இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் புரிந்து கொள்வதற்குச் சிரமானதாக இருக்கும் இன்னுமொரு வாக்கியம் அவர் தாவீதின் காலத்தில் எருசலேமில் இருந்த பிரதான ஆசாரியனைப் பற்றி குறிப்பிட்ட விடயமாகும். மாற்கு 2:26 இல் தாவீதைப் பற்றி இயேசு கிறிஸ்து குறிப்பிடும்போது “அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். இயேசு கிறிஸ்து இவ்வசனத்தில் குறிப்பிடும் சம்பவம் பழைய ஏற்பாட்டில் 1 சாமுவேல் 21:1-6 இல் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அச்சம்பவத்தில் தாவீதின் காலத்தில் “அகிமெலேக்கு“ என்பவனே பிரதான ஆசாரியனாக இருந்த்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இயேசுவோ “அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில்“ என்று கூறியுள்ளார். இதனால், இயேசு பழைய ஏற்பாட்டை சரியாக அறியாதவராக, அறிவீனமான முறையில் தவறான தகவல்களைத் தந்துள்ளார் என அநேகர் தர்கித்து வருகின்றனர்.
இயேசு கிறிஸ்து தாவீதைப் பற்றி குறிப்பிடும் இச்சம்பவம் மத்தேயுவிலும் லூக்காவிலும் இடம்பெற்றுள்ளபோதிலும் இயேசுவின் கூற்றிலுள்ள பிரதான ஆசாரியனைப் பற்றிய விடயம் இச்சுவிஷேசங்களில் இடம்பெறவில்லை. (மத். 12:1-8, லூக். 6:1-5) இதனால் மாற்கு தவறுதலாக இயேசுவின் கூற்றை எழுதியுள்ளார் என சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.(1) ஆனால், வேதாகம ஆசிரியர்கள் தேவனுடைய ஆவியின் வழிநடத்துதலினால் தம் புத்தகங்களை எழுதியுள்ளமையால்(2) இயேசு கிறிஸ்து கூற்றை மாற்குவின் தவறுதலால் உருவானதாக்க் கருதமுடியாது. அதேசமயம் இன்று இருக்கும் மாற்கு சுவிசேஷத்தின் பெரும்பாலான கையொழுத்துப் பிரதிகளிலும் பிரதான ஆசாரியனுடைய பெயர் குறிப்பிடப்படாதமையி னால்(3) மாற்குவின் சுவிசேஷத்தில் உள்ள ஆசாரியனின் பெயர் பிற்காலத்தில் வேதத்தைப் பிரதி பண்ணியவர்களினால்(4) ஏற்படுத்தப்பட்ட ஒரு தவறுதல் என்பது சிலரது தரக்கமாயுள்ளது(5)
இயேசு கிறிஸ்து கூற்றுக்கும் அவர் குறிப்பிடும் சம்பவம் இடம்பெறும் 1 சாமுவேல் புத்தகத்திற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வேத ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான முறைகளில் விளக்கியுள்ளனர். தாவீது அகிமெலேக்கிடம் வந்தபோது பிற்காலத்தில் ஆசாரியனாக நியமிக்கப்பட்ட அவனது மகன் அபியத்தாரும் அங்கிருந்தான் என்றும், இவர்கள் இருவரும் சேர்ந்தே தேவசமுகத்து அப்பங்களைத் தாவீதுக்குக் கொடுத்தனர் என்றும் சிலர் கருதுகின்றனர். (6). இதன்படி 1 சாமுவேல் புத்தகத்தை எழுதியவர், அச்சமயம் ஆசாரியனாயிருந்த அகிமெலேக்கின் பெயரைக் குறிப்பிட இயேசு அச்சமயம் அங்கிருந்து, அபியத்தாரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இச்சம்பவம் நடைபெற்றபோது அபியத்தார் அகிமெலேக்குடன் இருந்தது பற்றியோ இல்லையென்றால் இருவரும் சேர்ந்து அப்பங்களை தாவீதுக்கு கொடுத்து பற்றியோ சாமுவேல் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. (1 சாமு 21:1-10) மேலும் “எழுதப்பட்டதை நீங்கள் வாசிக்கவில்லை?“ என இயேசு கேட்பதிலிருந்து, அவர் சாமுவேல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விடயத்தையே குறிப்பிட்டுள்ளது தெளிவாகின்றது. எனவே, இயேசு சாமுவேலில் எழுதப்படாத விடயத்தை மாற்குவில் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறமுடியாது.
பழைய ஏற்பாட்டில் அகிமெலேக்கும் அபியத்தாருக்கும் இடையேயுள்ள உறவு முறை வித்தியாசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு தகப்பனுக்கும் மகனுக்கும் இவ்விரு பெயர்களும் இருந்தன என்றும்(7) இதனால், ஒருவரே இருபெயர்களால் சாமுவேலிலும் மாற்குவிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்றும் சில வேத ஆராய்ச்சியாளர்கள் தர்க்கிக்கின்றனர்.(8) 2 சாமுவேல் 8:7, 1 நாளாகமம் 18:16, 24:3,6,31 இல் அகிமெலேக் அபியத்தாரின் மகன் எனக் குறிப்பிடப்பட்டிருக்கையில், 1 சாமுவேல் 22:20, 23:6, 30:7 போன்ற வசனங்கள் அகிமெலேக்கின மகனே அபியத்தார் எனக் கூறுகின்றன. ஆனால் தகப்பனும் தகனும் ஒரே பெயருடையவர்களாய் இருந்தார்கள் எனும் கருத்து சாமுவேலுக்கும் மாற்குவுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை விளக்குவதாய் இல்லை. மேலும், அக்காலத்தில் தகப்பன் தன் பெயரை மகனுக்கு கொடுக்கும் பழக்கம் அல்ல மாறாக “ஒருவன் தன் மகனுக்குத் தன்னுடைய தகப்பனின் பெயரைக் கொடுக்கும் முறையே இருந்துள்ளது(9) எனினும் இது அபயித்தாருக்கும் அகிமெலேக்குக்குக்கும் இடையிலான உறவு பற்றி பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயத்தை விளக்குவதாய் உள்ளதே தவிர, மாற்குவிலுள்ள இயேசுவின் சிக்கலைத் தீர்ப்பதாய் இல்லை.
மாற்கு 2:26 குறிப்பிடப்பட்டுள்ள இயேசுவின் கூற்று மாற்கு 12:26 ஐப் போன்ற ஒரு வாக்கியமாகும் என சில தேவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்களுடைய கருத்தின்படி மாற்கு 12:26ல் “முற்செடியைக் குறித்துச் சொல்லிய இடத்தில் மோசேயின் ஆகமத்தில் அவனுக்கு சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?” என இயேசு கேட்பதைப் போலவே மாற்கு 2:26ல் உள்ள இயேசுவின் கூற்றும் அபியத்தார் எனும் பிரதான ஆசாரியனைப் பற்றிய இடத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா? என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும்(10) அக்கால வேதாமகங்களில் அதிகார வசனப் பிரிவுகள் இராதமையால் “ஒரு வேதப் பகுதியைக் குறிப்பிட அப்பகுதி யாரைப் பற்றி சொல்கின்றதோ, அவருடைய பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதே வழக்கமாயிருந்தது,(11) இதனால் இயேசு அபியத்தாரைப் பற்றிய இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தையே மாற்கு 2:26ல் சுட்டிக் காட்டியுள்ளார். என்பது இவர்களது தரக்கமாயுள்ளது.(12) ஆனால் அபியத்தாரின் பெயர் இயேசு குறிப்பிடும் 1 சாமுவேல் 21ம் அதிகாரத்தில் இடம்பெறவில்லை. அக்கால இலக்கியங்களில், ஒருவரைப் பற்றிய பகுதியில் அவரது பெயர் அப்பகுதியின் ஆரம்பத்திலேயே இடம் பெறும். எனவே அபியத்தாரின் பெயர் 1 சாமுவேல் 22:20 லேயே முதல் தடவையாக இடம் பெறுவதனால் 21ம் அதிகாரத்தை அபியத்தாரைப் பற்றிய பகுதியாகக் கருத முடியாது. மேலும் மாற்கு 2:26ஐப் போல மொழியாக்கவும் முடியாது என்பதை மூலமொழியில் இவ்வசனத்தின் வாக்கிய அமைப்பு அறியத் தருகின்றது.(13) இயேசுவின் கூற்றில், “எப்பி அபியத்தார் அரக்க்கிரெயொஸ்“ (Epi Abiathar archiereros) எனும் கிரேக்கச் சொற்பிரயோகம் “பிரதான ஆசாரியனாகிய அபியத்தாரின் காலத்தில்” எனும் அர்த்தமுடையது. இதை, மாற்கு 12:26 ஐப் போல, “பிரதான ஆசாரியனாகிய அபியத்தாரைப் பற்றி சொல்லிய இடத்தில்“ என மொழிபெயர்க்க முடியாது(14) ஏனென்றால், கிரேக்க மொழி இலக்கணத்தின்படி “எப்பி” (Epi) எனும் பதம் இயேசுவின் கூற்றில் உள்ளதைப் போல “ஜெனிட்டிவ்” எனும் வேற்றுமையுறுப்புடன் சேர்ந்து வரும்போது “காலத்தில்“ என்றே அர்த்தம் தரும். (15) எனவேஇதை “இடத்தில்” என மொழிபெயர்க்க முடியாது.
உண்மையில் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கவனமாக அவதானித்துப் பார்த்தால் அவரது கூற்றை சரியான விதத்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். “அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில்“ எனும் இயேசுவின் சொற்பிரயோகம், “அபியத்தார் வாழ்ந்த காலத்தைக் குறிக்கின்றதே தவிர அது அவன் பிரதான ஆசாரியனாய் பணியாற்றிய காலத்தைக் குறிக்கவில்லை”(16) வேதாகமத்தின் சில கையெழுத்துப் பிரதிகளில் இத்தகைய அர்த்ததைத் தரும் விதத்தில் இயேசுவின் கூற்று “பிற்காலத்தில் பிரதான ஆசாரியனாகிய அபியத்தாரின் காலத்தில் என எழுதப்பட்டுள்ளது.”(17) இன்று ஆங்கில உலகில் பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்படும் புதிய சர்வதேச மொழிபெயர்ப்பும் (NIV) இத்தகைய அர்த்த்த்தையே தருகின்றது. 1 சாமுவேல் 21ம், 22ம் அதிகாரங்களை வாசிக்கும்போது, தாவீது பிரதான ஆசாரியனாகிய அகிமெலேக்கிடமிருந்து தேவசமுகத்து அப்பங்களை வாங்கி புசித்த பின்னர் (1 சாமு 21:1-6), சவுல் அகிமெலேக்கைக் கொன்று விடுகிறான். (1 சாமு 22:17-19) அச்சமயம் அகிமலேக்கின் மகன் அபியத்தார் மட்டுமே சவுலின் சேவகருக்குத் தப்பி தாவீதிடம் ஓடிப்போகிறான். (1 சாமு 22:20) அதன் பின்னர் அபியத்தாரே பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டான். அத்தோடு, அகிமெலேக்கைவிட அபியத்தாரே தாவீதின் காலத்தைய பிரதான ஆசாரியனாகப் புகழடைந்தவன். (1 சாமு 26:6,9, 30:7, 2 சாமு 8:17) இதனால் தாவீதின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட காலம் அபியத்தாரின் காலமாகவே கருதப்பட்டது. எனவே இயேசு, “அகிமெலேக்கிடமே தாவீது தேவசமுகத்தப்பங்களை வாங்கிச் சாப்பிட்டபோதிலும், அச்சமயம் அபியத்தாரும் உயிரோடிருந்தமையால், அதை அபியத்தாரின் காலத்தில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். (18) இதிலிருந்து இயேசு அறியாமையிலோ இல்லையென்றால் அறிவீனமாகவோ எதுவும் கூறவில்லை என்பது தெளிவாகின்றது.
குறிப்புகள்
1. Keil and Delizsch, Commentary on the Old Testament, p. 218
2. வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டுள்ளது“ “தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசினார்கள்“ எனும் வசனங்களின் அர்த்தம், வேதாகம ஆசிரியர்கள், தேவனுடைய பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக, ஆவியானவரின் கட்டுப்பாட்டின் கீழிருந்து, ஆவியானவரின் வழிடத்துதல் மூலம் வேத வசனங்களை எழுதினார்கள் என்பதாகும்.
3. Mark in The Expositor’s Bible Commentary, p. 638
4. வேதாகமானது மோசேயின் காலம் முதல் கி.பி. 15ம் நூற்றாண்டில் அச்சியத்திரம் கண்டுபிடிக்கப்படும் வரை கைகளால் பிரதி பண்ணப்படுவதன் மூலமே மேலதிகப் பிரதிகள் தயாரிக்கப்பட்டன. இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆசிரியர் எழுதிய “புனித வேதாகமத்தின் புதுமை வரலாறு என்னும் நூலைப் பார்க்கவும்
5. Vincent Taylor, The Gospel According to St. Mark, London, 1953, p. 217
6. William Hendrickson, New Testament Commentary, The Gospel of Mark p. 107
7. Archibald T. Robertson, Word Pictures in the New Testament Vol 1 : Nashville : Boardman Press, 1930, p. 273
8. R.C.H. Lenski, The Interpretation of St. Mark’s Gospel, p. 127
9. Ronald F. Youngblood, 1 & 2 Samuel in The Expositor’s Bible Commentary, p 911
10. J.W. Wenham, Mark 2:26 in Journal of Theological Studies, Vol:1 [1950], p 156
11. James A. Brooks, Mark in The American Commentary, Nashville : Boardman Press, 1991
12. William L. Lane, The Gospel of Mark in The New International Commentary on the New Testament Grand Rapids”: Eerdmans Publishing Company, 1974, p. 116
13. Robert A. Guelich, Mark in Word Biblical Commentary. P. 122
14. ----
15. W.F. Arndt and F.W. Gingrich A. Greek-English Lexicon of the New Testament, Chicago : University of Chicago, 1957, p. 286
16. Norman, Geisler & Thomas Howe, when Critics Ask p. 370
17. Walter W. Wesel Mark in The Expositor’s Bible Commentary, p. 638
நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் - DR. M.S. வசந்தகுமார்.
கட்டுரையாசிரியர் - DR. M.S. வசந்தகுமார்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment