இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு விளக்கம் கொடுக்கையில், 'உனக்கடுத்தவனைச் சிநேகித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். (மத். 5:43)என்று குறிப்பிட்டார். எனினும் பழைய ஏற்பாட்டில் இத்தகைய கட்டளைகள் கொடுக்கப்படாதமையால் இயேசு தேவ கட்டளையை மாற்றியுள்ளார் என்றும் அவர் முழுமையான தேவ அறிவற்றவராகவும் இருந்துள்ளார் என்றும் சிலர் கருதுவதோடு, இதன் மூலம் பழைய ஏற்பாட்டைப் பற்றி ஒரு தவறான கருத்தைப் பரப்பியுள்ளார் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
உண்மையில் இயேசு கிறிஸ்து மத்தேயு 5:43 இல் பழைய ஏற்பாட்டுக் கட்டளையை குறிப்பிடவில்லை என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வுண்மையை அறியாதவர்களே இயேசுவின் பழைய ஏற்பாட்டு அறிவைப் பற்றித் தவறான கருத்துடையவர்களாக உள்ளனர். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் மக்கள் யூதமதப் போதகர்களின் உபதேசங்களுக்கும் பாரம்பரியக் கருத்துக்களுக்கும“ முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். யூதமதப் போதகர்கள் பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களுக்கு தமது அறிவுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாவறு விளக்கம் கொடுத்து வந்தனர்.(1) அத்தகைய ஒரு யூதமார்க்க யூதமார்க்கத்து விளக்கத்தையே இயேசு மத்தேயு 5:43 இல் குறிப்பிட்டுள்ளார்.
மத்தேயு 5ம் அதிகாரத்தில் 21ம் வசனத்திலிருந்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு விளக்கம் கொடுத்துவரும் இயேசு, பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளைக் குறிப்பிடும்போது “பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டது” அல்லது “உரைக்கப்பட்டது“ என்று அறிமுகப்படுத்தியுள்ளதை நாம் அவதானிக்கலாம். (5:21,27,31,33,38)ஆனால் 43ம் வசனத்தில் மட்டும் இத்தகைய அறிமுக வார்த்தைகளை இயேசு உபயோகிக்கவில்லை. ..“ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். என்றே குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் அவ்வசனத்தில் அவர் குறிப்பிடும் விடயம் பழைய ஏற்பாட்டில் தேவனால் உரைக்கப்படாத வார்த்தைகளாய் இருப்பதேயாகும்.
பழைய ஏற்பாட்டில் “உன்னில் நீ அன்பு கூறுவதுபோல் பிறனிலும் அன்பு கூருவாயாக (லேவி. 19:18) என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். அயலவனை நேசிக்கும்படியான இக்கட்டளையை யூத மதப் போதகர்கள் “உனக்கடுத்தவனை சிநேகிப்பாயாக“ என்று போதித்தனர். எனினும் யூதர்கரைப் பொறுத்தவரை உனக்கடுத்தவன் அல்லது அயலான் என்பது இன்னொரு யூதனாகவே இருந்தான்“(2) பிறன் என்ற பதம் யூதர்களை மட்டுமல்ல புறஜாதியாரையும் குறிக்கின்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “புறஜாதியாரை அவர்கள் எதிரிகளாகவே கருதினார்கள்“(3) இதனால் அவர்கள் “உன் சத்துருவைப் பகைப்பாயாக“ என்று போதிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் சங்கீதக்காரனுடைய கோப வார்த்தைகளையே தமது உபதேசத்திற்கு ஆதாரமாய்க் காண்பித்தனர். பழைய ஏற்பாட்டிலுள்ள சில சங்கீதங்களில், சங்கீதக்காரன் தன் எதிரிகளை சபிப்பதையும் அவர்களைத் தன்னுடைய பகைஞராக வர்ணிப்பதையம் நாம் அவதானிக்கலாம். (சங். 26:5, 137:8-9, 139:21-22) எனினும் இவ்வார்த்தைகள் சங்கீதக்காரனின் மனைக்குமறலின் வெளிப்பாடாகவே உள்ளன. இவை தேவன் மக்களுக்கு கொடுத்த கட்டளைகள் அல்ல. மாறாக சங்கீதக்காரன் தேவனோடு பேசுகின்ற, தன் கோப உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துகின்ற வார்த்தைகளாகவே உள்ளன(4) எனவே, அவற்றைத் தேவ கட்டளைகளாக்க் கருத முடியாது. ஆனால் யூதமதப் போதகர்கள், சங்கீதக்காரனின் இத்தகைய வார்த்தைகளை அடிப்படையாக்க் கொண்டு சத்துருவைப் பகைப்பாயாக என்று போதித்து வந்தனர். இதையே இயேசு கிறிஸ்து மத்தேயு 5:43 இல் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் போதித்த விதமாகவே(5) பழைய ஏற்பாட்டிலும் சத்துருக்களை நேசிக்கும்படியே தேவன் கட்டளையிட்டுள்ளார். லேவியராகமம் 19:33-34 இல் “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்த வேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக;“ என்று அறிவுறுத்தியுள்ள தேவன் யாத்திராகமம் 23:4-5 சத்துருக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளார். இவ்வசனங்களில் ்உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக. என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீதிமொழிகள் 25:21 “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.’ என்று சொல்லப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களை நன்கு அறிந்திருந்தார். அவர் பன்னிரு வயதுடையவராயிருக்கும் போதே அவரது வேத அறிவு அக்கால பழைய ஏற்பாட்டு வேதவல்லுநர்களையே ஆச்சரியப்பட வைத்தது. (லூக். 2:46-47) அவருடைய வேதம் பழைய ஏற்பாடாகவே இருந்தது. அவர் அதைத் தன் வாழ்விலும் ஊழியத்திலும் அதிகமாக உபயோகித்தார். இயேசுவின் காலத்தைய யூதமதப் போதகர்கள் பழைய ஏற்பாட்டுச் சட்டங்களுக்கு மேலதிகமாக 613 கட்டளைகளைச் சேர்த்திருந்தனர். ஆனால் இவற்றில் ஒரு கட்டளையையும் இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை.(6) “பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களைத் தவிர அவர் வேறு எந்த ஒரு கட்டளையையும் தேவ கட்டளையாக அங்கீகரிக்கவில்லை.(7)
குறிப்புகள்
(1) ஆரம்பத்தில் வாய்மொழி மூலமாகக் கொடுக்கப்பட்ட இப்போதனைகள் கி.மு.. இரண்டாம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்று “மிஷ்னா“ என்றழைக்கப்படுகின்றது. ஆறு பகுதிகளைக் கொண்ட மிஷ்னாவில் விவசாயம், பண்டிகைகள், திருமணம், மற்றும் சமூக கலாச்சார குற்றவியல் பற்றிய சட்ட திட்டங்கள் உள்ளன. பிற்காலத்தில் இச்சட்டங்களுக்கு எழுதப்பட்ட விளக்கவுரைகளும் இதனோடு சேர்க்கப்பட்டன. இவ்விளக்கவுரை “கமரா“ என்றழைக்கப்படுகின்றது. “மிஷ்னா“, “கமாரா“ என்னும் இவ்விரு நூல்களும் யூதர்களுடைய போதனை நூலாக இருப்பதோடு “தல்மூட்“ என்றழைக்கப்படுகின்றது.
(2) Donald A. Hagner, Mathew 1-13 in word biblical commentary vol 33A ed., Ralph P. Martin Dallas: Word Books Publishers, 1993, p.134
(3) Ibid p. 134 இயேசுவின் நல்ல சமாரியன் உவமை யூதர்களுக்கு அவர்கள் எதிரிகளாகக் கருதிய சமாரியனும் அயலவனாக இருக்கின்றான் என்பதைச் சுட்டிக் காட்டும் பாடமாக உள்ளது. (லூக். 10:25-37)
(4) தனது இன்பங்களையும் துன்பங்களையும் மட்டுமல்ல தன் கோப உணர்வுகளையும் சங்கீதக்காரன் தேவனிடமே வெளிப்படுத்தியுள்ளான். அவன் தன் கோபத்தை மனிதர்களிடத்தில் காட்டாமல் தேவனிடத்தில் காண்பித்துள்ளான். சங். 12, 35, 58, 69, 70, 83, 109, 137, 140 ஐ பார்க்கவும்.
சத்துருக்களைப் பற்றிய இயேசுவின் போதனை மத்தேயு 5:44 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர் களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
(5) மாற்கு 7:1-13 இல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் இதற்கு ஒரு உதாரணமாக உள்ளது.
(6) Brian H. Edwards, Nothing but the Truth, Durham: Evangelical Press, 1993, p. 59
நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் - Dr.M.S. வசந்தகுமார்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment