இதன் முதலாம் பாகத்தை வாசிக்க இங்கு அழுத்துங்கள்.
சங்கீதங்களில் இடம்பெற்றிருக்கும் (அ) சேலா (ஆ) இகாயோன் (இ) சிகாயோன் (ஈ) மிக்தாம் (உ) மஸ்கீல் (ஊ) ஆரோகணம் போன்ற கலைசொற்கள் எதற்காக இடம்பெற்றுள்ளன. அவை எவற்றை உணர்த்துகின்றன. இக்கட்டுரை அதனை ஆராய்கின்றது. )
தொடர்புடைய பதிவுகள் :
சங்கீதங்களில் இடம்பெற்றிருக்கும் (அ) சேலா (ஆ) இகாயோன் (இ) சிகாயோன் (ஈ) மிக்தாம் (உ) மஸ்கீல் (ஊ) ஆரோகணம் போன்ற கலைசொற்கள் எதற்காக இடம்பெற்றுள்ளன. அவை எவற்றை உணர்த்துகின்றன. இக்கட்டுரை அதனை ஆராய்கின்றது. )
(ஊ) ஆரோகணம்
சங்கீதப் புத்தகத்தில் 120 முதல் 134 வரையிலான சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்கள் என்னும் தலைப்புடன் உள்ளன. இச்சங்கீதங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் தனியான ஒரு புத்தகமாகவும் ஆரோகண சங்கீதம் என்னும் தலைப்பு ஆரம்பத்தில் முழுப்புத்தகத்திற்கும் பொதுவான தலைப்பாகவும் இருந்திருக்க வேண்டும் என்றும் பிற்காலத்தில் இச்சங்கீதங்கள் ஏனைய சங்கீதங்களுடன் சேர்க்கப்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு சங்கீதத்திற்கும் தனித்தனியாக இத்தலைப்பு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (18)
ஆரோகண சங்கீதங்கள் ஆரம்பத்தில் ஒன்றாகத் தொகுக்கப்படதற்கான காரணம் யாது என்பது பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. சிலர் இச்சங்கீதங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இச்சங்கீதங்களில் “படிமுறையிலான சமதன்மை' (Step-like Parallelism) காணப்படுவதை கருத்திற் கொண்டே இச்சங்கீதங்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஆரோகண சங்கீதம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே இவர்களின் தர்க்கமாகும். இச்சங்கீதங்களில், ஒரு வரியில் உள்ள வார்த்தையை எதிரொலிக்கும் விதத்தில் இன்னுமொரு வார்த்தை அடுத்த வரியில் உள்ளதாகவும், அதை எதிரொலிக்கும் இன்னுமொரு வார்த்தை மூன்றாவது வரியில் இருப்பதாகவும் கூறும் இவர்கள், இவ்விதமாக ஒரு படிமுறையின் அடி்பபடையில் இச்சங்கீதங்களின் வரிகள் அனைத்தும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், இத்தகைய ஒழுங்குமுறையைக் கருத்திற் கொண்டே 15 சங்கீதங்கள் ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சகல சஙகீதங்களிலும் இல்லை. அத்தோடு, இத்தகைய ஒழுங்கு முறையை நாம் வேறு சங்கீதங்களிலும் அவதானிக்கலாம்.
சில வேத ஆராய்ச்சியாளர்கள் ஆரோகணம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதத்தை “மேன்மைப்படுத்துதல்“ என்னும் அர்த்தத்தில் மொழிபெயர்த்து, இச்சங்கீதங்கள், தேவனை மேன்மைப்படுத்திப் புகழும் பாடல்களாக இருப்பதனாலேயே தனியான ஒரு தொகுப்பாக உள்ளதாகக் கூறுகின்றனர். (19) ஆனால், ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்படிருக்கும் பாடல்களில் 15 சங்கீதங்களும், தேவனை மகிமைப்படுத்தும் பாடல்களாக இல்லை. இவற்றில வேறு விடயங்களும் இருப்பதனால் இவ்விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது. உண்மையில் ஆரோகணம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்படுள்ள பதம் “ஏறுதல்“ என்னும் அர்த்தமுடையது. அதாவது இசையில் “சுரவரிசையில் ஏறுவதைக்“ குறிக்கும் பதமே உபயோகிக்கப்பட்டள்ளது. பூகோள ரீதியாக எருசலேம் நகரம் உயரமான இடத்தில் இருப்பதனால், அந்நகரத்திற்கு வேறிடங்களிலிருந்து வருகின்றவர்கள் தாழ்வான இடத்திலிருந்து ஏறிவர வேண்டியதாயிருந்தது. இதனால் சில வேத ஆராய்ச்சியளர்கள், “ஏறுதல்“ என்பதை அடிப்படையாகக் கொண்டு, யூதர்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து தங்களுடைய சொந்த நாட்டுக“கு வரும்போது பாடிய பாடல்களாக இவற்றை கருதுகின்றனர். ஆனால், ஆரோகண சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் சில சங்கீதங்கள் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போவதற்கு முற்பட்ட காலத்தைய சம்பவங்களோடு தொடர்புற்றிருப்பதனால் இவ்விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
யூதர்களுடைய பாரம்பரிய மதநூலான மிஷ்னா இச்சங்கீதங்களை எருசலேம் தேவாலயத்தோடு தொடர்படுத்தியுள்ளது. எருசலேம் தேவாலயத்தில பெண்களின் பிரகாரத்தில் இருந்து இஸ்ரவேலரின் பிரகாரத்திற்குச் செல்வதற்குப் 15 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். இந்தப் படிக்கற்களின் ஏற்றத்தையே ஆரோகணச் சங்கீதங்கள் குறிப்பதாகக் கருதும் மிஷ்னா இச்சங்கீதங்கள் இப்பதினைந்து படிக்கட்டுக்களிலிருந்தும் கூடாரப் பண்டிகையின் முதல்நாள் லேவியர்களினால் பாடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (20) ஆரோகணச் சங்கீதங்களை எண்ணாகமம் 6:24-26 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆரோனின் ஆசீர்வாதத்தோடு தொடர்புபடுத்தும் சில வேத ஆராய்ச்சியாளர்கள், இவ்வாசீர்வாதங்கள் ஆலயத்தின் முன் வாசலில் இருக்கும் படிகளிலிருந்து சொல்லப்பட்டதாக கருதுகின்றனர். (21) எனினும், ஆரோகணச் சங்கீதங்களில் 124ம், 126ம், 131ம் சங்கீதங்கள் எவ்விதத்திலும் ஆரோனுடைய ஆசீர்வாதத்தோடு தொடர்புபடுத்த முடியாத வசனங்களையே கொண்டிருப்பதனால் இவ்விளக்கமும் திருப்தியற்றதாகவே உள்ளது.
ஆரோகண சங்கீதங்களில் 132ம் சங்கீதத்தைத் தவிரந்த ஏனையவைகள் அனைத்தும் சிறிய பாடல்களாகும். இவை அனைத்தும் சீயோனை (எருசலேமைப்) பற்றிய சிந்தையுடன் எழுதப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். 15 ஆரோகண சங்கீதங்களில் 125, 126, 128, 129, 132, 133, 134 என்னும் 7 சங்கீதங்களில் சீயோனைப் பற்றிய குறிப்பு உள்ளது. 122ம் சங்கீதத்தில் எருசலேம் என்ற பெயர் உள்ளது. சங்கீதங்கள் 121, 123, 124 என்பவற்றில் சீயோனுடைய தொடர்புடைய சொற்பிரயோகங்கள் உள்ளன. 130ம், 131ம் சங்கீதங்கள் எருசலேமிலுள்ள தேவனை வழிபடும் மக்களுக்கான அழைப்பைக் கொண்டுள்ளன. 127ம் சங்கீதங்கீதத்தில் “வீடு“ “நகரம்” என்னும் இரு பதங்களும் பிற்காலச் சேர்க்கையாகக் கருதப்படுகின்றது. இவற்றுக்க்குப் பதிலாக ஆரம்பத்தில் ”ஆலயம்“, எருசலேம் என்னும் பதங்களே இருந்தாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதிலிருந்து இச்சங்கீதங்கள் அனைத்தும் சீயோனைப (எருசலேமைப்) பற்றிய பாடல்களாக இருப்பதை அறிந்து கொள்கின்றோம் (22)
ஆரோகண சங்கீதங்கள் சீயோனைப் பற்றிய சங்கீதங்களாக இருப்பதனால் இவை, பண்டிகைகளுக்காக (23) தூர இடங்களிலிருந்து எருசலேமுக்கு வரும் யூதர்கள், வழியில் எருசலேமையும் தேவனையும் பற்றிய சிந்தித்தவர்களாகப் பாடும் சங்கீதங்களாக உள்ளன. (24) சில வேத ஆராய்ச்சியாளர்கள், பண்டிகைக்காக வரும் பக்தர்கள் ஊர்வலமாக எருசலேம் தேவாலயத்திற்கு ஏறிவரும்போது பாடும் பாடல்களாக இவற்றைக் கருகின்றனர். (25) பாடல்களுடனான இத்தகைய ஒரு ஊர்வலம் பற்றி ஏசாயா 30:29 குறிப்பிடப்பட்டுள்ளது. (26) எனவே, ஆரோகண சங்கீதங்கள் பண்டிகைக்காக வரும் பக்தர்கள் பாடும் பாடல்களாகவே இருந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
Footnote and Reference
(18) மூலமொழியில் 121ம் சங்கீதத்தின் இலக்கண ரீதியாக இருக்கும் வித்தியாசமே வேத ஆராய்ச்சியாளர்களின் இத்தகைய கருத்திற்கான காரணமாகும். (L.C. Allen, Psalms 101-150 : Word Biblical Commentary Volume 21, pp. 146, 219)
(19) M. Dahood, Psalms : Anchor Bible Commentary Volume III, P. 195
(20) Mishnah, Middoth. 2:5, Sukka. 5.4.
(21) L.J.Lirbreich, 'Songs of Ascents & the Priestly Blessings'' pp 33-36
(22) L.C. Allen, Psalms 101-150 : Word Biblical Commentary, p 220
(23) யூத நூலின்படி,அவர்கள் கிழமைதோறும் ஓய்வுநாளையும் மாதந்தோறும் பௌர்ணமியையும்ஈ வருடந்தோறும் பஸ்கா பண்டிகையையு்ம், பெந்தகோஸ்தே பண்டிகையையும், கூடாரப் பண்டிகையையும் ஆசரிக்க வேண்டியவர்களாய் இருந்தனர். அக்காலத்தில், எருசலேமை விட்டுத் தூர இடங்களில் வாழந்த யூதர்கள், வருடத்திற்கு ஒரு தடவை பண்டிகையை ஆசரிப்பதற்காக எருசலேமுக்கு வருவதைத் தங்கள் பழக்கமாகக் கொண்டிருந்தனர். (E.Feruson, Backgrounds of Early Christianity p. 521)
(24) L.C. Allen, Psalms 101-150 : Word Biblical Commentary, p. 220)
(25) S. Mowinckel, The Psalms in Israel’s Worship Volume 11, p. 208
(26) C.C. Keet, A Study of the Psalms of the Ascents, p. 16.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
கண்டிப்பாக செய்கிறேன் சகோதரரே. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
ReplyDeleteசிறப்பான கட்டுரை, மிகவும் பயுடையதாக இருக்கிறது.
ReplyDeleteThis declaration is very usfull
ReplyDeleteArumaiyana vilakkam
ReplyDelete