- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 15 July 2013

ஸ்திரியே எனக்கும் உனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லை (யோவான் 2:4)



இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே கிரகித்துக் கொள்ள முடியாமலிருக்கும் வார்த்தைகள் அவர் தமது தாயாகிய மரியாளை அழைத்து முறையாகும். அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தனது தாயை “அம்மா” என்று அழைத்ததாகச் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்படாதமையால் அவர் தமது தாயை மதிக்காதவராக அவளோடு கடுமையாக நடந்து கொண்டுள்ளதோக பலர் கருதுகின்றனர். யோவான் எழுதிய சுவிஷேசத்தில் “கானா”(1) என்னும் ஊரில் நடைபெற்ற திருமண விருந்தின்போதும் சிலுவையில் மரிக்கும்போதும் இயேசுகிறிஸ்து தமது தாயை “ஸ்திரியே” என்றே அழைத்துள்ளதை யோவான் 2:4 இலும் 19:26 இலும் நாம் அவதானிக்கலாம். மேலும் அவர் இவ்விதமாகவே ஏனைய பெண்களையும் அழைத்துள்ளதையும் சுவிஷேசப் புத்தகங்கள் அறியத் தருகின்றன. (மத். 15:28, லூக். 13:12, யோவான் 4:21, 20:15) இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பின்னர் மரியாளைப் பராமரித்து வந்த யோவான் தனது சுவிஷேசப் புத்தகத்தில் அவளது பெயரைக் கூட குறிப்பிடாமல் மரியாதையாக “இயேசுவின் தாய்” என்று எழுதியிருக்கும்போது (யோவான் 2:1) இயேசுகிறிஸ்து தமது தாயை “ஸ்திரியே” என்று அழைத்தது உண்மையிலேயே பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தற்காலத்தில் “ஸ்திரீ” என்னும் வார்த்தை ஒரு பெண்ணை அழைப்பதற்குச் சற்று தரக் குறைவாகத் தென்பட்டாலும் (3) மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “குனெய்” (gunai) என்னும் கிரேக்க பதமானது மரியாதைக் குறைவான வார்த்தை அல்ல(4) மேலும் இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதும் இவ்விதமாகவே தன் தாயை அழைத்துள்ள போதிலும் “அச்சந்தர்ப்பத்தில்  அவளோடு அவர் கடுமையாக பேசவில்லை”(5) “கிரேக்கத்தில் இது மரியாதையுடனும் பாசத்துடனும் ஒரு பெண்ணை அழைக்க உபயோகிக்கப்படும் வார்த்தையாகும்”(6) அக்காலத்தில் பாசமுள்ள கணவன் தன் மனைவியை அழைப்பதற்கு இவ்வார்த்தையை உபயோகிப்பது வழமை(7) கிரேக்க இலக்கியங்களிலும் அதனை நாம் அவதானிக்கலாம்.(8) உண்மையில் இது மரியாதையுடனும் அன்புடனும் ஒரு பெண்ணை அழைக்க உபயோகிக்கப்பட்ட வார்த்தையாகும்(9) ஆனால் ஒரு மகன் தனது தாயை அழைப்பதற்கு இது பொருத்தமான வார்த்தை என்று கூற முடியாது. “யூதர்களோ அல்லது கிரேக்கர்களோ தங்களுடைய தாயை அழைக்க இவ்வார்த்தையை ஒருபோதும் உபயோகித்ததில்லை. (10)

இயேசுகிறிஸ்து தமது தாயை மரியாதைக் குறைவாக அழைக்காத போதும் தமக்கும் அவளுக்கும் இடையிலான உறவில் ஒரு மாற்றத்தை அதாவது ஒரு தொலைவை (அல்லது இடைவெளியை) அவளை “ஸ்திரி” என்று அழைப்பதன் மூலம் காண்பித்துள்ளார். அதாவது அதுவரை காலமும் மரியாளின் மகனாகச் யெற்பட்ட இவர் ப்போது தேவகுமாரனாகச் செயற்பட வேண்டிய காலம் வந்துவிட்டதை மரியாளுக்கு உணர்த்துவதற்காக தமது பகிரங்க ஊழியக் காலத்தில் அவர் மற்ற பெண்களை அழைத்த விதமாகவே தமது தாயையும் அழைத்துள்ளார். இதை அவரது வார்த்தைகளே அறியத் தருகின்றன. ஏனென்றால் “எனக்கும் உனக்கும் என்ன?” என்னும் அடுத்து வரும் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் “இரு நபர்களுக்கிடையிலான உறவில் ஒரு இடைவெளி அல்லது தொலைவு இருப்பதைச் சுட்டிக் காட்ட அக்கால யூதர்கள் உபயோகிக்கும் ஒரு சொற்பிரயோகமாகும்”(11) எனினும் அது உச்சரிப்பின் முறையை அடிப்படையாக்க் கொண்டு கடுமையாக அல்லது மென்மையாகச் சொல்லப்படலாம். பிசாசுக்கள் இயேசுகிறிஸ்துவோடு பேசும்போது இச்சொற்பிரயோகத்தை கடுமையாகப் பிரயோகித்துள்ளதை மத். 8.29, மாற்கு 1.24, 4.7, லூக்கா 4.34, 8.28 போன்ற வசனங்களில் நாம் அவதானிக்கலாம். இயேசுகிறிஸ்து மரியாளோடு கடுமையாகப் பேசியிருந்தால் அவரது வார்த்தைகள் “தமது அலுவல்களில் தலையிடாமல் இருக்கும்படியும் தமது விருப்பம்போல செயற்படத் தம்மைவிட்டுவிடுபடியும் கூறுவதாகப் பொருள்படும்.(12) ஆனால், மென்மையாக உபயோகிக்கும்போது இச்சொற்பிரயோகம் கடிந்து கொள்ளுதலை அல்ல. மாறாக, தவறாகப் புரிந்துக் கொள்ளப்ப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டும்”(13) இயேசுகிறிஸ்து மரியாளைக் கடிந்துக் கொள்ளாமல், மரியாதையுடனும் பாசத்துடனுமே பேசியுள்ளமையால், அவர் தமக்கும் மரியாளுக்கும் இடையிலான உறவை அவள் தவறாகப் புரிந்துகொண்டிருந்த்தைச் சுட்டிகாட்டுவதற்காக இவ்வாறு கூறியுள்ளார் “அதுவரை காலமும் மரியாளின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து வாழந்த இயேசுகிறிஸ்து (லூக். 2:51) அவளது அதிகாரத்திற்குத் தாம் உட்பட்டிருந்த காலம் முடிவடைந்துவிட்டதைச் சுட்டிக் காட்டுவதற்காக அவளை இவ்வாறு ழைத்துள்ளார்.”(14) எனவே மரியாள் இனிமேல் தம்மை அவளுடைய மகனாக மட்டும் பார்க்காமல், தன்னுடைய கர்த்தராகவும் பார்க்கும்படியாக அவளை இவ்வாறு அழைத்துள்ளார். (15)

தமது தாயை “ஸ்திரீயே” என்று அழைத்து, தமக்கும் அவளுக்கும் இடையிலான உறவின் தன்மையை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதை அவளுக்குச் சுட்டிக் காட்டிய இயேசுகிறிஸ்து “என் வேளை இன்னும் வரவில்லை”. (யோவான் 2:4) என்றும் கூறினார். யோவானுடைய சுவிஷேசத்தில் இயேசுகிறிஸ்துவின் இக்கூற்று ஐந்து தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு (2:4, 7:6, 7:8, 7:30, 8:20) மூன்று தடவைகள் “என் வேளை வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். (12:23, 13:1, 17:2) தாம் மரிக்கும் நேரம் நெருங்கிவரும் போதே “என் வேளை வந்துவிட்டது” என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ளமையால், “அவரது வேளை” சிலுவை மரணம் என்பது தெளிவாகின்றது.(16) சிலுவையில் தம்மைப் பலியாகக் கொடுப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தமையால், அப்பணியினைச் செய்வதற்காகவே தாம் வந்துள்ளதை ஆரம்பத்திலேயே தமது தாயாருக்கு உணர்த்துவதற்காகவே, தமக்கும் அவளுக்கும் இடையிலான உறவின் தன்மையை சுட்டிக்காட்ட அவர் தமது தாயை “ஸ்திரியே” என்று அழைத்துள்ளார். இயேசுகிறிஸ்து மேசியாவாகச் செயற்பட ஆரம்பித்தபோது அவருக்கும் மரியாளுக்கும் இடையிலான உறவில் ஒரு மாறுதல் ஏற்பட்டதை எவராலும் மறுக்க முடியாது. எனவே, இங்கு எவ்விதர மரியாதைக் குறைவும் அவமதிப்பும் இல்லை. இதனால், சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை “தாயே” என்று மாற்றியுள்ளது போல மாற்றுவதில் அர்த்தமும் இல்லை.(17). கிறிஸ்து மனிதராகப் பிறப்பதற்கு தேவன் மரியாளை உபயோகித்தது உண்மை என்றாலும் அவளும் மற்ற பெண்களைப் போலவே இருக்கின்றாள் என்பதை நாம் மற்க்கலாகாது. (18)



குறிப்புகள்
(1) கானா என்பது பலஸ்தீனாவின் கலிலேயாவிலிருந்த சிறிய பட்டணமாகும். யோவானுடைய சுவிஷேசத்தில் நான்கு தடவைகள் இப்பட்டணம் “கலிலேயிவிலுள்ள” என்னும் அறிமுகத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. (யோவான்2:1, 2:11, 4:46, 21:2) பழைய ஏற்பாட்டிலும் “கானா” என்னும் பெயரில் ஒரு பிரதேசம் இருப்பதனால் (யோசு. 16:8, 19:28), அதிலிருந்து இப்பட்டணத்தை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவே யோவான் நான்கு தடவைகளும் தான் குறிப்பிடும் “கானா” கலிலிலேவில் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். (A.C. Myers, ed., The Eerdmans Bible Dictionary, p. 185) பழைய ஏற்பாட்டுக் கானா ஆசேர் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்ட பட்டணங்களில் ஒன்றாக உள்ளது. (யோசு 19:24-28) தற்காலத்திலும் இப்பட்டணம் இதே பெயரில் “தீரு” என்னும் பட்டணத்திற்கு தென்கிழக்கில் 7 மைல்கள் தொலைவில் உள்ளது. (M.H.Woudstra, Joshua: The New International Commentary on the Old Testament, p. 289) யூதவரலாற்றாசிரியர் ஜோசீப்பஸ் என்பவர் ஒரு தடவை தான் கலிலியாவிலுள்ள “கானா“ என்னும் ஊரில் இருந்ததாகவும் குறிப்பிட்ட போதிலும் இப்பெயர் வேறு புராதன இலக்கியங்களில் இடம்பெறதாதமையால், இப்பட்டணம் பிரபலமற்ற ஒரு பிரதேசமாகவே அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். (L. Morris, John: The New Internatinal Commentary o the New Testament, p.177) “கலிலேயாவிலுள்ள” என்னும் அறிமுகத்துடன் யோவான் இப்பட்டணத்தைக் குறிப்பிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும். புதைபொருள் ஆராய்சியாளர்கள். தற்போது இஸ்ரவேல் நாசரேத் என்னும் நகரத்திற்கு 9 மைல்கள் வடக்கில் சிதைவடைந்த நிலையில் இருக்கும் கிர்பத் குஆனா (Khirbet Qnana) என்னும் இடமே புதிய ஏற்பாட்டுக்கால “கானா” எனும் ஊர் என்பதைக் கண்டுபிடித்துள்ளார். (D.A.Carson, John: The Pillar New Testament Commentary, p. 168) இவ்விடத்தில் இயேசுகிறிஸ்துவின் காலத்தைய மட்பாண்டத் துண்டுகளும் நாணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. E.M. Blaiklock & R.K. Harrison, ed., The New International Dictionary of Biblical Archaeology, p.116) “நாசரேத்” என்னும் நகரத்திற்கு நான்கு மைல்கள் வடகிழக்கில் திபேரியாவிற்குச் செல்லும் வழியில் இருக்கும் “கெர்ஃப் கீனா” (Kefr Kenna) என்னும் பட்டணமே புதிய ஏற்பாட்டுக்கால “கானா” என்னும் ஊர் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். இதனால், கிரேக்க மற்றும் ரோம ஆலயங்கள் இப்பட்ணத்தில் கட்டப்பட்டுள்ளதோடு கிரேக்க ஆலயத்தில் இயேசு கானா ஊரில் செய்த அற்புத்ததில் உபயோகித்தாகக் கூறப்படும் ஒரு சாடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது உல்லாசப் பிரயாணகளினால் இலகுவாக வந்து போக்க் கூடிய இடமாக இருப்பதினாலே இவ்விடத்தில் ஆலயங்கள் கட்டப்பட்டு, இவ்விடமே புதிய ஏற்பாட்டுக்கால கானா என்று கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் இதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. இதேபோல, ஆதிச் சபையின் வரலாற்றாசிரியர் இயூசிபியஸ் பழைய ஏற்பாட்டுக்கால கானாவே புதிய ஏற்பாட்டுக்கால கானா என்று குறிப்பிட்டுள்ளதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. (G.W. Bromiley, The International Standard Encyclopedia Volume 1, pp-584-585) மேலும் நாசரேத்திலிருந்து ஒன்றரை மைல்கள் தொலைவில் தாபோருக்குச் செல்லும் வழியில் இருக்கும் “அய்ன்குஆனா” என்னும் இடமே புதிய ஏற்பாட்டுக் கானா என்னும் சிலரது கருத்துக்கு (S.W. Sandy, Sacred Site if the Gospels, p. 24) எவ்வித ஆதாரமும் இல்லை. 

(2) இயேசுகிறிஸ்துவை “மரியாளின் மகன்” என்று குறிப்பிடாமல், மரியாளை “இயேசுகிறிஸ்துவின் தாய்” என்று யோவான் குறிப்பிட்டுள்ளதை நாம் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம். இயேசுகிறிஸ்துவின் முக்கியத்துவம் மரியாளிடமிருந்து வரவில்லை. மாறாக, மரியாளின் முக்கியத்துவம் இயேசுகிறிஸ்துவிடமிருந்து அவளுக்குக் கிடைத்துள்ளதை யோவானின் வார்த்தைகள் அறியத் தருகின்றன. (G.L.Borchert, Hohn 1-11: The New American Commentary, pp. 154-155)

(3) வேதாகமத்தின் புதிய இலகு தமிழ் மொழிபெயர்ப்பில் “ஸ்திரியே” என்பதற்குப் பதிலாக பெண்ணே” என்னும் வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. 

(4) புதிய ஏற்பாடு ஆரம்பத்தில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டமையால் புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் முழுமையான அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு மூலமொழியான கிரேக்கத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

(5) R.C.H. Lenski, The Interpretation of St. John's Gospel. P.189

(6) H.G. Liddell & R.Scott, A. Greek-English Lexicon

(7) F. Josephus, The Antiquities of the Jews 17.4.74

(8) உதாரணத்திற்கு “ஹேமா” என்னும் இலக்கியத்தில் “ஒடீசியெஸ்” என்பவன் தான் மிகவும் அதிகமான நேசித்த மனைவியை இவ்விதமாகவே அழைத்துள்ளான். அதேபோல, ரோம சக்கரவர்த்தி ஒகஸ்ட்டஸ் என்பவன் “கிளியோபத்ராவை” அழைக்க உபயோகித்த வார்த்தையும் இதுவேயாகும். 

(9) W. Barclay, John Volume one: The Daily Study Bible, p. 98

(10) L. Morris, Expository Reflections on the Gospel of John p. 73

(11) D.A. Carson , John: The Pillar New Testament Commentary, p. 170, நியாதிபதிகள் 11:12 1 ராஜாக்கள் 17:18, 2 ராஜாக்கள் 3:13, 2 நாளாம்ம் 35:21, ஓசியா 14:28 போன்ற வசங்களிலும் இத்தகைய சொற்பிரயோகத்தைக் நாம் அவதானிக்கலாம்

(12) N. Turner, Grammatical Insights into the New Testament, p. 47

(13) W. Barclay, John Volume 1: The Daily Study Bible p. 98

(14) L. Miorris, John: The New International Commentary on the New Testament, p. 158

(15) W,. Hendriksen, New Testament Commentary: John, p. 115 இயேசு கிறிஸ்துவின் பகிரங்க ஊழியம் அவரது குடும்ப உறவினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை.(யோவான் 7:3-9, மாற்கு 4:31-35) இதில் அவருடைய தாயினாலும் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதை இயேசுகிறிஸ்து தமது தாயை ஸ்திரியே என்று அழைப்பதன் மூலம் சுட்டிகாட்டியுள்ளார். மேலும், இயேசுகிறிஸ்து சொல்கின்ற விதமாக செய்யும்படி மரியாள் வேலைக்கார்ர்களிடம் கூறுவது, அவள் அவரது அதிகாரத்தின் கீழ் செயற்பட ஆரம்பித்துள்ளதையே அறியத் தருகின்றது. (G.L. Borchert, John 1-11: The New American Commentary, P. 155-156)

(16)  F. Salvoni ; Nevertheless, My Hour Has Not Yet Come" in Restoration Quarterly, pp.236-241

(17) அண்மையில் வெளிவந்த வேதாகமத்தின் புதிய மொழிபெயர்ப்பான திருவிவிலியத்தில் “ஸ்திரி” என்பது “அம்மா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள போதிலு “அம்மா” எனும் சொல் தாய் என்னும் பொருளில் அல்ல. பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் பொருளில் இங்கு கையாளப்படுகின்றது எனும் விளக்கம் அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் New International Version “அன்பான பெண்ணே” (Dear Woman) என்னும் அர்த்தத்தில் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை மொழிபெயர்த்துள்ளது. ஆனால், “அன்பான” என்னும் பதம் மூலமொழியில் இல்லை என்பதை நாம் மறக்கலாகாது. Good New Bible ஸ்திரியே என்னும் வார்த்தையை மொழிபெயர்க்காமல் விட்டுள்ளது. இதனால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையிலுள்ள முக்கியமான விடயத்தை இம்மொழிபெயர்ப்பை வாசிப்பவர்களினால் அறியமுடியாதுள்ளது. (B. Newman & E.Nida, A. Translator's Handbook in the Gospel of John, p. 57)

(18) இதனால்தான் பெந்தகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவருக்காகக் காத்திருந்தவர்களில் மரியாளும் இருந்தாள். (அப். 1:14). ஆதி சபையில் மரியாள் மற்ற பெண்களைப் போல சாதாரணமான ஒரு பெண்ணாகவே இருந்தாள் என்பதை இது அறியத்தருகின்றது. ஆனால் கி.பி. 431இல் எபேசு பட்டணத்தில் கூடிய கிறிஸ்தவ சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில் “தேவதாய்” என்றும் பெயர் மரியாளுக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கி.பி. 451 இல் “சால்சிடோன்” என்னுமிடத்தில் கூடிய ஆலோசனைச் சங்கத்தில் எழுதப்பட்ட “சால்சிடோனிய விசுவாசப் பிரமாணத்திலும் மரியாள் தேவதாய் என்னும் விடயம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. கி.பி. 553 இல் கொனஸ்தாந்திநோபிள் என்னும் இடத்தில் கூடிய சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில் மரியாள் மரிக்கும் வரை கன்னிப்பெண்ணாகவே இருந்தாள் என்னும் உபதேசம் கொண்டுவரப்பட்டது. மரியாள் உலகில் வாழ்ந்த காலத்தில் எந்த ஒரு பாவமும் செய்யவில்லை என்று சபைப்பிதா ஒகஸ்டீன் (கி.பி. 354-430) தர்க்கித்து வந்தார். இதனால், பிற்காலத்தில் மரியாள் பாவசுபாவமற்றவளாகவே பிறந்தாள் என்னும் உபதேசமும் உருவானது. இது சர்சபைக்குரிய உபதேசமாக இருந்துவந்த போதிலும் 1854இல் சரியான உபதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதேசமயம், மரியாள் மரணமடையாமல் பரலோகத்திற்குச் சென்றாள் என்பதும் ரோமன் கத்தோலிக்க சபையின் உபதேசகமாக உள்ளது. (E. iller & K.R. Samples, The Cult of the Virgin, pp19-76; L.Boettner, Roman Catholicism, pp 72-167; W.Webster, The Church of Rome at the Bar of History, pp. 72-89) ஆனால் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் ரோமன் கத்தோலிக்க சபை மரியாளைப் பற்றி உருவாக்கியுள்ள உபதேசங்களை முரண்படுத்தும் விதத்திலேயே உள்ளது.     

(இவ்வாக்கமானது Dr.M.S. வசந்தகுமார் எழுதிய கர்த்தரின் வார்த்தைகளில் கடின வரிகள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)




தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment