வேதத்தை சரியாக விளங்கிக்கொள்ள நாம் வேதம் தனக்குள் கொண்டுள்ள சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்விதிகள் நாம் வேதத்தைத் தவறாக விளங்கிக் கொள்ளாமலிருக்கத் துணை செய்யும்.
அவ்விதிகளாவன:
1. வேதம் தனக்கெதிரானதும், முரணானதுமான எந்தப் போதனைகளையும் தன்னில் கொண்டிருக்கவில்லை. இது முதலாவது விதி. இவ்வாறு கூறுவதன் மூலம் வேதத்தில், அதன் போதனைகளுக்கெதிரான முரணான எந்தப் போதனைகளையும் நாம் ஒருபோதும் பார்க்க முடியாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வேதத்தின் போதனைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பொருந்தி, ஒன்றுக்கொன்று இணைந்துபோவதாக அமைந்திருக்கின்றன. அவ்விதமாகவே கர்த்தர் வேதத்தை நமக்களித்திருக்கிறார். வேதத்தின் எந்தவொரு பகுதியிலாவது அதன் ஏனைய பகுதிகளில் காணப்படும் போதனைகளுக்கு முரணானதொரு போதனை இருப்பதுபோல் நமது பார்வைக்குத் தென்பட்டால் நமது பார்வையில்தான் முரண்பாடு இருக்குமே தவிர வேதத்தில் இல்லை. முரண்பாடுள்ளதாக நமது பார்வைக்குத் தென்படும் அந்தப்பகுதியை அதோடு தொடர்புடைய தெளிவான வேறு பகுதிகளின் அடிப்படையில் ஆராய்ந்து படித்தால் அந்தப் பகுதியின் போதனையை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
வேதத்தைப்பற்றிய இந்த உண்மையை மனதில் வைத்துக்கொண்டு நாம் வேதத்தைப் படித்தால் வேதத்தின் ஏனைய பகுதிகளுக்கு முரணான விதத்தில் எந்தப் போதனையையும் வேதத்தின் ஒரு பகுதியில் இருந்து உருவாக்குவதை நாம் தவிர்த்துக்கொள்ள முடியும்.
2. வேதப்பகுதிகளை அவற்றின் சாதாரண இலக்கண, வசன அமைப்புகளின் (Study according to the plain meaning of the Scripture) படிக்கும் போது அவ்வேதப் பகுதியில் யார் என்ன கூறுகிறார்கள்? எத்தகைய மொழி நடையில் அதாவது சாதாரண மொழி நடையிலா? அல்லது உருவக, உவமை நடையில் அது அமைந்துள்ளதா? அப்பகுதி ஒரு வரலாற்றுச் சம்பவமா? தீர்க்கதரிசனமா? அல்லது அது கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளதா? நடந்து கொண்டிருக்கும் அல்லது நடந்து முடிந்த ஒரு காரியத்தை விவரிக்கிறதா? என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு வேதப்பகுதியை நாம் வாசிக்கும் போது அது சாதாரணமாக இலக்கண, வசன அமைப்பின்படி எதைக் கூறுகிறதோ அதையே நாம் விளங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு அதற்குள் ஏதோ மறை பொருள் இருப்பதாக நாம் எண்ணி மயங்கக்கூடாது. ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கர்த்தர் தனது வார்த்தையின் மூலம் வெளிச்சத்தைத் தோற்றுவித்தார் (ஆதி. 1:3) என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் மறைபொருள் எதுவும் இல்லை. அதை வேதம் போதிக்கும் விதத்திலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மாறாக அதனை நாம் உருவகப்படுத்திப் போதிக்கவோ, அதற்கு வேறு பொருள் கொடுக்கவோ முயலக்கூடாது. அதேவேளை, உருவகமாகவும் உவமையாகவும் (யோ. 10, 15), தீர்க்கதரிசனமாகவும் (மத். 13) காணப்படும் பகுதிகளை அவற்றின் அடிப்படையிலேயே படித்து விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு வேதப்பகுதி சாதாரணமான மொழி வழக்கில் காணப்படுகிறதா? அல்லது உருவகமா? உவமையா? தீர்க்கதரிசனமா? என்பதை வேதமே தீர்மானிக்கிறது. அதை நாம் தீர்மானிக்கக் கூடாது. வேதத்தின் எந்தவொரு பகுதியையும் அந்தப்பகுதியின் இலக்கிய, இலக்கண அமைப்பின்படியே ஆராய வேண்டும்.
3. வேதப்பகுதிகளை அவை காணப்படும் பகுதியின் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். (Always study the text according to its context.) வரலாறு, வேத விளக்க விதிமுறைகள் கலாச்சாரம், மொழி ஆகியவற்றை வேதத்திலிருந்து நம்மால் பிரிக்க முடியாது. இவற்றின் மத்தியிலேயே நாம் கர்த்தரின் வெளிப்படுத்தலைக் காண்கிறோம். வேதத்தைப் படிக்கும்போது இவற்றிற்கும் வேதத்திற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்ற மனப்போக்கில் படிக்க முயலக்கூடாது. உதாரணமாக, பழைய ஏற்பாடு ஆரம்பம் முதல், கர்த்தர் தோற்றுவிக்கும் ஒரு நாட்டையும் அதன் மூலம் அவர் செயல்படுத்த முனையும் நோக்கங்களையும் தெரிவிக்கின்றது. பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது இதனை மறந்துவிட்டு நாம் படிக்க முயலக் கூடாது. அத்தோடு அங்கே தீர்க்கத்தரிசனப் பகுதிகளும் காணப்படுகின்றன. புதிய ஏற்பாட்டில் இதேபோல் கிறிஸ்துவின் போதனைகளில் உவமைகளை நாம் பார்க்கின்றோம். உருவகங்களையும் பார்க்கிறோம். இவற்றை நாம் கவனத்தில் கொள்வது அவசியம். இப்பகுதிகளை நாம் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டுமானால் அவை காணப்படும் பகுதிகளை ஆராய்தல் அவசியம். உதாரணமாக தீர்க்கதரிசனப் பகுதிகளைப் பார்ப்போமானால் அவை தீர்க்கதரிசனம் என்று நாம் அறிந்து கொள்ளும்படி அவை காணப்படும் பகுதிகளே அதை நமக்குத்தெரிவிக்கும். கிறிஸ்துவின் உவமைகள் காணப்படும் பகுதிகளைப் பார்த்தால் அங்கேயும் கிறிஸ்துவே, தான் உவமைகளின் மூலமாகப் போதிக்கப்போவதாகத் தெரிவிப்பதைப் பார்க்கலாம். இவற்றைக் கவனத்தில் கொண்டே அப்பகுதிகளைப்படிக்க வேண்டும்.
முக்கியமாக ஒவ்வொரு வேதப் பகுதியையும் படிக்கும்போது, அதற்கு முன்னாலும் பின்னாலும் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்று எப்போதும் பார்ப்பது அவசியம். அதாவது, அப்பகுதி எங்கு ஆரம்பமாகி எங்கு முடிகிறது என்றுபார்த்து அதன் அடிப்படையில் அப்பகுதியைப் படிக்கவேண்டும். இதன் மூலம் நாம் அப்பகுதியைப்பற்றிய கூடுதலான விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும், சில வேளைகளில் ஒரு வேதப்பகுதியின் சூழ்நிலை அல்லது சந்தர்ப்பப் பொருத்தத்தை (context) விளங்கிக்கொள்ள, அந்த வேதப்பகுதி காணப்படும் நூலின் பல அதிகாரங்களையும் அல்லது முழு நூலையுமே படிக்க நேரிடும். இவ்வாறு ஒரு பகுதியின் சந்தர்ப்பப் பொருத்தத்தை அறிந்துகொள்ள முயலாமல் நாம் வேதத்தைப் படிக்க முயலக்கூடாது.
இன்று பெந்தகொஸ்தே இயக்கம் மட்டுமல்லாது சுவிசேஷ இயக்கத்தாரும் கூட வேதத்தைப் படிக்கப் பயன்படுத்த வேண்டிய மிகவும் அவசியமான இச்சாதாரண வழிமுறைகளைக் கூடப் பயன்படுத்துவதில்லை. இதனால் மனம்போன போக்கில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்க முற்படுவதோடு கேட்கும் மக்களையும் வேத ஞானமற்ற குருடர்களாக தொடர்ந்து இருட்டில் வைத்திருக்கும் நிலைமையை எங்கும்பார்க்கிறோம்.
4. வேதப்பகுதிகளை எப்போதும் ஏனைய வேதப்பகுதிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும் (Compare Scripture with Scripture).வேதத்தின் எந்தவொரு பகுதியும் போதிக்கும் சத்தியத்தை நாம் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று அறிய நாம் அப்பகுதியை அதே விதமான போதனையைக் கொண்டுள்ள வேதத்தின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டுப் படித்துத் தீர்மானிக்க வேண்டும். இதன் மூலம் வேதபோதனைகளைத் தவறான முறையில் விளங்கிக்கொள்ளும் ஆபத்தைத் தவிர்த்து கொள்ளலாம். இம்முறையை ஆங்கிலத்தில் “Analogy of Faith’ என்று அழைப்பார்கள். ஒரு வேத சத்தியத்தை அதே சத்தியத்தைப் போதிக்கும் வேதத்தின் பல பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு விளக்கும்போது அச்சத்தியம் உறுதிப்படுத்தப்படுகின்றது. வேத வல்லுனரான ஏ. டபிள்யூ. பின்க் (A.W. Pink) இதை அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். இதன் மூலம் வேதபகுதிகளுக்கு நாம் நினைத்தவிதத்தில் பொருள் கூற முற்படும் ஆபத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். உதாரணமாக, இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் அதை இழந்து போகலாம் என்ற தவறான போதனையை எடுத்துக் கொள்வோம். இதைப் போதிப்பவர்கள் இதற்கு உதாரணமாக அடிக்கடி எடுத்துக் காட்டும் வேதபகுதி எபிரெயர் 6:4-6 ஆகும். ஆனால் வேதத்தை முறையாகப் படித்துப் பார்த்தால் முழு வேதமும் ஒருவர் தான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை இழந்து போவதில்லை என்று உறுதியாகப் போதிப்பதைப் பார்க்கலாம். ஆகவே இப்பகுதி வேதத்தின் ஏனையபகுதிகள் போதிக்கும் சத்தியத்திற்கு முரணானதைப் போதிக்கவில்லை என்ற முடிவுக்கு வரலாம்.
அத்தோடு இப்பகுதி ஒருவர் இரட்சிப்பை இழந்து போகலாம் என்ற போதனையைத் தருவது போல் தென்பட்டாலும், உண்மையில் அது அமைந்துள்ள சந்தர்ப்பப் பொருத்தத்தின் அடிப்படையில் பார்க்கும்போது வேறொரு உண்மையையே விளக்குகிறது என்பதும் புலனாகும். அதாவது, வேத பிரசங்கத்தின் பாதிப்புக்குள்ளாகி பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் வந்து, வரப்போகும் காரியங்களைப்பற்றிய அறிவையும் கூட பெற்றுக்கொண்ட போதும் ஒருவர் உண்மையில் கிறிஸ்தவராக இல்லாமலிருக்க முடியும் என்றே இப்பகுதி போதிக்கிறது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட அனுபவங்களை எந்தவொரு மனிதனும் இரட்சிப்பை அடையாமலேயே அனுபவிக்க முடியும். ஆனால் இத்தகைய தற்காலிகமான அனுபவங்களுக்கும், நிரந்தரமாக ஒருவர் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டதனால் அனுபவிக்கக்கூடிய அனுபவங்களுக்கும் பெரும் வித்தியாசமுண்டு. தற்காலிகமாக வேதத்தில் ஏற்படும் ஆர்வம், கிறிஸ்துவில் ஏற்படும் பற்றுதல் ஆகியவை நல்லவையே ஆயினும் அவை கிறிஸ்துவை அறிந்துகொண்ட அனுபவத்தால் உருவானவையாய் இல்லாவிட்டால் நிலைத் திருக்க முடியாது. இதையே விதைப்பவனின் உவமையின் மூலம் (மத். 13) கிறிஸ்து நமக்குப் புலப்படுத்துகிறார்.
விதைப்பவன் விதைக்கும் சில விதைகள் நிலத்தில் சில காலம் தங்கியிருந்து முளைவிடுவதைப் போல கர்த்தரை உண்மையில் அறியாமலேயே சிலரால் அவரில் ஆர்வம்கொள்ள முடிகிறது. ஆனால் முளைவிடும் விதை எவ்வாறு ஆதவனின் கதிர்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமலும், சுற்றி வளரும் களைகளை எதிர்த்து நிற்க முடியாமலும், வளர முடியாமலும் வாடி வதங்கி இறந்து போகின்றதோ அதே போல் இவர்களும் உலகப் பற்றினாலும், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்ப்புகளினாலும் கிறிஸ்துவில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை இழந்து போகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவன் இவ்வாறு நடக்க மாட்டான். அவன் இரட்சிப்பை நிச்சயமாகப் பெற்றுக் கொண்டிருப்பதாலும், அவனுள் ஆவியானவர் நிரந்தரமாக இருப்பதாலும் அவனால் கிறிஸ்துவை இழக்க முடியாது. இவ்வாறாக வேதத்தின் மற்ற பகுதிகளோடு இப்பகுதியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்பகுதி உண்மையில் எதைப் போதிக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது.
வேதத்தைப் படிக்க இவ்விதிகளை நாம் முறையோடு பின்பற்றினால் கர்த்தர் போதிக்கும் சத்தியங்களை நாம் நல்ல முறையில் புரிந்துகொள்ளலாம்.
1 கொரிந்தியர் 12-14 அதிகாரங்கள் ஆவிக்குரிய வரங்களைப்பற்றி எத்தகைய போதனையைத் தருகின்றன என்பதை நாம் ஆராய்வதற்கு முன் வேதத்தின் தன்மையைப் பற்றியும், அதனைப் படிக்கப் பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் நாம் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். வேதம் என்றால் என்னவென்று தெரியாமல் வேதத்தைப் படித்து விளங்கிக்கொள்ள முயல்வது கல்லில் நாருரிக்க முயல்வது போலாகும். [.......] இயக்கத்தார் நாம் இதுவரை பார்த்தவிதத்தில் வேதத்தை விளக்குவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் வேதம் ஒரு மந்திரவாதியின் கையில் இருக்கும் கோலைப் போலவும், வசிய மருந்தாகவுமே தெரிகிறது. இதனால் அவர்கள் தமது மனம்போன போக்கில் வேதத்தைப் பயன்படுத்தி உலகப்பிரகாரமான ஒரு கிறிஸ்தவத்தை உருவாக்கியுள்ளார்கள். சொந்த அனுபவங்களுக்கும், மனக்கிளர்ச்சிகளுக்கும், முட்டாள்தனத்திற்குமே இக்கூட்டத்தாரால் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இல்லாவிட்டால் மனிதன் இணையத்தின் (Internet) மூலம் உலகத்தையே தனது வீட்டிற்குள் கொண்டுவந்திருக்கும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஆராதனைக் கூட்டங்களில் ஆத்மீக அனுபவம் என்ற பெயரில் நாயைப்போல் குரைக்கவும், குரங்கைப் போல் சத்தமிடவும் முற்படுவானா?
இவ்வாக்கமானது ஆர். பாலா அவர்கள் எழுதிய ஆதி சபையின் அற்புத வரங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்.
வெளியிடு : - சவரின் கிரேஸ் வெளியீடுகள்
போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment