைய உலகில் வாழும் வெவ்வேறுபட்ட மக்களிடையே வெவ்வேறு கலாசாரங்கள் நிலவுவதை காணக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு ஜாதியினரும் குறிக்கப்பட்ட சமுதாய, கலாசார அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கைப் பின்னணி உடையவர்களாயுள்ளனர். அதேபோல் வேதாகம பூமியில் வாழ்ந்தவர்களிடையேயும் இவ்வாறான கலாசாரங்கள் நிலவியது. குறிப்பாக இஸ்ரவேல் மக்களிடையே வேறுபட்ட கலாசாரங்கள் காணப்பட்டன. வேதாகம பூமியில் வாழ்ந்த மக்களுடைய கலாசாரம், பழக்கவழக்கம் என்பவற்றை கற்பது எமக்கு வேதாகமத்தை விளங்கிக் கொள்ள உதவியாயிருக்கும். இக்கட்டுரையில் இஸ்ரவேல் மக்களுக்கிடையே காணப்பட்ட கலாசார பின்னணிகளை வேதாகம ஆதாரங்களுடன் நோக்குவோம். 

வேதாகம பூமியில் வாழ்ந்த மக்கள் ஆதியில் கூடாரவாசிகளாகக் காணப்பட்டனர். (ஆதி 4:20) தங்கள் மனைவி பிள்ளைகளுடன் கூடாரங்களிலேயே தங்கியிருப்பார்கள். பிரயாணத்தின்போதும் இடம் விட்டு இடம் மாறும்போதும் ஆங்காங்கே கூடாரம் போட்டுக் கொள்வது வழக்கம் (எண் 24:2, 2 சாமு 11:11) கட்டப்பட்ட வீடுகளிலும் குடியிருந்தார்கள். சில வீடுகள் ஒரு அறை கொண்டதாகவும் (1 இராஜா 17:18-19) சில ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் உள்ள வீடாகவும் காணப்பட்டது. (2 சாமு. 17:18, 19). வீட்டின் கூரை மெத்தையாகவும் சுற்றி சுவர் கைப்பிடி உள்ளதாகவும் காணப்பட்டது. (உபா 22: அறையில் யன்னல்களும் காணப்பட்டன. (ஏசா 9:10) இருட்டில் வெளிச்சத்திற்கு விளக்கு பயன்படுத்தினர். (மத் 5:15, ஏசா 42:3)

அவர்கள் அன்றாட உணவில் அப்பம் அதிகமாக காணப்பட்டது. (ஏசா 4:15-17) உணவை சமைப்பதற்கு மாட்டுச்சாணி வறட்டி (எசே. 4:15), காட்டுப்புல் (லூக் 12:28) முள்(பிர 7:6) நெருஞ்சில் (ஏசா 9:18) போன்றவை எரிப்பதற்கும் உபயோகிக்கப்பட்டன. மரத்தினால் வீட்டின் கூரையை செய்து (1 சாமு 9:26) மேலே சணல் தட்டைகளைப் பரப்பி கூரையின் கரையில் வைப்பார்கள். (மத் 24:17) வீட்டின் மேல் ஏறி இறக்கக் கூடியதாகவும், உள்ளே இறங்கக் கூடியதாகவும் நடுவில் வழியும் இருந்தது (மாற் 2:4)

இவர்களுடைய சாதாரண நாளாந்த உணவு அப்பம். அதோடு ஒலிவம் எண்ணெய், மந்தையில் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், பால்கட்டி (2 சாமு 17:28,29) மரக்கறி, இறைச்சி வகை போன்றவையும் காணப்பட்டன. (லேவி 23:14, 2 இராஜா 4:42) அடை ( 1 இராஜா 19:6) கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, திணை, கம்பு (எசே. 4:9) தேன் (2 சாமு 17:28) இன்னும் சில தானியங்களும் காணப்பட்டன. (ஆதி 25:33,34, நாகூம் 11:5, ஏசா 1:8, யோவா 4:6-10, 2 இராஜா 4:39, தானி 1:18, நியா 4:19, 5:25) குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டப்பட்டன. (ஏசா. 28:9) பசும்பால் மட்டுமல்ல ஆட்டுப்பாலையும் பயன்படுத்தினர். (உபா 32:14)


அந்நிய விருந்தினர் வந்திருக்கும் வேளைகளிலும், விசேஷ கொண்டாட்ட வேளைகளிலும் இறைச்சி பரிமாறப்படும். இவை கூடுலாக ராஜாக்கள் ஐஸ்வரியவான்கள் மத்தியிலேயே காணப்பட்டது. (1 இராஜா 4:23, நியா 6:19) மேலும் முட்டை (லூக் 11:12) தேன் (உன்4:11) ஒலிவப்பழம்(1 இராஜா 17:16) அத்திப்பழம் (1 இராஜா 12:40) திராட்சைப்பழம் (எண். 13:23) அவர்கள் உணவில் இருந்தது.

போஜனத்தை உட்கொள்வதற்கு முன் கைகளை கழுவும் பழக்கமுடையவர்கள் ( 2 இராஜா 3:11, மாற் 15:1,2), சாதாரண வீடுகளில் கீழே இருந்து கால்களை மடக்கி வட்டமாக இருந்து சாப்பிடுவார்கள்.வசதி படைத்தவர்களின் வீட்டில் மேசை, கதிரை, தட்டுகள் (மத். 26:13) போன்றன பயன்படுத்துவார்கள். சாப்பாட்டு வேளைகளில் தேவனைத் துதிப்பார்கள். (1 சாமு 9:13) தனிமையாக சாப்பிட விரும்புவதில்லை (யோபு 31:17) விருந்தாளிகள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என (தே¤ 18:2-7) சிநேகிதர், அந்நியர் எதிரிகைளைக்கூட (எபி. 13:2, ரோம 13:13) விருந்தாளிகளாகக் கருதுவர்.


விருந்தாளி வீட்டினுள் வரும்போது வணக்கம் தெரிவித்து (ஆதி 23:7,12) வாழ்த்துவார்கள். (லூக். 10:5,6). முத்தமிடுவார்கள் (லூக் 7:45) பாதரட்சைகளை கழற்றி (யாத் 3:3) பாதங்களை கழுவுவார்கள். (1 தீமோ. 5:10) தலையில் எண்ணெய் பூசுவார்கள் (லூக். 7:46) போகும்போது சமாதானத்துடன் அனுப்புவார்கள். அக்காலத்தவர்களுடைய தினசரி ஜீவியமானது : அதிகாலையில் நேரத்துடன் எழுந்து கொள்வார்கள். (ஆதி 22:3, யாத். 34:4, லூக். 21:38), காலை உணவு, இரவு உணவு என இரண்டுமுறை உணவு நேரம் உண்டு. காலையிலிருந்து மத்தியநேரம் வரை காலை உணவு உண்பார்கள். (லூக். 14:12)

ஆடைகள் அணிவதிலும் தயாரிப்பதிலும் முக்கிய இடத்தை கொடுத்திருந்தார்கள். (நீதி 31:19) உள்ளாடைகளையும் வெளியாடைகளையும் அணிவார்கள். (உன். 5:3) தங்கள் தலைகளிலும் ஆடை அணிவார்கள். (உன் 5:11). புதிய ஏற்பாட்டு காலத்திலேயே அதிகமானோர் சப்பாத்து அணியத் தொடங்கினர். (முன்னர் அதிகமானோர் பாதரட்சைகளை அணிந்தனர் (ஆமோ. 2:6, அப். 12: ஆண்கள் பெண்களிடையே ஆடையில் வித்தியாசமிருந்தன. (உபா. 22:5, 1 சாமு 1:12) சமய ரீதியில் விசேஷித்தவர்கள், பரிசேயர் போன்றோர் விசேஷித்த ஆடை அணிந்திருந்தனர். (மத் 23:5)
.
அக்காலத்தவர்களுடைய வீட்டு காரியங்களை நோக்குமிடத்து, தகப்பனே வீட்டின் தலைவனாக இருப்பான் (ஆதி 4:20-21, 45:மிகவும் பெரிதான குடும்பம் மிக நெருங்கிய உறவினர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். சகல அதிகாரமும் குடும்பத் தலைவனுக்கே உண்டு.(ஆதி 14:14). இவர்கள் கைக்கொண்டுவந்த கடவுளின் கற்பனைகளில் ஒன்று “பெற்றோரை கனம்பண்ண வேண்டும்’ (யாத். 20:12) என்பதே. பிள்ளைகள் வளரும்வரை பெற்றோருக்கு முதலிடம் கொடுத்து (1 இராஜா 2:19) கீழ்படிந்திருப்பார்கள். (உபா. 21:18-21) தாய் பிள்ளைகளுக்கு நற்காரியங்களை போதிப்பாள். (நீதி. 31:11,26-28) .


புதிய குழந்தைகள் கிடைப்பதைக் குறித்து மிகவும் மகிழச்சியடைவார்கள். (ஆதி. 30:1, 13:16), ஆண்குழந்தை பிறப்பதையே அதிகம் விரும்புவார்கள். (எண். 24:17, ஆதி. 49:10), குழந்தைகளை மிக கரிசனையுடன் கவனிப்பார்கள். (எசே. 16:4, லூக் 2:12), யூத பிள்ளைகள் பிறந்து 8 நாளில் விருத்தசேதனம் செய்யப்படும். (அதி 17:10, லூக் 2:21). குழந்தை பிறந்தபின் தயார் ஆண்பிள்ளையானால் 7 நாள்களும் பெண் பிள்ளைகளானால் 14 நாள்களும் சுத்திகரிப்பின் நாட்களாகக் கழித்து, ஆணுக்கு 33 நாட்கள் பெண்ணுக்கு 60 நாட்கள் பின்னர் ஆலயத்திற்கு சென்று காணிக்கை செலுத்துவார்கள். (லூக் 2:21, லேவி. 12)


பிள்ளைகளுக்கு பெயரிடும்போது தேவனைக்குறித்த அர்த்தத்துடனான பெயர்களை வைப்பார்கள். உ-ம் ஒபதியா ஜெகோவாவின் வேலைக்காரன் (Servant of Jehovah) எலியா - ஜெகோவா என் தேவன் (My God is Jehovah) எசேக்கியேல் - தேவன் பலப்படுத்துவார் (God will Strengthen) மேலும் தகப்பனுடைய பெயரையும் சேர்த்து வைப்பதும் உண்டு. (மத். 16:17) சிலவேளைகளில் ஒன்றுக்கு அதிகமான பெயர்களும் இருக்கும். (யோவா. 11:16)

பெண்களுக்கு இயற்கையாக காணப்படும் அழகான பொருட்களின் அர்த்தம் கொள்ளும் பெயர்களை வைப்பார்கள். (உ-ம் தபித்தா –மான் (Gozelle) ராகேல் - செம்மறியாட்டுக்குட்டி (Lambs) சலோமி - சமாதானம் (Peace), எஸ்தர் – நட்சத்திரம் (Star), தொபோரா - தேனி (bee)

கல்வி முறையை பொறுத்தவரை ஆதியிலேயே கற்பித்தல் நடைபெற்று வந்தன. (ஆதி 6:30, அப். 7:22) இளைஞர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு கற்றுக் கொண்டனர். (யாத். 12:26), தீரக்கதரிசிகள் ஒன்றாக இருந்து போதிக்கப்பட்டார்கள். (1 ராஜா 20:35, 2 ராஜா 2:1-3, 5)

ஜெபஆலயங்கள் கல்விமுறையில் முக்கிய இடத்தை வகித்தன. யூத பிள்ளைகள் 6 வயதில் ஜெப ஆலயப் பாடசாலைக்கு அனுப்பப்படுவார்கள். ஆரம்ப கல்விகள் கற்பிக்கப்படும். வேதாகமத்தின் முதல் 5 சட்ட நூல்களும் பின்னர் தீர்க்கதரிசன நூல்களும் இறுதியில் எழுத்தாக்கங்களும் கொண்ட (தல்மூட்) வேதவார்த்தைகள் 10 தொடக்கம் 15 வயதினருக்கு கற்பிக்கப்படும்


அப். பவுலின் காலத்தில் எருசலேமில் ஹிலெல் (Hilllel) என்ற பாடசாலையும் சமாரியா பாடசாலையும் (அப். 22:3) இருந்தன. அதேவேளை சில இடங்களில் ஒழுக்கம்போதிக்கும் தன்மையும் இருந்தது. (மாற். 15:3,6) வித்தியாசாலைகளும் காணப்பட்டன. (அப். 19:9)

வேதாகம காலத்தில் வாழ்ந்தவர்களுடைய திருமணத்தை கவனிக்கும்போது, கடவுள் அவர்களுக்கு கொடுத்த கட்டளை ஒருமனைவிக்கு மேல் இருக்கக்கூடாது என்பதே. (உபா 17:17). ஆயினும் அநேகர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை உடையவர்களாயிருந்தனர். (1 சாமு 1:1-6). ஆனால் முதற்பிதாக்களாகிய ஆதாம், நோவா, ஈசாக்கு, யோசேப்பு, மோசே, யோபு போன்றவர்கள் ஒரு மனைவியை உடையவர்கள் (லேவி 21:14) என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர் நிச்சியத்ததின்படி திருமணம் நடைபெற்று வந்தது (ஆதி 26:24-35) திருமணத்தின் பின் அவர்களுக்குள் காதல் ஆரம்பிக்கும். (ஆதி 24:67) ஆயினும் திருமணத்திற்கு முன் காதலிப்பதும் உண்டு. (நியா. 14:2, 1 சாமு 18:20)

பெண்கள் வீட்டுக்கு வருமானத்தை தேடிக்கொடுப்பவர்களானபடியால் (யாத். 2:16) திருமணம் செய்யும் ஆண்கள் பெண் வீட்டாருக்கு சீதனம் கொடுப்பார்கள். மணமகளின் தகப்பனிடத்திருந்து விசேஷ சீதனம் பெறப்படும். (ஆதி 24:59-61). திருமணத்திற்கு முன் நிச்சியதார்த்தம் செய்யப்படும். (Betrothal எசே. 16: உபா 20:7) திருமண நாளில் மணமகள் அரசவஸ்திரம் போல் உடையணிந்து தலையில் பொற்கீரிடம் போட்டு நீண்ட அங்கி அணிந்து காணப்படுவார். (ஏசா 61:10) மணமகள் விலையுயர்ந்த ஆடை அணிந்து (சங். 144:12) காணப்படுவாள்.

திருமணமாகிய பெண் பெற்றோர் வீட்டைவிட்டு மணமகனுடன் போகவேண்டும். நகர வீதி இருட்டான நேரம்செல்லும்போது கையில் விளக்கோ, வெளிச்சமோ கொண்டு போவார்கள். (மத். 25:1-13)

அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகள் என பார்க்கும்போது புதிதாக கட்டிய வீட்டை பிரதிஷ்டை செய்வார்கள். (உபா 20:5), குழந்தை பால் மறக்கும் நாள் (சங். 131:2, 1 சாமு 1:23), விளைச்சல் அறுவடை செய்தல் (ஏசா 9:3, லேவி 23:39-43), ஆட்டில் உரோமம் கத்தரித்தல் (1 சாமு 25:4-36, 2 சாமு 13:23) போன்றன அவர்களின் கொண்டாட்டங்களுக்குரிய குடும்ப நிகழ்ச்சிகளாகும்.

பழைய ஏற்பாட்டு சுகாதாரத்தையும், வியாபாரிகள் பற்றியும் எமக்கு கூறுகின்றது. கடவுளின் கட்டளைக்கு கீழ்படிவதால் சுகாதாரம் தங்களுக்கு (சுகம்)வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது என யூதர்கள் கருதினர். (யாத். 15:26) வியாதி கீழ்படியாமையினால் வருகின்றது எனவும் எண்ணினர். (உபா 28:60,61) வியாதிகள் வரும்போது அதிகமாக கடவுளையே நம்பினர். (2 நாளா. 16:12, யோபு 13:4). ஜெபிப்பார்கள் (நாகூ21:7, 2 நாளா 6:28-30) தங்கள் பாவங்களினாலும், வியாதி வருவதாக அவர்களிடம் அபிப்பிராயம் இருந்தது. (யோவா 9:2) பலதரப்பட்ட வியாதிகள் அவர்கள் மத்தியில் காணப்பட்டன. (மாற். 1:32-34)

வேதாகமகாலத்தில் வாழ்ந்த மக்களுக்கிடையில் மரணம் ஏற்பட்டால் அயலவர்களுக்கு அறிவிப்பார்கள் (யாத். 12:30) துக்கம் கொண்டாடப்படும்.(மீகா 1:8, மாற். 5:38) மிகவும் துக்கித்து அழுவார்கள். (லூக் 23:48, யோவா 11:33) மரணத்தின் பின் உடனேயே அடக்கம் நடைபெறும். தாமதமாக்க மாட்டார்கள். (யோவா 11:39) துக்கவீட்டில் உறவினர்கள் எல்லோரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பாதரட்சைகளை கழற்றி விட்டு தலையில் மணல், சாம்பல் போன்றவற்றை தூவி, இருட்டுடுத்தி அழுவார்கள். (ஆதி. 37:34) இந்நாட்களில் உடலை கழுவாது வாசனை திரவியம் இடாது இருப்பார்கள்




மரித்தவரின் சடலம் சில மனிதர்களால் தோளில் வைத்து தூக்கப்படும். அடக்கம் பண்ணப்பட கொண்டுபோகப்படும். (யோவா 19:40). குகைகள் கல்லறைகளில் அடக்கம் பண்ணுவார்கள். (லூக் 8:27) அநேகர் தங்களுக்கென சொந்தமாக கல்லறைகளை வைத்திருப்பது வழக்கம்(ஆதி. 35:8, 49:31, 50:13). ஏழைகளுக்கு கல்லறை ஒதுக்கப்பட்டு இருந்தது. (2 ராஜா 23:6)

தொழில்கள் - அந்நாட்களில் ஆட்டுமந்தைகள் மேய்க்கும் வேலைகள் அதிகமாக காணப்பட்டன. (யோபு 42:12, 1 ராஜா 8:63) அதிகமாக இளம் வாலிபர்கள் மந்தைகளை மேய்ப்பார்கள் (1 சாமு 16:11) மேய்பாபர்கள் கூடுதலாக ஒட்டக மயிர்களினாலான உடையை தரித்திருப்பார்கள். இவ்வுடை அபா (Aba) என்றழைக்கப்படும். மந்தை மேய்க்கச் செல்லும்போது உணவையும் எடுத்துச் செல்வார்கள். (1 சாமு. 17:40) மேய்ப்பர்கள் ஒரு முனையில் வளைந்தகோல் (1 சாமு 17:34-36) வைத்திருப்பார்கள். குழல் அல்லது குழாய் போன்றதினாலான ஒருவகை வாத்தியக்கருவி வைத்து பாடல் பாடுவார்கள். (ஆதி. 29:7-10) ஒன்றுக்கு மேற்பட்ட மந்தைகள் ஒன்றாக விடப்படும். மேயக்கும்போது நாய்களையும் உதவிக்குப் பயன்படுத்துவார்கள். (யோபு 30:1)

மந்தைகளுக்கு பெயர்களை வைத்து அழைப்பார்கள். (யோவா10:30) மேய்ப்பன் சத்தமிட்டு (Tahhoo! Tahoo!) அழைக்கும்போது ஆடுகள் தலையை உயர்த்தும் (யோ. 10:4-5). ஆடுகளுக்கு முன்னே மேய்பன் செல்வான். ஆடுகள் காணாமற் போனால் அதை மிகுந்த கவனத்துடன் தேடுவான் (லூக். 15:6). சிறு ஆடுகள், இளம் ஆடுகள் மீது மிக கவனம் எடுப்பார்கள். (ஏசா. 40:11) இரவில் ஆடுகளை பராமரித்து பாதுகாப்பார்கள் (லூக். 2:8, ஆதி 31:40) கள்ளவர்களிடமிருந்தும் காட்டு மிருகங்களிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்வார்கள். (யோவா. 10:10)

இவர்கள் வளர்க்கும் ஆடுகளிலிருந்து தங்களுக்கு ஆடைகளை தயாரித்துக் கொள்வார்கள். (உன். 4:2, ஏசா 1:18) ஆட்டுத்தோலிலான ஆடைகள் அணிவது வழக்கம் (எபி. 11:37) தங்கள் உணவிற்கும் பலி செலுத்துவதற்கும் ஆடுகளைப் பயன்படுத்துவார்கள் (லேவி 23:5, மாற். 26:17-29) பாலும் உணவில் சேர்க்கப்படும். செம்மறிஆடு, வௌ¢ளாடு என இருவகையான ஆடுகள் காணப்பட்டன. இவை வேறுபிரிக்கப்பட்டு வளர்க்கப்படும் (நீதி 27:27, நியா 6:19)

இக்காலத்தில் வாழ்ந்தவர்களின் தானியம் பயிரிடும் முறையை கவனிக்கும்போது வயலை உழுவதற்கு முதல் மழையை எதிர்பார்ப்பார்கள். (சங். 65:10, யோபு 29:23). உழும்போது மரத்தினால் செய்யப்பட்ட ஏரில் மாடுகளைப் பூட்டி (1 சாமு 13:20 யோவே. 31:10) உழுவார்கள். நுகத்தடி (சீஷீளீமீ - எரே. 28:13) தூண்டுகோல் (நிஷீணீபீ-நியா 3:31) போன்ற உழுவதற்குப் பயன்பட்டன. சில வகை மிருகங்களும் உழுவதற்குப் பயன்படுத்தினர். (1 சாமு 14:14, லேவி 22:10, எண். 19:2). அவரவர் தங்கள் சொந்த கலப்பையை பயன்படு¢த்தி, அநேகருடன் சேர்ந்தும் உழுவார்கள் (1 ராஜா 19:19)

வயலில் வெவ்வேறு தானியங்களை விதைப்பார்கள். (எசே. 4:9, யாத். 9:32) விதைக்கிறவன் கூடைபோன்ற பையில் (Sack) விதைகளைப் போட்டு கொண்டு விதைப்பார்கள். (ஆதி. 26:12) பறவைகள்(மாற். 13:4), நெருப்பு (யாத். 22:6), கள்வர் (நியா. 6:3, மத். 13:25) போன்றவற்றால் தானியங்கள் சேதப்படுத்தாதபடி காத்துக்கொள்வார்கள். பயிர் வளர்வதற்கும் மழையை எதிர்பார்ப்பார்கள். (யோவா 2:23) அறுவடை செய்த தானியங்களை தங்கள் இடங்களுக்கு ஒட்டகங்களில் வைத்துக் கொண்டு செல்வார்கள். (ஆதி. 37:7, 42:26-27) தங்கள் வாழ்நாட்களுக்கு உணவிற்குப் பயன்படுத்துவார்கள். (உபா. 23:25, லூக். 6:1-2) அறுவடையின் மிகுதியை ஏழைகள் பெறும்படி விடப்படும். (லேவி. 23:22)

அறுவடை செய்த தானியங்களை போரடித்து, தூற்றுவார்கள். (லூக். 3:17), மாவாக்கப்பட்டு, அவர்கள் அன்றாட உணவுகளுக்கு உபயோகிப்பார்கள். ( 1 ராஜா 17:12, 14, 16)

திராட்சைத் தோட்டங்களும் முதலிடம் வகித்தன. (ஏசா. 5:1-2, மத். 21:33) அதிகமாக மலைப்பகுதிகளிலும் தட்டையான மேற்பரப்புகளிலும் (ஏசா. 5:1), புற்கள் வளரக்கூடிய இடங்களிலும் (நாகூ. 13:23) தோட்டங்களும் காணப்பட்டன. தோட்டத்தைச் சுற்றி மதில் (சுவர்) கட்டப்பட்டிருக்கும். (மத். 21:3, உன். 2:15) தோட்டத்தில் கற்கள் பொறுக்கப்பட்டு (ஏசா. 5:2) மண் பண்படு¢த்தப்பட்டு சுத்தமாக்கப்படும். தோட்டத்தினுள் பந்தல் அமைத்து, பாதுகாக்கும்படி கோபுரமும் கட்டுவார்கள். (நீதி. 24:30, 3), செடிகளை கத்தரித்து (யோவா 15:1-3) சுத்திகரிப்பார்கள்.

திராட்சைப் பழங்களிலிருந்து திராட்சைரசம் தயாரித்து (உன். 21:13) அன்றாட உணவில் பாவிக்கப்படும். மேலும், பிசின் தைலம் என்பவனவும் பாவி¢த்தனர். (எசே. 27:17, எரே. 48:33)

ஒலிவமரத் தோட்டங்களும், அத்திமரத்தோட்டங்களும் காணப்பட்டன. (உன். 8:8, 6:11). ஒலிவ எண்ணெய் (மீகா 6:15) அத்திமரத்திலிருந்து பெறப்படும் பயன்கள் ( 1 சாமு. 25:18) அவர்களால் பாவிக்கப்பட்டன.

அக்காலத்தவர்களுக்கிடையில் குயவன் (மாற். 10:42, ஏசா 4:25), தச்சு வேலை செய்பவர்கள் (மாற். 6:3, ஏசா 44:13) வேடன் (ஆதி. 10:9, 21:20). மீனவன் (மாற். 7:27), வீடு கட்டுபவன் (லூக். 6:48), உலோக வேலை செய்பவன் (ஆதி. 4:22), தோல் பதனிடுபவன் (அப். 9.43) கூடாரம் போடுபவன் (அப். 18:1-3), வியாபாரம் செய்பவன்(நீதி. 20:24) பணம் மாற்றுபவன், பாதுகாத்து வைப்பவன் (மத். 25:27, லுக். 19:23), வரி வசூலிப்பவன் (லூக் 3:12-13, மத். 9:11), மருத்துவன் (மாற். கொலோ. 4:14) போன்ற வேலை செய்பவர்கள் காணப்பட்டனர்.

அப்பகுதிகளில் கிராமங்களும் நகரங்களும் காணப்பட்டன. (லேவி. 25:29, யோசு 15:45), எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி மதில் கட்டினர். (2 நாளா. 8:5) நகரத்திற்கு வாசல் வைத்து கதவு போட்டிருப்பார்கள். (சங். 107:16, 45:1). எதிரியை கண்காணிப்பதற்கு ஒரு உயரமான இடத்தில் அரண் (Tower) கட்டுவார்கள். (2 நாளா 26:15, நியா. 9:46), நீண்ட வளைந்த வீதிகளும் (யோவா. 2:19, நெகே. 8:1) சந்தைகளும் (மாற். 12:38, அப். 17:17) காணப்பட்டன.

ஒட்டகம் (ஆதி. 12:16, 30:43) கழுதை (ஆதி 22:3, 42:26-27) கோவேறுக் கழுதை (லேவி 19:19), குதிரை (ஏசா. 28:28, 5:28), ஆடு, மாடு (நீதி. 15:17), நாய் (சங். 59:6, யோபு 30:1) போன்ற மிருகங்கள் அவர்கள் நடைமுறை வாழ்வோடு கலந்திருந்தன.

இலத்தீன், கிரேக்கம், அரமேயம், எபிரேய மொழிகள் அதிகளவில் அவர்கள் புழக்கத்தில் இருந்தன. தேவனின் ஒருமைத்தன்மை, மக்களால் அனுகமுடியாத தொலைதூரத்தில் இருப்பவர் என்ற கருத்தும் ஒரு தெய்வ வழிபாடும் உடையவர்களாகவும் இருந்தனர்.

யூத மக்களின் வளர்ச்சியில் ஜெப ஆலயங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்நியர்களின் ஆதிக்கத்தினால் சிறைப்பட்டு, சிதறடிக்கப்பட்டு போன யூதர்கள் தங்களுக்கு பெரிய ஜெபஆலயங்களை அமைத்துக் கொண்டார்கள். இவை யூதர்களின் கல்விக்கூடங்களாக­வும் செயற்பட்டன.

இவர்களின் பண்டிகைகளாக பாஸ்கா முக்கியம் வாய்ந்தது. (உபா. 8:13, 30:15) மேலும் பெந்தகோஸ்தே பண்டிகை எக்காளப்பண்டிகை (நெகே. 8:2-12) பிராய்சித்த பலியின் நாள் (அப். 27:9), கூடாரப்பண்டிகை (லேவி. 23:34) அர்ப்பணிப்பின் பண்டிகை (யோவா 10:22), பூரிம் பண்டிகை என்பனவும் காணப்பட்டன.

மேலும் புதிய ஏற்பாட்டு காலத்தில் வேதாகம பூமியில் ஆசாரிக்குழுக்கள், பரிசேயர், சதுசேயர், ஏசீன்ஸ் குழுவினர் செலோத்தியர் வேதபாரகர் போன்ற சமயக்குழுக்கள் காணப்பட்டன. இக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கிடையேயும் வேறுபட்ட நோக்கங்கள், நம்பிக்கைகள் காணப்பட்டன. இக்குழுக்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வது, இயேசுக்கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் இக்குழுக்கள் அதிகம் இடமபெறுவதனால் அவ்வேத பகுதிகளை அறிந்து விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

மேலே நாம் ஆராய்ந்தறிந்தவைகளாகிய வேதாகமப் பூமியில் வாழ்ந்த மக்களுடைய கலாசார பழக்கவழக்ங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வேதாகமத்தை ஆராயும்போது அதை விளங்கிக் கொள்வதற்கு பயனுள்ளதாயிருக்கும். கலாசார பழக்கவழக்கங்களின் அடிப்படையில் வேதாகமத்தை விளங்கிக் கொள்வதோடு அதன் நியதிகளை அறிந்து தமது அன்றாட நடைமுறை வாழ்வில் பயன்படுத்தும்போது எமக்கு நடைமுறை ரீதியாகவும் பயன்பெற வாய்ப்பாகவுள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment