- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday, 7 July 2013

தேவனுடைய இரு சாட்சிகள் (வெளி. 11:3-13)

வெளிப்படுத்தல் புத்தகத்தில் இன்று அதிக சிக்கலை ஏற்படுத்தியுள்ள விடயங்களில் ஒன்று உபத்திரக்காலத்தில் பணிபுரியும் தேவனுடைய இரு சாட்சிகளும் யார் என்பது பற்றிய சர்ச்சையாகும். 'என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.“ (வெளி. 11:3-4) என யோவானுக்கு அறிவிக்கப்பட்டது.  இந்த இரு சாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாக கருதும் கிறிஸ்தவர்களில் ஒருசாரார் உபத்திரக்காலத்தில் பணிபுரியும் தேவனுடைய சாட்சிகளாக எலியாவும் ஏனோக்கும் வருவார்கள் எனக் கூறும் மறுசாரார் எலியாவும் மோசேயுமே உபத்திரக்காலத்து தேவ சாட்சிகள் எனக் கருதுகின்றனர். 

இன்று பெரும்பாலான வேத ஆராய்ச்சியாளர்கள் இருசாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாக கருதுவதில்லை. இருசாட்சிகளும் சபையைப் பிரதிநிதித்துவம் வகிப்பவர்கள் என்றே இவர்கள் கருதுகின்றனர்.(01) இவர்களில் சிலர் இரு சாட்சிகளும் “சபையின் அரச மற்றும் ஆசாரியப் பணிகளைக் குறிக்கின்றனர்”(02) என்றும் சிலர் சபையின் தீர்க்கதரிசனப் பணியில் உள்ளவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்(03) என்றும் ஏனையவர்கள் “சபையின் இரத்தசாட்சிகளை உருவகிக்கின்றனர்(04) எனவும் விளக்குகின்றனர். இருசாட்சிகளும் “சபையிலுள்ள யூதர்களும் புறஜாதியாரும்(05) என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள் பொதுவாக, சபை உபத்திரக்காலத்திலும் உலகில் இருக்கும் என நம்புவதினால் இருசாட்சிகளையும் தனிப்பட்ட நபர்களாகக் கருதாமல் சபையின் பல்வேறு அம்சங்களுக்கான விவரணமாக அவர்கள் இருப்பதாக விளக்குகின்றனர். எனினும் சபை உபத்திரக் காலத்திற்கு முன்பே எடுத்துக் கொள்ளப்படுவதனாலும், இருசாட்சிகளும் உபத்திரக் காலத்தில் பணிபுரியும் இரு நபர்களாகவே வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாலும் இவர்களைச் சபைக்கான உருவகமாக விளக்க முடியாது. “இருசாட்சிகளும் மரித்து உயிர்த்தெழுவதும் இவர்கள் இருவரும் உண்மையான இரு மனிதர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. (06)

இருசாட்சிகளில் ஒருவராக எலியா வருவார் என்ப் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இதற்ககு காரணம் பழைய ஏற்பாட்டின் கடைசித் தீரக்கதரிசனம் இதைப்பற்றி முன்னறிவித்தள்ளமையாகும். “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.“ எனும் தீர்க்கதரிசனம் மல்கியா 4:5 குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கர்த்தருடைய நாள் வருவதற்கு முன் எலியா வருவார் என்பது தெளிவாகின்றது. சில கிறிஸ்தவர்கள், எலியாவின் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நானகனில் நிறைவேறியுள்ளதாகச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தேவனுடைய இருசாட்சிகளில் ஒருவராக எலியா இருக்க முடியாது எனத் தர்க்கிக்கின்றனர். இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நாகனைப் பற்றிக் குறிப்பிடும்போது “எலியா வந்தாயிற்று” எனக் கூறியது உண்மையாயினும் (மத். 17:11-12) மல்கியாவின் தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நாகனுடைய வாழ்வில் பகுதியளவிலேயே நிறைவேறியது. இதனால்தான் யோவானின் பிறப்பை பற்றிய அவனுடைய தகப்பனுக்கு தேவதூதன் அறிவித்தபோது “அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்“ என்று அறிவித்தான். (லூக். 1:17) உண்மையில் யோவான் ஸ்நானகன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் இருந்தானே தவிர அவன் எலியா அல்ல. இதனால் தான் அவன், “நான் எலியா அல்ல” என அறிக்கையிட்டான். (யோவான். 1:21)

இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நானகனை வருகின்றவனாகிய எலியா (மத். 11:14) எனக் குறிப்பிடும்போது, எலியா மறுபடியும் வந்துவிட்டான் என்ற அர்த்தத்தில் அல்ல, மாறாக “கர்த்தருடைய நாளுக்கு முன்பாக எலியா செய்ய வேண்டிய பணியை யோவான் ஸ்நானகன் செய்துள்ளதையே அறியத் தருகின்றார்.(07) மேலும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் கர்த்தருடைய நாள் குறிப்பிட்ட ஒருநாளில் வரும்விதமாக முன்னறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் நிறைவேறுதல் இரு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது அது கர்த்தருடைய இரட்சண்ய நாளையும் கோபாக்கினையின் நாளையும் உள்ளடக்கியுள்ளது. இவ்விரு அம்சங்களும் இயேசுவின் இருவருகையிலும் நிறைவேறுகின்றது. கர்த்தருடைய இரட்சண்யநாள் இயேசுவின் முதல் வருகையில் நிறைவேறியுள்ளது. ஆனால் கோபாக்கினையின் நாள் அவரது இரண்டாவது வருகையின்போதே வரும்(8) எனவே எலியாவின் வருகையைப் பற்றி மல்கியாவின் முன்னறிவிப்பும் இயேசுவின் இவ்விரு வருகையிலும் நிறைவேறும் தீர்க்கதரிசனமாக உள்ளது. இயேசு முதல் தடவை வந்தபோது யோவான் ஸ்நானகனில் பகுதியளவில் நிறைவேறிய  இத்தீரக்கதரிசனம் அவரது மறுவருகையில் முழுமையாக எலியா வருவதன் மூலம் நிறைவேறும். உண்மையில் “யோவான் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய்இந்தபோதிலும் அவன் எலியாவைப் போல பணிபுரியவில்லை“(9). எலியா அநேக அற்புதங்களைச் செய்தார் ஆனால் யோவான் ஒரு அற்புதமும் செய்யவில்லை. வெளிப்படுத்தலில் இரு சாட்சிகளினதும் பணிகளில் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எலியா செய்தவிதமான அற்புதங்களை அதாவது மழையை நிறுத்தவும் அக்கினையைக் கொண்டுவரவும் கூடியதான காரியங்களைச் செய்வது, வரவிருக்கும் இருவரில் ஒருவர் எலியா என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

தேவனுடைய இரு சாட்சிகளில் மற்றவர் மோசே என்று நம்பப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இரு சாட்சிகளும் செய்யும் ஏனைய அற்புதங்களான தண்ணீரை இரத்தமாக மாற்றுதல், வாதைகளைக் கொண்டு வருதல் போன்றவை பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே செய்தவையாகும். (வெளி. 11:6) இரு சாட்சிகளும் யார் என்பதைக் கண்டு கொள்வதற்கு வெளிப்படுத்தலில் இவர்கள் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அற்புதச் செயல்களை பழைய ஏற்பாட்டில் எவர்கள் செய்துள்ளார்களோ அவர்களே வரப்போகிறவர்கள் என எண்ணுவது சரியா என நாம் கேட்கலாம். தேவ வல்லமையைப் பெற்ற வேறு எவராலும் இவற்றைச் செய்ய முடியாதா? என்றும் நாம் வினவலாம். ஆனால் நாம் இவ்விடத்தில் கருத்திற் வேண்டிய முக்கியமான அம்சம் யாதெனில் இவ்விரு சாட்சிகளினதும் ஊழியம் இஸ்ரவேல் மக்களுக்கானது என்பதாகும். (வெளி. 11:8) எனவே இஸ்ரவேல் மக்களால் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் அவர்களிடத்திற்கு  அனுப்ப்படுவார்கள். யூதர்களுடைய பாரம்பரியத்தின்படி மோசேயும் எலியாவுமே பழைய ஏற்பாட்டைப் பிரதிநிதித்தும் வகிப்பவர்களாவர். எனவே தேன் இவர்கள இருவரையும் தன் வார்த்தையை அறிவிப்பதற்காக யூதர்ளிடம் அனுப்புவார். மேலும், இயேசு மறுரூபமாகியபோது மோசேயும் எலியாவுமே அவரோடு இருந்ததும் (மத். 17:1-5) உபத்திரக்காலத்தில் வரும் தேவனுடைய இரு சாட்சிகளும் இவர்களே என்பதற்கான ஒரு ஆதாரமாயுள்ளது. ஏனென்றால் “மறுரூப மலை நிகழ்வானது இயேசுவின் இரண்டாவது வருகைக்கான முன்னடையாளமான சம்பவமாக இருப்பதனால், அங்கு இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த மேசேயும் எலியாவுமே அவரது வருகைக்கு முன்பாக இருசாட்சிகள் என்பதை அறியத் தருகின்றது.((16)

சில கிறிஸ்தவர்கள் மோசே அல்ல மாறாக எலியாவும் ஏனோக்குமே வரவிருக்கும் இருசாட்சிகள் எனும் கருத்துடையவர்களாயிருந்தனர். இதற்கு சுட்டிக்காட்டப்படும் ஆதாரம் இவர்கள் இருவரும் மற்றவர்களைப் போல மரணமடையாமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகும். எபிரேயர் 9:27 இன்படி “ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டுள்ளது.” என்பதைச் சுட்டிக் காட்டும் இவர்கள், மோசே ஏற்கனவே மரித்து விட்டதால், அவர் மறுபடியும் வரமாட்டார் என்றும், மரிக்காமல் எடுத்துக் கொள்ளப்பட்ட எலியாவும் ஏனோக்குமே மறுபடியும் உலகிற்கு வந்து மரிப்பார்கள் என்றும் தர்க்கிக்கின்றனர். எனினும் எபிரேயர் 9:27 எலியாவுக்கும் ஏனோக்குக்கும் மட்டுமல்ல இயேசுவின் வருகையின் போது எடுத்துக் கொள்ளப்படும் பரிசுத்தவான்களுக்கும் பொருத்தமற்றதாகவே உள்ளது. அவர்களும் எபிரேயர் 9:27 இல் சொல்லப்பட்டுள்ளதற்கு முரணாக மரணமடையாமல் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். (1 கொரி. 15:52-58, 1 தெச 4:13-18) 'ஏனோக்கு மரணத்தைக் காணக்கூடாது என்பதற்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டார். (எபி. 11:5) ஆனால் வரவிருக்கும் இரு சாட்சிகளும் மரிப்பார்கள். (வெளி. 11:7-12) எனவே மரணத்தைக் காணுதல் ஏனோக்கிற்குப் பொருத்தமற்றதாகவே உள்ளது.(16) உண்மையில் மோசேயும் எலியாவுமே உபத்திரக்காலத்தில் எருசலேமில் பணிபுரியும் தேவனுடைய இரு சாட்சிகள் என்பதை மறுப்பதற்கில்லை. 

குறிப்புகள்
(1) Henry B.Swete, The Apocalypse of St. John The, New York : Macmillan Publisher, 1906. P.132

(2) F.F. Bruce 'The Revelation to John in A New Testament commentary; Grand Rapids: Zondervan Publishing House, 1969, p. 649

(3) Alan F. Johnson, Revelation in The Expositor's Bible Commentary; Grand Rapids: Zondervan Publishing House, 1981, p. 504

(4) Leon Morris, Revelation in Tyndale New Testament Commentary; Leicester: Inter Varsity Press, 1988 p. 143

(5) Mathias Rissi, 'The Kerygma of Revelation to John' in Interpretation, Vol 22(January 1996). P.16

(6) John F. Walvoord, Revelation in The Bible Knowledge Commentary : New Testament, Wheaton:  Victor Books, 1983, p. 955

(7) Donald A. Hanger, Mathew in The World biblical Commentary, Dallas: Word Books, 1993, p. 308

(8) இதனால்தான் நாசரேத் என்னும் ஊரின் ஜெபாலயத்தில் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை வாசித்து இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று எனக் கூறியபோது அவர்தான் வாசித்த அதிகாரத்தை முழுமையாக வாசிக்காமல் இடையில் நிறுத்திவிட்டார். அவர் வாசித்த பகுதி கர்த்தருடைய நாளின் இரு அம்சங்களையும் கொண்டிருந்தமையால், அவர் தனது முதல் வருகையின்போது கர்த்தருடைய இரட்சண்ய நாள் லூக்கா 4:19 இல் கர்த்தருடைய அநுக்கிர வருஷம்) வந்துவிட்டதை அறிவித்தார். அச்சமயம் கர்த்தருடைய நாளின் அடுத்த பகுதியான கோபாக்கினையின் நாள் வராதமையால் அவர் அதைப்பற்றி தீர்க்கதரிசனத்தை வாசிக்கவில்லை. 

(9) Tim Lahaye, Revelation illustrated and Made Plain, Puna: Word of Life Publication, 1994, p. 151

(10) John F. WalVoord, in Revelation in Bible Knowledge Commentary, p. 956 

(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய வெளிப்படுத்தல் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரி)






தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment