- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Showing posts with label திருமறையை விளக்கும் முறை. Show all posts
Showing posts with label திருமறையை விளக்கும் முறை. Show all posts

Monday, 9 December 2013

திருமறையை விளக்கும் முறை–அத். 10–தீர்க்கதரிசனம் - II(இறுதிப்பகுதி)


1. தீர்க்கதரிசனப் பகுதிகளை விளக்க சில விதிகள்

(அ) இறைவாக்கினர் தங்கள் தீரக்கதரிசன தூதுகளை அறிவித்த சூழ்நிலைகளை ஆராய்ந்தறிய வேண்டும்

(ஆ) பொதுவாக தீர்க்கதரிகள் பயன்படுத்துகின்ற உருவகங்ள் ஒப்பனைகள் ஆகிய இவைகளின் கருத்து விளக்கம் ஆகியவை என்னதென்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.

(இ) ஒரு தீர்க்கதரிசி கூறும் செய்தியை அதற்கு ஒத்த தீர்க்கதரிசன பகுதிகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
உதாரணம்
கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையாயுமாயிருக்கும். (ஏசா. 4:2)
ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து ஒரு கிளை (ஏசா. 11:1)
தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளை (எரே. 23:6; 33:15,16)
இதோ கிளை எனப்பட்ட என் தாசன் (சக. 3:8)
இதோ ஒரு புருஷன், அவருடைய நாம்ம் (சக. 6:12)

(ஈ) புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவேறிய சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும்.

(உ) புதிய ஏற்பாட்டுப் பணியாளர்கள் (இயேசு கிறிஸ்து, பேதுரு, யாக்கோபு, பவுல்) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன பகுதிகளைப் பயன்படுத்திய முறைகளைக் கவனிக்க் வேண்டும். 

இக்கடைசி விதி மிகவும் முக்கியமானது. புதிய ஏற்பாட்டு அடியாளர்கள் (தேவாவியின் ஏவுதலால் பேசியவர்கள் என்பதை மறவாதீர்கள்) பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனப் பகுதிகளை மேற்கோளாகப் பயன்படுத்யபோது அந்தத் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவச் திருச்சபையிலும் அந்தத் திருச்சபையின் வரலாற்றிலும் அனுபவத்திலும் நிறைவேறி வருகின்றதாகக் கூறினர் என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். 

உதாரணமாக
யோவேல் 2:28-29 பெந்தகோஸ்தே நாளில் நிறைவேறியதாகப் பேதுரு கூறுகின்றார். (அப். 2:16-17)
ஆமோஸ் 8:11,12 விழுந்துபோன தாவீதின் கூடாரம் எங்கும் நிறுவப்பட்டு வருகின்ற திருச்சபையின் மூலம் மறுபடியும்…. செவ்வாயாக நிறுத்தப்பட்டு வருகிறதாக யாக்கோபு கூறினார். (அப். 15:16,17)
யாத். 19:5,6) இறைமக்களாகிய “இஸ்ரவேலரைப் பற்றிக் கூறப்பட்டதெல்லாம் பேதுரு 2:9 இறைமக்களாகிய திருச்பைக்கு பொருத்தமானது என்று பேதுரு கூறப்பட்டுள்ளன. (ரோமர் 9:25)


2. தீர்க்கதரிசனப் பகுதிகளை விளக்கும் முறைகள்

(அ) ஆன்மீகப் பொருள் காணும்முறை (Spiritualizing Method)
(i) சொல்லுக்கு சொல் அப்படியே பொருள் படுத்துவது சரியான முறையன்று என்பர் சிலர். மேலே நாம் கண்ட இக்கருத்தை உறுதிப்படுத்துகின்ற சில எடுத்துக்காட்டுக்களை முன்பே பார்த்தோம் யாக்கோபு, பேதுரு, பவுல் முதலிய அருளுரைத் தொண்டர்கள் தீர்க்கதரிசனப் பகுதிகளைப் பயன்படுத்திய முறைகளும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது. 

(ii) யூத இனத்தைப் பொறுத்தவரை நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள் இனி எதுவும் கிடையாதாம். அவர்களுடைய காலம் முடிந்துவிட்டதாம்.! எனவே இஸ்ரவேலரைக் குறித்த தீர்க்கதரிசனங்களுக்கு ஆன்மீக விளக்கம் அளிப்பதே சரி என்று சிலர் எண்ணுகின்றனர். 1947 ஆம் ஆண்டு முதல் புத்துயர் பெற்றுப் பகைவரின் நடுவில் செழித்து ஓங்கியிருப்பது இக்கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது. 

(iii) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள வளம் நிறைந்த ஆட்சியைப் பற்றிய தீர்க்கதரிசனப்ப பகுதிகள் இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சியையும் அப்பொழுது திருச்சபை அனுபவிக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையுமே குறிக்கின்றன. என்று சிலர் கருதுகின்றனர். 


(ஆ) சொல்லுக்குச் சொல் பொருள்காணும் முறை (Literalist Method) 

(i) கூடுமானவரை எங்குமே சொல்லுக்குச் சொல் சரியாய் அல்லது எழுத்துப்படி விளக்கஞ் செய்வதே சரி என்பர் சிலர். 
தேவாலாயம் மீண்டும் எருசலேம் நகரத்தில் (எசேக்கியேலின் சிற்பத் திட்டப்படி 40-49 அதிகாரங்கள்) கட்டப்படுமாம். மீண்டும் அவ்வாலயத்தில் பலிகள் செலுத்தப்படுமாம். (எசே. 45-46 அதி) ஆனால் பலிகள் மீண்டும் செலுத்தப்படுவது எபிரேயர் நிருபத்தின் கருத்துரைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. எனவே இவ்வதிகங்களைச் சொல்லுக்குச் சொல் விளங்கஞ் செய்யக்கூடாது. 

(ii) திருச்சபை உயர எடுத்துக் கொள்ளப்பட்டபின் ஆண்டவர் மீண்டும் யூத இனத்தை மேலும் மேலும் ஆசீர்வதித்து இந்த இனத்தைக் கொண்டு முழு உலகையும் ஆயிரம் ஆண்டுகளாக அரசாள்வாராம்
ஆயிரம் ஆண்டு ஆண்டவர் அரசாட்சி இல்லை என்று சாதிக்கும் சிலர். உலகத்தின் முடிவு காலத்தில் ஏராளமான யூதர்கள் குணப்படுவார்கள் என்றும் (ரோமர் 11:26) நற்செய்தியின் பயனாக உலகெங்கும் ஒரு பெரிய அசைவு ஏற்படும் என்றும், திருச்சபை மிகவும் வளரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மத். 24:12; 2 தீமோ. 3:1 ஆகிய வசனங்கள்  இந்தக் கருத்துகளுக்கு ஆதரவு அளக்கின்றனவா?

மேற்கொண்ட விளக்கங்களை நாம் முன்னரே கற்றுக் கொண்ட திருமுறை விளக்க விதிமுறைகளைக் கொண்டு ஆராய்ந்து முடிவுசெய்ய வேண்டும். 

ஒன்றுமட்டும் திண்ணம்: தந்தை தம்முடைய ஆதீனத்தில் வைத்திருக்கின்ற காலங்களையும் வேளைகளையும் அறிக்கிற உங்களுக்கு அடுத்தல்ல (அப். 1:7) ஆகவே கிறிஸ்து வரும் நாளையோ காலத்தையோ குறிப்பிட்டுத் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற எல்லாக் கள்ளப் போதகர்களிடமும் எச்சரிக்கையாயிரப்பார்களாக. 


3. தீர்க்கதரிசனத்தின் முடிவு கிறிஸ்துவே

கிறிஸ்து நியாயப்பிரமாணங்களை எல்லாம் தமக்குள் நிறைவேற்றி முடித்த்துபோலவே தீர்க்க தரிசனங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்துவிட்டார். 
இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியே தீர்க்தரிசனத்தின் ஆவியாயிருக்கின்றது. (வெளி. 19:10) அதாவது தீர்க்கதரசனத்தின் மையப்பொருள்கிறிஸ்துவை முன்னறிவிப்பதாயாகும். “ மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.(லூக். 24:25-27) தீர்க்கதரிசிகள் … தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். (1பேதுரு 1:10,11) என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிளஷறவைகளும் அவைகளே (யோவான். 5:39, அப். 3:18,24; 10:43; ரோமர் 1:4; ரோமர் 3:2) 

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத். 5:17)

ஆமென்

(முற்றிற்று)

Tuesday, 19 November 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 8- முன்னடையாளங்கள்


பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட்டிருக்கும் மனிதர்கள், பண்டிகைகள், பணிகள், நிகழ்ச்சிகள், பொருட்கள் ஆகிய இவைகளுள் சில முன்னடையாளங்களாக இருக்கின்றன. (Types) இவைகள் புதிய ஏற்பாட்டு மெய்ப்பொருளை நிழலாட்டமாக காட்டுகின்றன. 

1. முன்னடையாளமான மனிதர்கள்

(அ) ஆதாம் – மனித இனத்திற்குத் தலைமையானவன். கிறிஸ்து (இரண்டாம் ஆதாம்) மீட்கப்பட்ட மக்களுக்குத் தலைமையானவர். (ரோமர். 5:14; 1 கொரி. 15:22, 45)

(ஆ) யோசேப்பு – தன் சகோதர்களால் பகைக்கப்பட்டவன். பின்னால் தம் இனத்திற்கும் நாட்டிற்கும் அதிகாரியானான். (அப். 7:9-13) அது போல கிறிஸ்து யூத இனத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. (யோவான். 1:11) என்றாலும் அவர் யூதருக்கும் உலக மக்கள் அனைருக்கும் இரட்சகரானார்.

(இ) மோசே – இயேசுவைப் போன்ற ஒரு தீரக்கதரிசி. இயேசுவைப் போன்ற ஒரு தலைவனாகவும், மீட்பனாகவும் ஏற்படுத்தப்பட்டான் (உபா. 18:15-18; அப். 3:22,23 7:35) 

(ஈ)ஆரோன்– பிரதான ஆசாரியராகிய இயேசுவிற்கு  முன்னடையாளமானவன்

(உ) மெல்கிசேதேக்கு – என்றென்றைக்கும் உயிரோடிருக்கின்ற பிரதான ஆசாரியரான இயேசுவிற்கு முன்னடையாளமானவர். (எபி. 7:15) அரசரும் ஆசாரியருமாகிய இயேசுவிற்கு முன்னடையாளமானர்

(ஊ) யோசுவா – மோசே செய்ய இயலாத ஒரு வேலையைச் செய்து இறை மக்களை கானான் நாட்டில் குடியேற்றினார். அதுபோல் நியாயப்பிரமாணம் செய்ய முடியாத ஒன்றை (ரோமர் 8:3, யோவான் 1:17) இயேசு செய்து முடித்து நம்மைப் பரம கானானிற்குள் குடியேற்ற தகுதியுடைவராக்கினார்)

(எ) தாவீது அரசன் – தம்மைச் சூழ்ந்திருந்த எல்லாப் பகைவர்களையும் வென்ற தாவீது மிகச் சிறந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு முன்னடையாளம் – (1 கொரி. 15:25, வெளி. 19:11-19)

(ஏ) சாலமோன் – சமாதானப் பிரபுவாகிய இயேசுவிற்கு முன்னடையாளம். தேவாலயத்தைக் கட்டின சாலமோன் திருச்சபையைப் பரிசுத்த ஆலயமாகக் கட்டுகின்ற இயேசுவிற்கு முன்னடையாளம். (மத். 16:18, எபே. 2:20-22)

கவனிக்க- மேற்சொல்லப்பட்ட மனிதர்கள் ஒரு சிலவற்றில் மட்டுமே இயேசுவிற்கு முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளும் இயேசுவிற்கு முன்னடையாளமானவைகள் எனக் கருதுவது தவறாகும். ஆதாம் மனித இனத்திற்கு தலைவனாயிருந்தபடியால் அந்த அளவில் அவன் இயேசுவைக் காட்டின முன்னடையாளமாயிருந்தான். ஆனால் விளக்கப்பட்ட கனியைப் புசித்தபோதோ அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருக்கவில்லை. 

மோசே மிகச் சிறந்த தீரக்கதரிசியும் இறைமக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பண்ணினவருமாயிருந்தபடியால் இவைகளில் அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருந்தான். பதற்றமாய் பேசியபோதோ அவன் இயேசுவிற்கு முன்னடையாளமாயிருக்கவில்லை. ஆகவே முன்னடையாளங்களை விளக்கஞ் செய்யும்போது ஒரு சில செயல்களில் மட்டும் ஒற்றுமையைக் காணலாம். எல்லாற்றிலும் ஒற்றுமையைக் காண முற்பட்டால் சரியான உண்மையை விட்டு விலகிவிடுவோம். அத்துடன் இம்முறையை நாம் அளவிற்கு மீற கையாண்டால் பழைய ஏற்பாட்டின் மையக் கருத்துக்களையும் வரலாற்றுத் தன்மைகளையும் காணத் தவறிவிடுவோம். 


2. முன்னடையாளமான பண்டிகைகள்

(அ) ஓய்வுநாள் – விசுவாசத்தினால் வரும் இரட்சிப்பென்னும் இளைப்பாறுதலுக்கும் முடிவில்லா வாழ்விற்கும் அடையாளமாயிருக்கும். 
பாஸ்கா பண்டிகை- மீட்பிற்கு அடையாளமாகும்

(இ) பழைய ஏற்பாட்டுப் பலிகள் – வரப்போகின்ற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய் இருக்கின்றன. (எபி. 10:1)


3. பணிகள்

பழைய ஏற்பாட்டு காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட மூவகைப் பணியாட்கள் இருந்தனர். தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், அரசர்கள் ஆகிய இம் மூன்று பணியாட்களும் இயேசுவின் மூவகையான வேலைகளைக் காட்டுகின்றன. ஆகவே கிறிஸ்து

(அ) தீர்க்கதரிசி, போதகர், ஆசிரியர்

(ஆ) ஆசாரியர், மீட்பர், பரிந்துரைப்பவர்

(இ) அரசர், ஆண்டவர்

நாம் நற்செய்திப் பணியாற்றும்போது கிறிஸ்துவின் மூன்று பணிகளையும் சரிசமமாய் எடுத்துக் கூற வேண்டும். புதுவிசுவாசிகள் அவரை இரட்சகராக மாத்திரம் ஏற்றுக் கொள்வது போதாது. அவரை ஆசரியராகவும், அரசராகவும் தீர்க்கதரிசியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 


4. நிகழ்ச்சிகள்

(அ) வெண்கலப் பாம்பு- கம்பத்தில் உயர்த்தப்பட்ட பாம்பை நோக்கி பார்த்தவர்கள் பிழைத்ததுபோல சிலுவை மரத்தில் உயர்த்தப்பட்ட இயேசுவைப் நோக்கிப் பார்ப்பவர்கள் யாவரும் பிழைப்பார்கள். (ஏசா. 45:22, யோவான் 3:14,15)

(ஆ) இஸ்ரவேல் எகிப்தைவிட்டு புறப்பட்டு வனாந்திரவழியாகப் பயணஞ்செய்தபோது மன்னா உணவாக்க் கிடைத்தது முதல் பாறையிலிருந்து சுரந்த தண்ணீரை அருந்தி கானான் நாட்டில் வந்து சேர்ந்ததுவரை நிகழ்ந்த பல செயல்கள் மீட்கப்பட்ட திருச்சபையின் மோட்சப் பயணத்திற்கு முன்னடையாளமான ஒரு வரலாறாகும். (1 கொரி. 10:1-1)


5. பொருட்கள்

ஆசரிப்புக் கூடாரத்தின் சின்னஞ் சிறு வளையங்கள் கொக்கிகள் முளைகள் ஆகிய ஒவ்வொன்றிற்கும் அர்த்தம் கூறுவதைவிட அதன் முக்கியமான கருத்தினை உணர்ந்து கொள்வதே நன்று. “முதலாம் கூடாரம் நிற்குமளவு பரித்த ஸ்தலத்திற்குப் போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவி தெரியப்படுத்தியிருக்கின்றார். (எபி. 9:8) யாரும் அதன் அருகில் செல்லக்கூடாது என்பது எச்சரிக்கையாகும். திரைச்சீலை போன்ற கிறிஸ்துவின் மாம்சம் கிழிக்கப்பட்டபேது தேவலாயத்தின் சீலையும் இரண்டாக்க் கிழிந்த்து. யாரும் நெருங்கக் கூடாது என்பதற்கு மாறாக, எவரும் அருகில் வரலாம். என்பவே நற்செய்தியின் கருத்தாகும். ”தூயகம் நுழைய அவருடைய இரத்ததின் ஆற்றலால் நமக்குத் துணிவு உண்டு. உண்மையுள்ள உள்ளத்தோடும் உள்ளத்தோடும் முழு விசுவாச உறுதியோடும் நாம் அவரை அணுகிச் செல்வோமாக. (எபி. 10:19-22)

(அத்தியாயம் 8 முற்றிற்று)
(வளரும்)

Sunday, 10 November 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 7-உவமைகள்(2)

2. ஓர் உவமை பெரும்பாலும் முக்கியமான உண்மை ஒன்றையே போதிக்கும் என்று முன்பு பார்த்தோம். அந்த முக்கியமான கருத்தைக் கூறுவதே போதும். உவமையின் விபரங்கள் ஒவ்வொன்றிற்கும் பொருள் காண முயற்சிப்பது தவறாகும். 
உதாரணமாக கெட்ட குமாரனைப் பற்றிய உவமையில் கூறப்பட்டுள்ள மோதிரத்திற்கும் மதியடிகளுக்கும், கொழுத்த கன்றுக்கும் கருத்துக்கூறுவது அவசியமில்லை. உவமைகள் சொல்வதில் நம் ஆண்டவராகிய இயேசு திறமைவாய்ந்தவர். உவமைகளைக் கூறும்போது சுருக்கமாகவோ அல்லது வர்ணித்தோ பொதுமக்களுடைய கவனத்தைக் கவருவார். ஆகவே வர்ணித்துக் கூறப்ப்ட்டகைளுக்கு கருத்துக் கூறதேவையில்லை. 

ஆனால் உயர்ந்த ஆடைக்கு ஆவிக்குரிய கருத்து கூறுவது பொருந்தும் என்பதே என் எண்ணம் இந்த உயர்ந்த ஆடை திருமண ஆடைக்கும் (மத் 22: 1-14) நீதியின் சால்வைக்கும் (ஏசா 61:10) ஒப்பாயிருக்கலாம். 

நல்ல சமாரியனைப் பற்றிய உவமையைக் எடுத்துக் கொள்வோம். இனம், மதம், நிறம் ஆகிய வேற்றுமைகளைப் பாராமல் அவதிப்படுபவர் யாருக்கும் உதவி செய்தல் வேண்டும் என்பது இந்த உவமையின் குறிக்கோள். “நீயும் அப்படியே செய்”(லூக். 10:37) இந்த அறைகூவலுக்கு தப்பும்படி சிலர் இதை நற்செய்திப் பகுதியாகப் பயன்படுத்துவர். சிலர் இவ்வுவமையின் ஒவ்வொரு அங்கத்தையும் எடுத்து கருதுக் கூறுவர். சத்திரத்தைத் திருச்சபை என்றும் இரண்டு பணத்தை இரண்டு சாக்கிரமந்துக்கள் என்றும் மிகைப்படுத்திக் கூறுவர். இது போன்ற முறையைக் கையாளுவது வேதத்தை திரித்துக் கூறுவதாகும். 


3. உதாரணமாக மொத்த கருத்திற்கு மாறான உபதேசங்களை நாம் உவமைகளின் மூலம் நிலைநாட்ட முயல்வது தவறு. 
உதாரணமாக லூக்கா 10:24 ஐசுவரியான் ஆபிரகாமை நோக்கித் தனக்கு ஓரரு உதவிசெய்யும்படி கேட்டுக் கொண்டதினால் நாம் இறந்த புனிதர்களை நோக்கி மன்றாடலாம் எனப் போதிப்பது வேதத்தின் மொத்தக் கருத்திற்கு மாறானது. 

லூக்கா. 15:11-32 கெட்ட குமாரன் மனந்திருந்தி வந்ததும் ஏற்றுக் கொள்ளப்பட்டான். இங்கு பாவத்தைப் போக்கும் பலியாய் மரிக்கவில்லை என்றும் நமக்கு நல்ல மாதிரியைக் காண்பிக்கும் தியாகியாய் இருந்தார் என்றும் நாம் புத்தி தெளிந்து தந்தையிடம் திரும்பிச் சென்றால் மன்னிப்பைப் பெறுவோம் என்றும், பாவப் பலியைப் பற்றிய பேச்சே கிடையாது என்றும், பாவத்தைப் போக்க கிறிஸ்து இயேசு இரத்தத்தை சிந்தினார் என்று நாம் கருதவும் கூறவும் தேவையில்லை என்றும் சிலர் கூறுவர். இந்தத் தவறான போதனை வேதாகமத்தின் முழுக் கருத்திற்கும் எதிரானதாகும். இப்பேர்ப்பட்ட போதனை கண்டிக்கத்தக்கது. ஓர் உவமை இரட்சிப்பின் முறையில் அடங்கியிருக்கும் சில முறைகளை மட்டுமே விளக்கும். இரட்சிப்பின் வழி முழுவதையும் ஒரே சுருக்கமான உவமையில் விளக்கக கூடிய உவமை எதுவும் கிடையாது. 


4. உவமையில் ஏதாவதொரு அங்கத்தை மட்டும் முக்கியமான போதனைக்கு தோரமாகக் கூறுவதும் தவறு.
உதாரணமாக பத்து கன்னிகைகளுள் பாதிபேர் இரட்சிக்கப்பட்டனர். பாதிபேர் இரட்சிக்கபடவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களில் பாதிபேர் சேர்க்கப்படுவர். பாதிபேர் புறம்பே தள்ளப்படுவர் என்பது அர்த்தமாகுமா?
அல்லது நான்கு வகையான நிலங்களில் விதைக்கப்பட்ட விதை உவமையில் ஒரு நிலத்தின் விதை மட்டுமே நல்ல பலனைத் தந்தபடியால் கூறப்பட்டு வரும் நற்செய்தி தூதுகளில் நான்கில் ஒரு பாகம்தான் பயன்பெறும் என்பது பொருளாகுமா?
அல்லது நூற்றில் ஒன்பது மட்ட்டும் இரட்சிக்கப்படும் என்பது பொருளா? (லூக். 15:1-7)
அல்லது பத்துக்கு ஒன்றுமட்டும் இரட்சிக்கப்படும் என்பது பொருளா? (லூக். 15:8-10)


5. உவமையில்லாதிருந்தும் ஓரளவு வமைகளைப் போன்ற ஒப்பனைகள் யோவான் நற்செய் நூலில் உள்ளன. (யோவான் நற்செய்தி நூலில் உவமைகள் இல்லை என்பதையும் அடையாள அற்புதங்கள் எட்டு மட்டுமே உள்ளன என்பதையும் மனதில் கொள்க)

இந்த ஒப்பனைகள்(Alleaories) 10ஆம், 15ஆம் அதிகாரங்களில் காணப்படுகின்றன.

10ஆம் அதிகாரம்

1. நல்ல மேயப்பன் – இயேசு “நானே“ என்றார். 10:11,14

2. ஆடுகள் 3. வாசைலைக் காக்கிறவன்

4. தொழுவம் – இயேசு 10:7,9

5. வாசல் – “எனக்கு முன் வந்தவர்” 10:8

6. திருடர். 

7. அந்நியர். 

8. ஓநாய். 

9. கூலிக்காரன்

மேற்கூறிய ஒன்பது குறிப்புகளில் வாசல், மேய்ப்பன், ஆகிய இரண்டிற்கும் மட்டுமே தம்மை உவமித்து இயேசு கூறியுள்ளார். 

15ம் அதிகாரம்

திராட்சைச் செடி – நானே 15:1 (இயேசு)

பயிடுகிறவர் – தந்தை

கொடிகள் – நீங்கள் 15:5

உவமையில்லாத ஒப்பனைத் தொடர்கள் பழைய ஏற்பாட்டிலும் உள்ளன. (உதாரணமாக சங். 80:8-15. நீதி. 5:15, பிர. 12:3-7)

(அத்தியாயம் 7 முற்றிற்று)
(வளரும்)

Monday, 4 November 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 7-உவமைகள்(1)

உவமைகள் சிறு பிள்ளைகளும் எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க நல்ல கதைகள் எனக் கருதுவது தவறாகும். உவமைகள் நல்ல கதைகள் தான் ஆனாலும் அதற்குச் சரியான ஆவிக்குரிய விளக்கம் கூறுவது எளிதன்று. 

உவமை என்பது தெரிந்த ஒன்றைக் காட்டி தெரியாத ஒன்றை விளக்குவதாம். அதாவது ஒன்றைப் போல் மற்றொன்று அமைந்திருகின்றது என்று கூறுவதாம். 

இயேசு கிறிஸ்து உவமைகள் பயன்படுத்தியக் காரணத்தைக் கவனிக்கவும். (மத். 13:11-17) விண்ணுலக அரசின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது.அவர்களுக்கோ அருளப்படவில்லை. 

1. ஓர் உவமை முக்கியமான உண்மை ஒன்றையே கற்பிக்கும். ஒரு சில உவமைகள்(விதைக்கின்றவன், களைகள்) மட்டும் ஒன்றுக்கும் அதிகமான கருத்துக்களைக் கூறலாம். ஆனால் பெரும்பாலும்  உவமைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆவிக்குரிய கருத்துத்தான் உண்டு.
இந்த ஒரே கருத்து என்ன என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?


(அ) உவமையின் துவக்கத்தில்
லூக்கா 18:1-8; சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பது (18:1) இவ் உவமையின் நோக்கம்

லூக்கா 18:9-14 தங்களை நீதிமான்கள் என்று நம்புவோரைக் (18:9) கடிந்து கொள்வதே இந்த உவமையின் நோக்கம்.
(ஆனால் இவ்வுவமையின் இறுதி (14ஆம்) வசனத்திலும் போதனையுண்டு.

லூக்கா 19:11-27 தேவனுடைய ராஜ்யம் உடனே வராது (வச 11) என்பதுதான் இவ் உவமையின் முக்கியமான கருத்து 


(ஆ) உவமையின் இறுதியில்
மத்தேயு 22:1-14 கடைசி வசனத்தில் இந்த உவமையின் முக்கியமான ஆவிக்குரிய கருத்தைக் காணலாம். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்” ஆகையால் “உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். (2 பேதுரு 1:110) என்பதே பொருள்

மத்தேயு 25:11-13 கடைசி (13ம் ) வசனத்தைப் பார்க்கவும். ….“விழித்திருங்கள்

லூக்கா 16:1-9 மற்றெல்லா உவமைகளைக் காட்டிலும் விளங்கிக் கொள்வதற்கு சற்று கடினமான இந்த உவமையின் முக்கிய கருத்தைக் கடைசி வசனத்தில்(9ம் வசனத்தில்) காணலாம். “அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.“ 
ஆண்டவருடைய சீடர்களில் சிலர் சகேயு, மத்தேயு என்பவர்களைக் போன்று அநியாயமான முறையில் செல்வதைத்த் திரட்டியிருந்தனர். (15:1) தங்கள் ஊழலின் பயனாகத் திரட்டிய செல்வதை எவ்வாறு செலவிடுவது என்ற கேள்வி எழுந்தபோது ஆண்டவர் இவ் உவமைமையைக் கூறினார். 

(i) கூடுமானால் யாரை வஞ்சித்தோமோ அவர்களுக்குத் திரும்ப செலுத்தவும். (நாலாந்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்- 19:8)

(ii) அவ்விதம் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் ஏழைகளுக்குக் கொடுக்கவும். (லூக். 1:22; 19:18) அதாவது அநீதியான உலகப் பொருளால் உங்களுக்கு நண்பரைச் சம்பாதியுங்கள். என்று ஆண்டவர் கூறியிருக்கின்றார். நீதியற்ற கண்காணிப்பாளன் தன் தலைவனிடம் கடன்பட்டவர்களை ஒவ்வாருவனாக அழைத்துக் கடன் பத்திரத்தைக் குறைத்து எழுதும்படி சொல்லியபோது தன் முதலாளியை வஞ்சிக்கவில்லை. தான் ஏற்கனவே அநியாயமாய்த் திரட்டிய செல்வத்தைப் பயன்படுத்திக் கடன்பட்டவர்கள் ஒவ்வாருவனுக்கும் தன் சொந்த செலவில் தயவு பாராட்டி இவ்விதம் அவர்களைத் தனக்கு நண்பர்களாக்கிக் கொண்டான். முதலாளியின் பணத்தை மீண்டும் அபகரித்துக் கடன் பத்திரங்களைக் மாற்றியிருப்பானேயானால் முதலாளி அவனை மெச்சிப் பேசியிருப்பானோ? 

எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் குணப்பாடாதற்கு முன் பரிசு சீட்டுக்களை வாங்கி ஒரு பெரிய இலட்சாதிபதியாகிறான் என்று வைத்துக் கொள்வோம். குணபட்டபின் தான் அந்த முறையில் பரிசு பெறது தவறு என்று உணர்கின்றான். என்ன செய்வது? ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை அரசுக்கு திருப்பிக் கொடுக்கலாம். அல்லது பொதுநலத்திற்கென நிறுவப்பட்ட ஏதாவது சில கல்வி நிலையங்களுக்கோ அல்லது மருத்துவ மனைகளுகக்கோ கொடுக்கலாம். கர்த்தருடைய பணிக்கென திருச்சபை அநீதியான உலகப் பொருட்களை வாங்கலாமா? வாங்கலாகாதா? என்பதைப் பற்றி கருத்து வேறுபாடுகள் உள்ளன. 

சென்ற நூற்றாண்டின் எப். என். சரிங்டன் (F.N. Charringdon) என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பத்தினர் மதுபானங்கள் மூலமாய் ஏராளமான செல்வத்தைத் திரட்டியவர்கள். சரிங்கடன் குணப்பட்ட பின்னும் தான் அனுபவித்து வருகின்ற செல்வங்கள் அநீதியான முறையில் வந்தவை என்பதை உணரவில்லை. ஒருநாள் இரவு லண்டன் மாநகரின் கீழ்ப்பகுதியில் (பரம ஏழைகள் வசித்த பகுதி) சென்ற போது சாராயக் கடைக்கு முன் நடந்த பயங்கரமான சண்டையையும் குடித்து வெறித்தவர்கள் தங்கள் மனைவிகளைத் துன்புறுத்தும் காட்சியையும் கண்டு மனவேதனை யடைந்தார். அப்போது அந்த சாராயக்கடையின் உரிமையாளரின் பெயர் தம் குடும்பப் பெயர் சரிங்டன் என அறிந்து அதிர்ச்சியுற்றார். அந்நாளே சரிங்கடன் அக்கம்பனியில் தனக்கருந்த பங்கை விற்றுவிட்டு தான் சம்பாதித்த ஏராளமான பணத்தை லண்டன் நகரின் கீழ்ப் பகுதி ஏழை மக்களின் நலத்திற்கெனச் செலவிட்டார். 

மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் மூலம் முதலில் ஆண்டவருடைய சித்தத்தை அறியாதவர்கள் அறிந்தபின் நன்மையான செயல்கள் செய்தனர் என்பதை அறிகிறோம். ஆனால் தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் அதன்படி செய்யாமல் திருச்சபையின் பணத்தையோ, சொதுக்களையோ அநியாயமான முறையில் செலவிடுகின்ற ஊழியக்காரன் அநேக அடிக்கள் அடிக்கப்படுவான். (லூக். 12:47)


(இ) சில வேளைகளில் உவமையின் முக்கிய கருத்து உவமையின் துவக்கத்திலும் இறுதியிலுமாக இருமுறை கூறப்பட்டிருக்கும். 
(i)  மத். 18:21,22,35 ‘அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் உன் சகோதரனுக்கு மன்னிக்க வேண்டும்” என்று சொல்கிறேன். 
நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். (18:35)

(ii)  பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்;(12:15) தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் (12:21)


(ஈ) சிலவேளைகளில் உவமை கூறப்பட்ட சூழ்நிலையைக் கொண்டு அதற்கு முன்னுள்ள வரலாறுகளைக் கொண்டு உவமையின் கருத்து இன்னதென்பதைத் தெரிந்து கொள்ளலாம்
(i) லூக் 13:6-9 உவமைக்கு முன்னுள்ள வசனங்களைப் பார்க்கவும். மனமாற்றமடையாத யூத மக்கள் அழிதல் நிச்சியம் என்று வலியுறுத்திப் போதித்தபின் கனி கொடாத அத்திமரத்தின் உவமையைக் கூறினார். 

அத்திமரம் – யூத இனம்
முதலாளி – கடவுளின் நீதி (வெட்டுவதற்கு எத்தனித்தல்)
தோட்டக்காரன் – கடவுளின் நீடிய சாந்தம்

இப்பொழுது அத்தி மரத்தைச் சில சபைகளுக்கோ தனிப்பட்ட சில நபர்களுக்கோ ஒப்பிட்டு இந்த உவமையைப் பயன்படுத்தலாம். 

அடிக்கடி சுற்றிலும் கொத்தி எரு போடப்படும் கனி கொடாத அத்தி மரம் இரக்கமின்றிப் பிடுங்கப்படும. (நீதி. 29:1)

கவனிக்க. முதலாளியைக் கடவுள் என்றும் தோட்டக்காரனைக் கிறிஸ்து என்றும் கூறலாகாது. அவ்வாறு விளக்கஞ் செய்வது தவறான கருத்துக்களுக்கேதுவாகும். 

(ii)  லூக்கா 15:12-32 உவமைக்கு முன்னுள்ள 15:1,2 வசனங்களைப் பார்க்கவும். ஆயக்கார், பாவிகள்” ஆகிய எல்லோரும் அவர் சொல்வதைக் கேட்க அவரிடம் வந்த வண்ணமிருந்தனர். அதனால் பரிசேயரும், வேத அறிஞரும், இவன் பாவிகளைச் சேர்த்துக் கொண்டு அவர்களோடு சாப்பிடவுஞ் செய்கிறானே என்று சொல்லி முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் இந்த உவமையை (அல்லது மூன்று உவமைகளை) அவர்களுக்குச் சொன்னார்.

இளைய மகன் – ஆயக்காரர், பாவிகள்
மூத்த மகன் – பரிசேயர், தேவ அறிஞர். 

(வளரும்)

Sunday, 27 October 2013

திருமறையை விளக்கும் முறை. அத்தியாயம் 6- உருவக மொழி


கடந்த ஐந்து அத்தியாயங்களில் வேதத்தை விளக்கஞ் செய்வதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகளைப்பற்றி ஆராய்ந்தோம். அவை திருமறை முழுவதற்கும் பொருந்தக்கூடிய பொதுவான விதிகளே. ஆனால் திருமறையின் சில பகுதிகள் சாதாரண மொழியில் அமையாமல் உருவகங்கள், உவமைகள், தீர்க்கதரிசனங்கள் போன்ற சிறப்பு வடிவில் அமைந்துள்ளன. இப்பகுதிகளை விளக்கஞ் செய்யும்போது நாம் சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். இந்நூலின் எஞ்சிய பகுதியில் இவ்வுண்மைகளைக் குறித்து சிந்திப்போம்.

1. உருவகச் சொற்கள் (Metaphors)
உருவகம் என்பதைவிட உவமை (simile) என்பதே பொருளுக்கும் விளக்கத்திற்கும் பொருத்தமாயுள்ளது ஆனால் ஏழாம் அத்தியாயத்தில் உவமை வேறுவகையில் விளக்கப்பட்டுள்ளது. ஒன்றைப்போல ஒன்று இருக்கின்றது என்பது உவமை. ஆனால் ஒன்றை ஒன்றாகச் சொல்வது உருவகம். கர்த்தர் சூரியனைப் போல இருக்கிறார் என்பது உவமை. சூரியனாயிருக்கிறார் என்பது உருவகம்.

(அ) தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; (சங். 84:11) கர்த்தர் சூரியனைப் போன்று நமக்கு ஒளியாயிருக்கின்றார். வேறு வகையில்  அவர் கேடகத்தைப் போன்று நம்மைக் காப்பாற்றுகிறார்.

(ஆ) கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.(சங். 18:2)

(இ) அவர் சிங்கக் குட்டியைப் போன்றவர். – வெளி. 5:5

(ஈ) இயேசு தம்மை அப்பத்திற்கும் ஒளிக்கும் வாசலுக்கும் மேய்ப்பனுக்கும் திராட்சைச் செடிக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.

(உ) “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். லூக். 9:60 நிலைபேறு வாழ்வைப் பெறாதவர். –மரித்தோர். (எபே.2:1)

(ஊ) முள்ளில் (தாற்றுக் கோலுக்கு எதிர்த்து) உதைப்பது கடினம். என்றும் பொருள்படும். அப். 26:14. முள்போன்ற மனசாட்சியை எதிர்த்து உதைப்பது கடினம் என்றும் பொருள்படும்.

(எ) இது என் சரீரம். இது என் இரத்தம் (மாற்கு 14:2,24) அவர் இந்த வார்த்தைகளை சொல்லிய போது அவருடைய சரீரம் பிட்கப்படவுமில்லை. அவருடைய இரத்தம் சிந்தப்படவுமில்லை. ஆகவே இந்த வசனங்கள் உருவகச் சொற்களாகும். அவற்றை சொல்லுக்குச் சொல் சரியாய் விளக்கஞ் செய்வது தவறு. இந்த அப்பம் என் உடலைப் போன்றது. இந்த ரசம் என் இரத்த்த்தைப் போன்றது என்பது அர்த்தமாகும்

அடையாளச் சொற்கள்
கருத்து
வசனங்கள்
நிலடுக்கம், புயல், கிரகணம் அரசியல் புரட்சிகள் யோவேல் 3:15 ஏசா. 13:10-13; எரே. 4:23,28; மத். 24:29
பனி, தூறல், நீர்க்கால்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், ஏசா.25:6; எரே. 4:23,28; ஓசி. 14:5
கோல் தண்டனை ஏசா 10:5, 14:29
விவாகம் தேவன் தன் மக்களோடு செய்யும் உடன்படிக்கை ஓசி. 2:19,20
விபச்சாரம், சோரம் சிலைவணக்கம், உடன்டிக்கையை மீறுதல் ஓசி. 2:2,5
காட்டு விலங்குகள் அல்லது பறவைகள் வல்லரசுக்கள் தானி. 7; சகரியா 1:18,19

சில அடையாளச் சொற்களுக்கு இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். முன் பின்னுள்ள தொடர் வாக்கியங்களைக் கவனித்து சரியான கருத்தை அறிய வேண்டும்.


(அ) அறுப்பு – விசுவாசிகளைப் பரம களஞ்சியத்தில் சேர்ப்பதைக் குறிக்கும். மத். 13 அல்லது
அக்கிரமக்கார்ரை விசாரித்து நியாந் தீர்ப்பதைக் குறிக்கும். வெளி. 14:14,20

(ஆ) அக்கினி - தீமைகளைப் பட்சித்து எரிப்பதைக் குறிக்கும். நியாயத்தீர்ப்பு நரகம், இவைகளைக் குறிக்கும். (அல்லது
விசுவாசிகளைப் புடமிட்டுச் சுத்திகரிப்பதைக் குறிக்கும். 1 பேதுரு 1:7
(அல்லது)
பரிசுத்த ஆவியையும், ஆவியின் செயலையும் குறிக்கும். அப். 2:3

(இ) புளித்தமா – மறைமுகமாய்ப் பரவும் தீமையைக் குறிக்கலாம். மாற்கு 8:15, 1 கொரி. 5:8
மறைமுகமாகப் பரவும் நன்மையைக் குறிக்கலாம். மத். 13:33
ஆனால் புளித்தமா வேதமெங்கும் தீமையைத்தான் குறிக்கின்றது என சிலர் சாதிக்கின்றனர்.


3.    மனிதப் பண்பிலும் கடவுளை வர்ணித்தல்(Anthropomorphism)
கடவுளுக்கு உருவம் இல்லை என்றாலும் நமக்கு எளிதில் விளங்கத்தக்கதாக கடவுளுக்கு மனிதப் பண்புகளும் இருக்கிறதுபோல அடிக்டிப் பேசுவதுண்டு
(அ)  இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை ஏசா. 59:1
(ஆ) உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங். 32:8
(இ) இவர்கள் என் நாசிக்கு அரோசகமான புகை (பு.தி)
(ஈ) உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது. (சங். 89:13)


(உ) மனிதப் பண்புகள்
அ) தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. (ஆதி 6:6)

ஆ) என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; (யாத். 32.10)

இ) அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். யாத். 32.14)

உ) சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். (1 சாமு 15.35)
ஆனால் இவ்வசனங்களைக் கீழ்காணும் வசனத்தோடு ஒப்பிட்டு வேதத்தின் மொத்த கருத்துக்கேற்ப விளக்கஞ் செய்யவும்.

ஊ) இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல 1 சாமு 15:23 (எண். 23.19 ஐயும் பார்க்க)
(அத்தியாயம 6 முற்றிற்று)
(வளரும்)

Monday, 7 October 2013

திருமறையை விளக்கும் முறை- அத்தியாயம் 5 -முழுக்கருத்தையும் மறவாதீர்(1)


விதி 4 திருமறையின் முழுக்கருத்திற்கு இசைவந்தவாறு வசனத்தை விளக்கஞ் செய்தல் வேண்டும். வேதமே வேதத்திற்கு விளக்கவுரையாகும். 

1. புதிய ஏற்பாட்டு வசனங்கள் பலவற்றைப் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் விளக்கம் செய்யதல் வேண்டும்

(அ) “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
பழைய ஏற்பாட்டுக் காலத்து பலிகளுக்கும் தேவாட்டுக் குட்டிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்க எபிரேயர் நிருபத்தைப் பயன்படுத்தவும், தேவாட்டுக் குட்டி என்றால் என்ன? யார்? ஏன்? என்று விளங்கிக் கொள்ள முடியாது. 

(ஆ) “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள்” 1 பேதுரு 1:19
தேவாட்டுக்குட்டி பற்றிய குறிப்புகளை முந்திய பகுதியில் காண்க. மீட்பு என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது? என்பதை அறிய பழைய ஏற்பாட்டைப் பார்க்க வேண்டும். 
I. இழந்துபோன காணியாட்சிகளை மீட்கலாம். – லேவி. 25:25-27
II. விற்ற வீட்டை மீட்கலாம். லேவி. 25:29
III. விலைப்பட்டுப்போன அடிமையை மீட்கலாம்
ரூத் என்ற பெண்ணிற்கு நெருங்கிய உறவுக்காரனான போவாஸ் அவளுக்கு செய்த பெரிய உதவியை எடுத்துக்கூறி ஆத்தும மீட்டபின் அருமையை விளக்கிக் காட்டலாம். 

(இ) நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக் கொண்டு…” 1 பேதுரு 1:13
யாத். 12:11 யைப் பார்க்கவும் 'நீங்கள் உங்கள் அரைவாசிகளில் கச்சை கட்டிக் கொண்டு…” மீட்கப்பட்ட இஸ்ரவேலர் கச்சை கட்டிக் கொண்டு கானானுகுச் செல்லப் புறப்பட்டபோதுபோல மீட்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மனதைக் கட்டிக்கொண்டு பரம கானானுக்குச் செல்ல புறப்பட்டுப் போகவேண்டும். 
பழைய ஏற்பாடு நமக்குத் தேவையில்லை என்று வாதிடுவர். ஏமாந்து போகாதீர்கள். பழைய ஏற்பாட்டைக் கருத்தாய்ப் படிக்காதவர்கள் புதிய ஏற்பாட்டின் சிறந்த கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாது. 


2. பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் ஒருசில வசங்களை ஆங்காங்கு பொறுக்கி எடுத்துப் போதிப்பவர்கள் தவறான கருத்துக்களையும் கூறநேரிடும். எல்லா வசனங்களையும் ஆராய்ந்து ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து வேதத்தின் மொத்தக் கருத்து யாது என்று அறிதல் இன்றியமையாததாகும்.

(அ) அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்(யோவான். 12:34) 
கிறிஸ்து என்றென்றைக்கும் நிலைத்திருப்பார் என்ற வசனங்களை (ஏசா. 9:7; தானி. 7:14) அறிந்து கொண்டார்கள். ஆனால் மனித குமாரன் உயர்த்தப்பட வேண்டும்(அதாவது சிலுவை மரத்தில் அறையப்பட வேண்டும்) என்று கூறுகிற வசனங்களை (ஏசா. 53:4-6:12, தானி. 9:26) அவர்கள் கவனிக்கவில்லை. ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற இந்தக் கருத்துக்கள் இயேசுகிறிஸ்துவில் நிறைவேறின. இயேசுவின் விரோதிகள் மாத்திரமல்ல. அவருடைய அன்பான சீடர்களும் இவ்வசங்களைப் புரிந்து கொள்ளாமல் தத்தளித்தனர் 

(ஆ) கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வருவார் (யோவான் 7:41, 7:52 ஐயும் பார்க்க)
மீகா. 5:2 ஐப் படித்தவர்கள் ஏசா 9:1 ஐ (மத். 4:15,16) கவனிக்கவில்லை போலும் அவர் பெத்தலேகேமிலிருந்துதான் வந்தார். இது சரியே. ஆனால் அவர் கலிலேயாவையும் மகிமைப்படுத்துவார். (ஏசா. 9:1) என்று வேதம் கூறுகின்றது. 


3. ஒத்த வாக்கியங்களைக் கவனிப்பது தெளிவாய் விளக்கஞ் செய்வதற்கு ஏதுவாகும். (ஒத்த வாக்கிய அகராதியின் பயனை அறிந்து கொள்ளுதல் நன்று)

(அ) சொல் ஒற்றுமை
(i) கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி (1 சாமு. 13:14) தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவனாக்க் கண்டேன். (அப். 13:22) கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் என்பதற்கு பொருள் என்ன? ஒத்த வாக்கியமாகிய 1 சாமு. 2:25 ஐப் பார்த்தால் நன்கு விளங்கும் “நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணுவேன்”.

(ii) “கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன்.” கலா. 6:17
இந்த அச்சடையாளரங்கள் என்ன? சிலுவை ஆணிகளால் உண்டான தழும்புகள் என்று சிலர் வாதிக்கின்றனர். அது உண்மையான கருத்தன்று. ஒத்த வாக்கியத்தைப் பார்க்கவும். “ இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.” (2 கொரி. 4:10) அதாவது அதிகமாய் அடிப்பட்டவன். (2 கொரி. 11:23-27)

(iii) என் மேன்மை (ஆதி. 49:6) என் மகிமை (சங். 7:5) என்ற வார்த்தைகளுக்கு என் ஆத்துமா என்று பொருள் கூறலாம். எப்படியெனில் ஆனால் செப்டுவஜின்ட் (Septugint) என்ற பழைய கிரேக்க மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தி பேதுரு சங்கீதம் 16:9ஐ மேற்கோள் கூறியபோது “என் நாவு களிகூர்ந்த்து” எனக் கூறியிருக்கின்றார். ஆகவே சங்கீதம் 16:9, 57:8, 108:1 இந்த நான்கு வசனங்களிலும் “என் மகிமை” என்பதற்கு “நாவு” என்பது பொருளாயிருக்கலாம். ஆத்துமாவோ மனிதருடைய மிக உன்னதமான மகிமையாகும். ஏனெனில் நாவுமூலம் நாம் கடவுளைப் புகழ்ந்து பாடலாமன்றோ. 

(ஆ) பொருள் ஒற்றுமை
 (I) நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (மத்தேயு 26:27)
அப்போஸ்தலர்கள் அல்லது குருமார்கள் மட்டும்தான் பாத்திரத்தில் பானம் பண்ணவேண்டுமா? மேல் மாடியில் குழுமியவர்கள் அப்போஸ்தலர் மாத்திரமே ரோமன் கத்தோலிக்க சபையின் பழக்கம் சரிதானா? ஒத்த வாக்கியத்தைப் பாருங்கள். 

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் (1 கொரி. 11:26) “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். (1 கொரி. 11:28)

 (ii)  நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; (மத். 16:18). இந்தக் கல் அல்லது பாறை என்பது உறுதியான அடிப்படையாயையும் அசையாத ஆதாரத்தையும் குறிக்கும் பழைய ஏற்பாட்டுக் காலத்து கடவுளுடைய மக்கள் தங்களுக்கு கடவுளே உறுதியான ஆதாரம் என்ற கருத்தில் அவரைப் பாறை என்று அழைத்தனர். (உபா. 32:4, 15, 18; சங். 18:2) புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்கு அடிப்படையும் ஆதாரமுமாய் விளங்குபவர் இயேசுவே. (ஏசா. 28:16; 1 பேதுரு 2:4-8 ரோமர் 9:33, 1 கொரி. 3:11)

(iii) “புது சிருஷ்டி காரியம்” (கலா. 6:15) புது சிருஷ்டி என்றால் என்ன? விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்தசேதனமில்லாமலாமையும் ஒன்றுமில்லை என்’று கூறுகின்ற ஒத்த வாக்கியங்களைப் பார்க்கவும். “அன்பினால் கிரியை செய்கின்ற விசுவாசமே உதவும்” (கலா. 5:6) அதாவது புது சிருஷ்டியின் பண்பாகும். தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளு கிறவனே புது சிருஷ்டியாவான் என்பது தெளிவாகும். 

(iv) “அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8) நான் எல்லோருடனும் அன்பாயிருந்தால் என்னுடைய அநேக பாவங்கள் மூடப்படும் என்று சிலர் இந்த வசனத்தைத் திரித்துக் கூறுவர். ஒத்த வாக்கியத்தைப் பார்க்கும்போது “பகை விரோதங்களை எழுப்பும். அன்பே சகல பாவங்களையும் மூடும். (நீதி 10:12) அன்பு பிறருடைய பாவங்களை மூடுமே தவிர தன் பாவங்களை மூடுவதில்லை

(வளரும்)

Thursday, 3 October 2013

திருமறையை விளக்கும் முறை-அத்தியாயம் 4-சூழ்நிலையும் நோக்கமும்(2)


3. முரண்பாடாய் தோன்றும் பகுதிகள்

நூலின் நோக்கத்தை அல்லது ஒரு பகுதியின் நோக்கத்தை அறிந்தால், ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும் வசனங்களைப் பற்றிய முரண் தீரும்.

உதாரணமாக
(அ) ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். (ரோமர் 3:28)

ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. (யாக்கோபு 2:24)

இவ்விரண்டையும் ஒத்துப் பார்க்கையில் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றது. ஆனால் இண்டு நிருபங்களின் வெவ்வேறான நோக்கங்களைக் கவனிக்குங்கால் பொருத்தமில்லாத முரண்பாடு நீங்கும். நியாயப்பிரணமானத்திற்கேற்ற கிரியைகளினால் எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லை.விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப் படுகின்றான் என்பது ரோமர் நிருபத்தின் கருத்து. 

நற்கிரியைகளை விளைவிக்காத, பரிசுத்தத்திற்கும் ஏதுவாயிராத வெற்று விசுவாசத்தால் எந்த மனிதனும் நீதிமானக்கப்படுவதில்லை. இப்பேர்ப்பட்ட விசுவாசம் உண்மையானதுமன்று. இரட்சிப்புக்கேதுவானதுமன்று என்பது என்பது யாக்கோபு நிருபத்தின் கருத்து. 

(ஆ) நாளைக் கவனிக்கின்றவன் ஆண்டவருக்கென்று கவனிக்கின்றான். (ரோமர் 14:6)
நாட்களைப் பார்க்கிறீர்களே.. கலா. 4:10

ரோமர் நிருபத்தின் கருத்துப்படி யூத இனத்தில் வளரக்கப்பட்ட சில கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஏழாம் நாளைக் கொண்டு மோசேயின் மூலம் விலக்கப்ட்ட சில உணவுகளை உண்ணாதிருந்தனர். மன ஐயங்களைப் பற்றி வாதாடாமல் ஒருவரையொருவர் சேர்த்துக்கொள்ள (சபையின் ஐக்கியத்தில் சேர்த்துக்கொள்ள) இந்நிருபம் அனுமதிக்கின்றது. 

கலாத்தியர் நிருபம் இரட்சிக்கப்படுவதற்கு ஏழாம் நாளைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் சில உணவு பொருட்களை விலக்கி வைக்க வேண்டுமென்றும் அல்லது சைவமாயிருக்க வேண்டும் என்றும் போதிக்கும் கள்ள போதகர்களை இடித்துரைத்த்து. (கொலோ. 2:21; 1 தீமோ 4:3 ஐயும் பார்க்க) மறுபடியும் அடிமைத் தனத்தின் நுகத்துக்குட்படாதிருக்க ஏவுகின்றது. 

ஆகவே, உண்மையான விசுவாசிகள் சிலர் சைவமாயிருக்கலாம். ஆனால் எல்லோரும் மரக்கறிகளை மட்டும் சாப்பிடவேண்டும் என்று அவர்கள் போதிக்கலாகாது. ஏழாம் நாள் சபையார் (Seventh Day Adventists) நாட்களைப் பார்ப்பதிலும் உணவை விலக்குவதிலும் பழைய அடிமைத்தனத்தின் நுகத்தில் நம் அனைவரையும் பிணைத்து விடப் பார்க்கின்றனர். 

எச்சரிக்கை ரோமர். 14:6 இந்து திருநாட்களையும் திருமணத்திற்கேற்ற நாட்களையும் பார்க்கிறதற்கு வேதத்தில் எந்த ஒரு வசனமும் அனுமதி அளிப்பதில்லை. நாளைக் கவனக்கிறவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கென்றே கவனிக்கிறான் என்பதையே வலியுறுத்துவதைக் கவனிக்கவும். 


(இ) நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் (மத். 19:16-17) 'அப்படியே செய். அப்பொழுது பிழைப்பாய்..” (லூக். 10:25,28)

'இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்(அப். 16:30,31)

நம்மிடையே கேள்வி கேட்கின்ற ஒரு சிலருக்கு நாம் நியாயப்பிரமாணத்தையும் கற்பனையையும் எடுத்துக் கூறவேண்டும் வேறு சிலருக்கு நாம் கிறிஸ்துவையும் விசுவாச வழியையும் காட்ட வேண்டும் பணக்கார வாலிபனும்(மத். 19:16) சட்ட வல்லுநனாகிய வேதபாரகனும் (லூக். 10:25) நொறுங்குண்ட இருதயளமுள்ளவர்களாய் வராமல் தாங்கள் ’புண்ணியவான்கள் என்றும் (மத். 19:20, லூக். 10:29) தாங்கள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள என்றும்…. (மத். 19:16,20) நினைத்தவர்காய் வந்தனர். 

இப்படிப்பட்டவர்களுடன் பேசும்போது ஆயத்தமின்றி உடனுக்குடன் இயேசுகிறிஸ்துவை விசுவாசி எனக் கூறுவதில் பயனில்லை. அவ்வாறு செய்வது பன்றிகள் முன் முத்துக்களைப் போடுவதைப் போன்றது. நியாயப்பிரணமாணத்தைக் கடைப்பிடிக்கத் தன்னால் முடியவே முடியாது என்றும் தான் பரிதாபத்திற்குரியவன் என்றும் உணரும் மனிதனே ஆண்டவராகிய இயேசுவை நோக்கி… “ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கதறிக் கூப்பிடுவான்” எனக் கதறி கூப்பிடுவான். அஞ்சி கடலில் மூழ்கப் போகிறவனோ இயேசுவை நோக்கி இரு கைகளையும் நீட்டி “இயேசுவே என்னைக் காப்பாற்றும்” என்று அலறுவான். (மத். 14:30) நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொள்ளச் சென்ற சிறைச்சாலைக்காரன் இயேசுவை தன் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ள ஆயத்தாயிருந்தான். அவன் அற்புதமான முறையில் தேவாவியினால் ஆயத்தமாக்கப்பட்டான். 

ஆகவே தனியாள் ஊழியம் செய்யும்போது அவருடைய நிலையை அறிந்து ஏற்றமுறையில் நாம் அருட் செய்தியைக் கூறுவது நல்லது. கடவுள் யார் என்றும், கடவுளின் பண்புகள் எவை என்றும் கடவுளின் கற்பனை இன்னதென்றும் சிறிதும் அறியாத மக்களிடம் “இயேசுவை விசுவாசி” எனக் கூறுவது பொருந்துமா? அது விசுவாசத்தை உண்டாக்குமா? 


(ஈ) லூக்கா 13ஆம் அதிகாரத்தில் தோன்றுகின்ற மூத்த மகன் யாரைக் குறிக்கின்றான்.? அவ்வதிகாரத்தின் நோக்கத்தைக் கவனித்துப் பார்த்தால் இயேசுவைக் குறித்து முறுமுறுத்த தேவ பாரகர்களே அந்த மூத்த மகன் என்று சொல்லலாம்.

(உ) எபிரேயர் 4:35 இல் சுறப்பட்டள்ள இளைப்பாறுதல் எதைக் குறிக்கின்றது முடிவில்லத வீடுபேற்றைக் குறிக்காமல் இப்பொழுதே விசுவாசிகள் அடையக் கூடிய மன நிம்மதியைக் குறிக்கின்றது என்று ஒரு சிலர் கருதுவர். ஆனால் நிருபத்தின் நோக்கம் என்ன? கேட்ட நற்செய்தி அந்தக் காலத்தில் அநேகருக்கு பயனில்லாமலிருந்த்து போல ( 1கொரி. 10:5 ஐப் பார்க்க) இந்தக் காலத்தில் உங்களுக்கும் பயனற்றுப் போகாதிருக்கும்படி பயந்திருக்க கடவீர்கள். (எபி. 4:12) நீங்கள் ஓரளவில ஏற்றுக் கொண்டீர்கள். மறுதலிக்க வேண்டாம். கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்த வேண்டாம். அவ்விதம் நீங்கள் பின்வாங்கிப் போவீர்களேயானால் நீஙகள் நித்திய இளைப்பாறுதலாகிய பரமகானானை இழக்க நேரிடும். எனவே இது வீடு பேற்றைக் குறிகினறது என்பது பொருத்தமான விளக்கமாக இருக்கும. 


மூன்றாவது விதி நமக்குக் கற்றுத் தருவது
நூலின் ஆக்கியோன் நூலை எழுதிய சூழ்நிலை, நோக்கம் இவற்றை ஆராய்ந்து அதற்கிசைந்த விளக்கம் அளிப்பதே நன்று


 (அத்தியாயம் 4 முற்றிற்று)
வளரும்

Tuesday, 17 September 2013

திருமறையை விளக்கும் முறை-அத்தியாயம் 4-சூழ்நிலையும் நோக்கமும்(1)

விதி 3 ஆசிரியர் நூலை எழுதிய சூழ்நிலையையும் நோக்கத்தையும் ஆராய்ந்தறிந்து அதற்கேற்ப வேதத்தை விளக்க வேண்டும்

அதாவது வேதாகமத்தின் ஒரு நூலை அல்லது நிருபத்தை எழுதியவர் யார், அவர், யாருக்காக, எப்படிப்பட் சூழ்நிலையில் எந்த நோக்கத்துடன் அதனை எழுதினார் என்ற விபரங்களை நாம் ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆராய்ந்தறியும் பொழுதுதான் நாம் விளக்கஞ் செய்யும் வசனத்தின் முழுக்கருத்தையும் ஆழ்ந்த கருத்தையும் அறிய முடியும். ஆனால் வேதாகமத்தில் உள்ள ஒரு சில நூல்களைப் பற்றி நாம் எவ்வளவு ஆராய்ச்சி செய்தாலும் இத்தகைய வினாக்கள் அனைத்திற்கும் விடை காண முடியாது. எடுத்துக்காட்டாக எபிரேயருக்கு எழுதின திருமுகம் யாரால் எழுதப்பட்டது என்று திட்டமாய் கூறமுடியவில்லை. இது யாருக்காக எழுதப்பட்டது என்பதும் தெரியவில்லை. பாலஸ்தீனாவில் வாழ்ந்த எபிரயேக் கிறிஸ்தவர்களுக்கா அல்லது பிறநாடுகளில் வாழ்ந்த எபிரேயக் கிறிஸ்தவர்களுக்காகவா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் இந்நிருபம் எழுதக் காரணமாயிருந்தவர்களின் சூழ்நிலைகள், சோதனைகள் இவற்றை நூலின் வாயிலாக ஊகித்தறிய முடிகிறது. 


1. நூலை எழுதியோரும் எழுதக் காரணமாயிருந்தோரும்

(அ) பவுல் அடியார் எழுதிய நிருபங்கள்

1& 2 தெசலோனிக்கேயர் : பவுல் முதன் முதலில் எழுதிய கடிதங்கள்  இவை இரண்டாம் முறையாகப் பயணத்தை மேற்கொண்டபோது கொரிந்து பட்டணத்தில் எழுதப்பட்டு கி.பி. 50 ஆம் ஆண்டில் தெசலோனிக்கே சபைக்கு அனுப்பப்பட்டவை. 

1 & 2 கொரிந்தியர் : பவுல் மூன்றாம் முறை நற்செய்தி ஊழியப் பயணம் செய்தபோது முதல் நிருபத்தை எபேசு பட்டணத்திலிருந்தும் (கி.பி. 56ஆம் ஆண்டு) இரண்டாம் நிருபத்தை பிலிப்பி பட்டணத்திலிருந்தும் (கி.பி. 56 அல்லது 57) எழுதினார். 

கலாத்தியருக்கும் ரோமருக்கும் எழுதிய நிருபங்கள். பவுல் மூன்றாம் முறை நற்செய்தி ஊழிய பயணம் செய்தபோது கொரிந்து பட்டணத்தில் கி.பி. 57 ஆம் ஆண்டு எழுதினார். கலாத்தியருக்குச் சுருக்கமாக எழுதிய செய்தி ரோமருக்குச் சற்று விரிவாக எழுதப்பட்டது. 

சிறைகூட நிருபங்கள் :
எபேசியருக்கு, கொலேசேயருக்கு, பிலிப்பியருக்கு எழுதிய நிருபங்கள் பவுல் ரோமாபுரி சிறைகூடத்தில் இருந்தபோது (கி.பி 61-63) எழுதப்பட்டவை. 

கலாத்தியருக்கு எழுதியவற்றைப் பவுல் முறைப்படுத்தி விரிவாய் ரோமருக்கு எழுதிய வண்ணம் கொலோசேயருக்கு எழுதியவற்றைச் சற்று விரிவாக எபேசியருக்கு எழுதலானார். 

பிலேமோன் கொலோசே பட்டணத்துச் சபையைச் சேர்ந்த ஒரு செல்வந்தர் கொலோசெயருக்கு எழுதிய நிருபமும் பிலமோனுக்கு எழுதிய நிருபமும் பிலமோனின் அடிமை ஒநேசிமு எனபவன் மூலம் அனுப்பட்டன. (கொலே. 4:9)

போதகருக்கு எழுதிய நிருபங்கள். (Pastoral Epistles)
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதல் கடிதமும் தீத்துவுக்கு எழுதிய கடிதமும் பவுலின் முதல் சிறையிருப்புக்கும் இரண்டாம் சிறையிருப்புக்கும் இடையே (கி.பி. 65) எழுதப்பட்டன.


(ஆ) நான்கு அருட்செய்தி நூல்கள்

மத்தேயு – பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்குள்ள தொடர்பைக் காட்டும் நோக்கத்துடன் யூதர்களுக்கென எழுதப்பட்டது. மலைப்பிரசங்கம் (5-7 அதிகாரங்கள்) போன்ற நீண்ட அருள் உரைகள் நிறைய உள்ளன. 

மாற்கு – இயேசுவின் அற்புத செயல்களை விபரித்துக் கூறும் நோக்கத்துடன் ரோமருக்கென எழுதப்பட்டது. 

லூக்கா – இயேசுவின் உவமைகளை அதிகமாக்க் கூறி கனம்மிக்க தெயோப்பிலு என்பவருக்காகவும் கிரேக்க இனத்திற்காகவும் எழுதப்பட்டது. முதல் மூன்று அருட்செய்தி நூல்களிலும் பொருள் ஒற்றுமை அதிகமுண்டு. 

யோவான் – இதற்கும் முதல் மூன்று அருட்செய்தி நூல்களுக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. இந்நூலில் உவமைகளே இடம்பெறவில்லை. பேரடையாளங்கள்(Great Signs) எனப்படும் எட்டு அற்புதங்களும் அருளுரையும் உண்டு. இது திருச்சபைக்கென்று எழுப்பட்டது. 

மத்தேயு இயேசுவை அரசராக வர்ணிக்கின்றார். மாற்கு இயேசுவை உத்தம பணியாளராகக் காட்டுகிறார். லூக்கா இயேசுவை சிறந்த மனிதராகக் காட்டுகின்றார். யோவான் இயேசுவை ஒரே பேறான தேவகுமாரனாகக் காட்டுகின்றார்


(இ) சங்கீதங்கள்

சில சங்கீதங்கள் எழுதப்பட்ட சூழ்நிலை அவற்றின் தொடக்கத்தில் கூறப்பட்டிருக்கிறன. சங்கீதங்கள் 3,18,34,51,52,54,57,142 ஐ பார்க்கவும். 90ம் சங்கீதம் மோசேயின் மூலம் இயற்றப்பட்டது. திருவிழாவிற்கெனப் பயணம் செய்யும் இஸ்ரவேல் மக்கள் பாடிய பாடல்கள், மலைகளிடையே கட்டப்பட்ட எருசலேமிற்குச் செல்லும்போது இப்புனித நடை பாடல்களைப் பாடிக் கொண்டே ஏறிச் செல்வது மக்கள் வழக்கம். 


2. நூலை எழுதிய நோக்கம் 

(அ) நீதி மொழிகளின் நோக்கம்

“இவைகளால் ஞானம், போதகம், புத்திமதி விவேகம், நீதி, நியாயம், நிதானம், என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம். நீதி. 1:2,3

'உன் நம்பிக்கை கர்த்தர் மேல் இருக்கும்படி ….22:19

சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும், ஆலோசனையையும் ஞானத்தையும்பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? 22:20,21


(ஆ) லூக்கா அருட்செய்தி நூலின் நோக்கம்

மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, ......... உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய .. ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. 1:1-4


(இ) யோவான் அருட்செய்தி நூலின் நோக்கம்

இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. 20:31


(ஈ) யோவான் எழுதிய முதல் நிருபத்தின் நோக்கம்

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 5:13

நற்செய்தி நூல்களின் நோக்கம் – மக்கள் இரட்சிப்பு அடைவது நிருபத்தின் நோக்கம் – விசுவாசிகள் இரட்சிப்பின் நிச்சியத்தை அடைவது


(உ) பழைய ஏற்பாட்டின் நோக்கம் 

உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். ரோமர் 15:4

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (1 கொரி. 10:11)


(ஊ) வேதாகமத்தின் முழு நோக்கம்

வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; …….. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோ. 3:16,17)

(வளரும்)

Monday, 9 September 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 3- முன் பின் கவனிக்க(2)

4. முன்பின்னுள்ள வாக்கியங்களைக் கவனிக்காமல் விளக்கவுரை அளிப்பதால் ஏற்படும் தவறுக்கு எடுத்துக்காட்டுகள். 

(அ) “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். (யோசுவா 24:15) 
பலர் இந்த வசனத்தை ஆதாரமாகக் கொண்டு இயேசுவையே தெரிந்து கொள்ள மக்களை அழைக்கின்றனர். ஆனால் யோசுவாவின் கருத்து வேறு. கர்த்தரைச் சேவிக்க உங்களுக்கு மனமில்லை போலும். அப்படியானால் யாரைச் சேவிப்பீர்கள்? பாட்டன் பூட்டன்மார் வழிபட்ட சிலைகளையோ? அல்லது கானான் நாட்டுக் குடிகள் வழிபட்ட சிலைகளையோ? என்று யோசுவா பரியாசமாகப் பேசுகிறார். நீங்கள் எல்லாம் வல்ல இறைவனாகிய கடவுளைச் சேவிக்க மறுத்தால் வெறும் சிலைகள்தான் உங்கள் தெய்வமாகும். இந்தச் சிலையோ, அந்தச் சிலையோ இப்படிச் சிலைகளைத் தான் நீங்கள் தெரிந்துகோள்ள வேண்டும். அப்போது உங்கள் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கும். கர்த்தரைச் சேவிக்க உங்களால் முடியாது. இவைகள்தான் இக்கேள்வியின் மெய்ப்பொருளாகும். 

(ஆ) “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றான். அப்பொழுது அவர் நீ போய் இந்த ஜனங்களை நோக்கி….. சொல்” ஏசா. 6:8,9
இந்த வசனத்தின் மூலம் எத்தனை ஏராளமான நற்செய்தி ஊழிய அறைகூவல்கள்!! எத்தனையோ நற்செய்திப் பணியாளர்கள் இவ்வசனத்தால் அழைப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் 9ம் வசனத்திலிருக்கும் “நோக்கி” என்ற சொல்லுக்கு “சொல்” என்ற சொல்லுக்கும் பொருளைக் கவனிக்காமல் விட்டுவிலகுவது நியாயமா? ஏசாயா கூறவேண்டியது நற்செய்தியா? துர்செய்தியா? ஆசீர்வாதமா? சாபமா? (மத். 13:10-17ஐயும் அப். 28:25-28 ஐயும் பார்க்க)
பரம்பரையாக நாம் கேட்டுவரும் கருத்துக்கள் முழுவதும் தவறு என்பது என் கருத்தன்று. ஆனால் செய்தி அளிக்கும் பணியாளர்கள் எல்லோரும் தாங்கள் விளங்கஞ் செய்யும் வேத வசனத்தைத் திரித்துக் கூறாமல், தீர  சிந்தித்து. முன்பின்னுள்ள தொடர் வாக்கியங்களையும் கவனித்து, சரியான முறையில் தங்கள் செய்திகளை ஆயத்தஞ் செய்தல் வேண்டும் என்பதே என் கருத்து. நமது சொந்தக் கருத்துக்களைக் கூறாமல் தேவாதி தேவனுடைய அருட் செய்தியை நேர்மையாய் விளக்கஞ் செய்வதன்றோ நமது பணி.



5. பிறை அடைப்பு குறியினுள் போடப்பட்டிருக்கும் செய்திகள். 
       (Parenthetical passages that could be put within brackets)

(அ) சில சுருக்கமான வேறொன்று விரிக்கிற (Digression) வாக்கியங்கள். 
I. யோசுவா 6:1 எரிகோ பட்டணத்தின் நிலைமையை எடுத்துக் காட்ட சேர்க்கப்பட்ட ஒரு வசனம் “யோசுவா அப்படியே செய்தான்” (வச. 5:15) “கர்த்தர் யோசுவாவை நோக்கி ; இதோ” ….(6:2) என்று தொடர்ச்சியாக வாசிக்கலாம்.

II. தானியேல் 2:4 “அப்பொழுது கல்தேயர் (அரமேய அல்லது சீரிய மொழியில்) ராஜாவிடம் ….” இந்த வசனத்திலிருந்து 7:8 வரை தானியேல் எபிரேய மொழியில் எழுதாமல் அரமேய மொழியில் எழுதியிருக்கின்றார் என்பதைக் குறிப்பதற்காக இந்த மூன்று வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. தானியேல் 8:1 முதல் ஆகமம் முடியும்வரை மீண்டும் எபிரேய மொழியில் எழுதியிருக்கின்றார். 

III. யோவான் முதலாம் அதிகாரத்தில் மூன்று சுருக்கமான விளக்கவுரைகள் உண்டு. மூன்றும் பிறை அடைப்புக்குறிகளுள் போடப்பட வேண்டியவை. 1:38 “ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாகும்”. 1:41,42ஐயும் பார்க்க. 


(ஆ) சில நீண்ட வேறொன்று விரிக்கின்ற பகுதிகள் :
சில ஆசிரியர்கள் (சிறப்பாக பவுல் அடியார்) தாங்கள் சொல்லிக் கொண்டு வருகின்ற பொருளை இடையில் விட்டுவிட்டு வேறு பொருள்பற்றி எழுதிய பின் முன்பு விடப்பட்ட பொருளைப் பற்றி தொடர்ந்து எழுதுவர். குறிப்பாக.. 
I. 2 கொரி 2:13 இல் தீத்துவைக் காணவேண்டுமென்று விரும்பித் துரோவாவை விட்டு மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப் போனார் பவுல். தீத்துவைக் கண்டதனால் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் நான்கு அதிகாரங்களையும் ஒன்பது வசனங்களையும் மிக எழுப்புதலாக எழுதிய (பவுல் ஒரு எழுத்தாளர் மூலம் தம் நிருபங்களை எழுதினார்) பின் 7:6 ஆம் வசனத்தில் தாம் மறந்துபோன தீத்துவை மறுபடியும் நினைத்து தாம் விட்டுவிட்ட வரலாற்றை மீண்டும் தொடர்ந்து குறிப்பிடுகின்றார். ஆகவே 2:14 முதல் 7:4 வரையுள்ள இந்த நீண்ட பகுதி பிறை அடைப்புக்குறிக்குள் போடப்பட வேண்டியது என்று சொல்லலாம். அதற்காக இடைப்பறவரல் முக்கியமானவையல்ல என்பது பொருளன்று

II. எபேசியர் 3:1 இதனிமித்தம்
                             (3:2 - 3:13)
எபேசியர் 3:14 இதனிமித்தம்
                               அல்லது
எபேசியர் 3:1 கைதான பவுலாகிய நான்
                                 (3:2 - 3:21)
எபேசியர் ஆண்டவருக்குள் கைதியான நான்


III. ரோமர் 5:12 முற்றுப்பெறாத வாக்கியம் “இப்படியாக ….பாவமும் …மரணமும்  பிரவேசித்தது போலவும்” எல்லா மனிதரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் –இதுவுமாயிற்று (ப.தி, பு.தி) என்ற சொல் மூலத்தில் இல்லை. பவுல் சில மறைபொருட்களை விளக்க ஐந்து வசனங்களை 5:13-17 வேறொன்று விரிக்கின்ற பகுதியை எழுதியபின் 2ஆம் வசனத்தில் முடிக்காத காரியத்தை மீண்டும் 18இல் எழுத அதை நல்ல முறையில் முடித்து விடுகின்றார். ரோமன் கத்தோலிக்க திருப்புதல் “ஒரே மனிதனால் பாவமும், பாவத்தால் சாவும் இந்த உலகத்தில் நுழைந்தது போலவும், இவ்வாறு எல்லோரும் பாவஞ்செய்தமையால் எல்லா மனிதருக்குள்ளும் சாவு பரவியது போலவும்.... ஏனெனில்” என்று கூறுவது சரியே..



6. சில இடங்களில் இருவர் அல்லது மூவர் ஒருவரோடொருவர் உரையாடுகின்ற உரையாடல் நடை நமக்கு இடர்பாட்டைத் தரலாம்
(அ) ஆபகூக் என்ற ஆகமத்தில் தீர்க்கதரிசியும் தேவனும் ஒருவரோடொவர் உரையாடுகின்றனர். 
தீர்க்கதரிசி                                      தேவன்
ஆப. 1:1-4 நீர் கேளாமலிருக்கிறீரே                         1:5-11
ஆப. 1:12-2:1 நீர் மௌனமாயிருக்கின்றதென்ன                 2:2-4

(ஆ) ரோமர் நிருபத்தில் வாக்குவாதத்தில் திறமையுள்ள வேதபாரகன் ஒருவனுக்கு நிருபாசிரியருக்கும் விவாதம் நடப்பது ஆங்காங்கு காணப்படுகின்றது. தடை செய்கின்றவர் கீழ்காணும் கேள்விகளைக் கேட்கின்றர்

ரோமர் 3:1 : அப்படியானால் மற்றவர்களை விட யூதனுக்கு கிடைத்த நன்மை 
                       என்ன? விருத்தசேதனத்தால் பயன் என்ன?
பதில்         :  சுருக்கமாக 3:2 இலும் சற்று விரிவாக 9:4,5 இலும் கூறப்பட்டுள்ளது. 

ரோமர் 3:3 : அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை 
                         அவமாக்குமா?
பதில்            : 4ஆம் வசனத்தில் காணப்படுகின்றது. 

ரோமர் 3:5 :   தேவன் அநீதராயிருக்கின்றார் என்று சொல்லலாமா?
பதில்         :    ஒருகாலுமில்லை. (3:6)

ரோமர் 3:8 :     நன்மை வரும்படி தீமை செய்யலாமா?
பதில்         :     மேற்சொல்லிய நான்கு வினாக்களுக்குள் முதல் மூன்று 
                          கேள்விகளுக்கு விரிவான விடை 9ஆம் அதிகாரத்தில் 
                           அளிக்கப்பட்டுள்ளது. 

ரோமர் 6:1  : அப்படியானால் என்ன சொல்வோம்? அருள் பெறும்படி பாவத்தில் 
                        நிலைத்திருப்போம் என்போமா? 
பதில்             :  கூடாதே

ரோமர் 7:7 : அப்படியானால் நான் என்ன சொல்வது நீச் சட்டமும் பாவமும் 
                       ஒன்றுதானா? 
பதில்          :  ஒருகாலும் இல்லை

ரோமர் 9:6 : தேவ வசனம் அவமாய்ப் போயிறா?
பதில்             அப்படிச் சொல்லக் கூடாது

ரோமர் 9:14 :  கடவுளிடம் அநீதி உண்டா?
பதில்             :  ஒருகாலுமில்லை. 


7. இன்னும் ஒரு இடங்களில் நிருபாசிரியர் தன்னிடம் ஏற்கனவே வந்துள்ள கடிதத்தின் சில வார்த்தைகளையும் தன்னுடைய விரோதிகள் தன்னைப் பற்றித் தீதாய் சொல்லிய சில வசைமொழிகளையும் மேற்கோளாக்க் கூறுகின்றார்.
(அ) 1 கொரி. 6:12, 10:23 ப.தி “எல்லாற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு”. R.C.V- “எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு”. 1 கொரி 6:13 “உணவு வயிற்றுக்கென்றே உள்ளது. வயிறு உணவுக்கென்றே உள்ளது” என்கிறீர்கள். (R.C.V)
இது கொரிந்தியர் பயன்படுத்திய ஒரு பழமொழி உடலைச் சார்ந்தது. ஒழுக்கச் சார்பற்றது என்று பொருள்படும். ஆகவே விபச்சாரமும் வேசித்தனமும் கூட குற்றமன்று என்பர். உடல் தேவையை நிறைவு செய்யும் ஒரு வாய்ப்பு  என்று கூறுவர். கொரிந்தியரின் தவறான கருத்துக்குப் பலமான மறுப்பு கூறுகின்றார் பவுல்

(ஆ) 1 கொரி. 8:1 “நம் எல்லோருக்கும் அறிவண்டு என்கிறீர்கள். (R.C.V)

(இ) 2 கொரி. 10:1 ப.தி. “தூரத்திலிருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாய் இருக்கிறேன். என்றா சொல்கிறீர்கள்
R.C.V – உங்களோடு இல்லாதபோது கண்டிப்பாய் இருக்கிறேன் என்றா சொல்கிறீர்கள். 
R.C.V – பவுலினுடைய கடிதங்கள் கடுமையானவை. அழுத்தம் மிக்கவை. ஆனால் அவரை நேரில் பார்த்த சிலர் “தோற்றமுமில்ல பேச்சுத் திறனுமில்லை.” என்று கூறியதாக உள்ளது. 

(ஈ) 2 கொரி. 12:16 “தந்திரத்தால் உங்களைப் பிடித்தேனாம். “இது சரியாக காணப்படுகின்றது. இது போலவே அநேக வசனங்களை மிகவும் தெளிவான முறையில் தூத்துக்குடி R.C. கழகத்தினர் மொழிபெயர்ப்பு செய்துள்ளது மிகவும் பாரட்டத்தக்கது. 


இரண்டாம் விதி நமக்கு கற்றுத் தருவது
முன்பின்னுள்ள வசனங்களைக் கவனித்தே வசனத்தை விளக்க வேண்டும். 

Tuesday, 3 September 2013

திருமறையை விளக்கும் முறை அத்தியாயம் 3- முன் பின் கவனிக்க(1)



விதி 2 முன் பின்னுள்ள வாக்கியங்களைக் கவனித்தே வசனத்தை விளக்கச் செய்தல் வேண்டும். 

இந்த விதியைக் கடைபிடிக்காத காரணத்தால் அநேக தவறான கருதுக்களும் கொள்கைகளும் பரவியிருக்கின்றன. நகைப்பிற்கேது வான சில விளக்கவுரைகளை நாம் பிரசங்க பீடங்களில் கூறப்பட்டு வருகின்றன. 

உதாரணமாக திறமை வாய்ந்த போதகர் “பாளையம்” என்ற வார்த்தையின் பேரில் பிரசங்கத்தை ஆயத்தஞ் செய்ய விரும்பி ஒத்தவாக்கிய அகராதியில் “பாளையம்” என்ற சொல்லைக் கண்டுபிடித்தார். அகராதியில் இருந்த ஏராளமான வசனங்களுள் பிரசங்கமளிப்பதற்குப் பொருத்தமாயிருப்பதாக தான் நினைத்த பத்து வசனங்களைத் தேர்ந்தெடுத்து (யாத்திரகாமம் முதல் வெளிப்படுத்தல் முடிய) செய்தி அளித்தார். அவ்வசனங்களில் யாத். 32:17, 18 யைப் பற்றி பேசுகையில் கிறிஸ்தவ பாளையத்தில் பாடல்தொனி கேட்க வேண்டும் என்றார். ஆனால் முன் பின்னுள்ள தொடர் வாக்கியங்களைப் பார்த்தால் அந்தப் பாடல் கண்டிக்கப்படத்தக்க அவலட்சணமான பாடலின் இரைச்சலாயிருந்தாகத் தெரிகின்றது. இந்த மாதிரிப் பாடல் கிறிஸ்தவ பாளையாமாகிய திருச்சபையில்கேட்கப்பட வேண்டுமா? பின்னும் உபாகமம் 23:14 'உன் தேவனாகிய கர்த்தர்…. உன் பாளையத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கிறார்.” என்ற வசனத்தையும் குறிப்பிட்டார். ஆனால் இதற்கு முன்னுள்ள 13ம் வசனத்தை அவர் விளக்கஞ் செய்யாமல் விட்டுவிட்டார். நாம் வேதவசனத்தின் கருத்தைத் திரித்துக் கூறுவது குற்றமாகும். மேற்கூறியவாறு ஒத்த வாக்கிய அகராதியைப் பயன்படுத்துவது தவறான கருத்துக்களை நாமாகவே உருவாக்கிக் கொள்ளும் குற்றத்திற்கு ஏதுவாகும். 




1. ஓரே சொல்லுக்கு முன் பின்னுள்ள வசனங்களுக்குகேற்ப வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக விசுவாசம், மாம்சம் இரட்சிப்பு என்ற சொற்களைக் குறித்து ஆராய்வோம். 


(அ) விசுவாசம் : இந்தச் சொல்லுக்குக் குறைந்தது நான்கு பொருள் கூறலாம்
I. விசுவாசம் – நற்செய்தி கலா. 1:23; 1 தீமோ 3:9 4:1 

II. விசுவாசம் – நல் மனச்சாட்சி ரோமர் 14:23
”விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே – ப.தி ; பு.தி. அல்லது உறுதியான மனநிலையோடு (நல்லெண்ணத்தோடு) செய்யாதது பாவமாகும்” (R.C.V)

III. தெய்வீக உண்மைகளைப் பற்றும் தன்மை எபி. 11:6 இந்தக் கருத்தில் விசுவாசம் தன்னம்பிக்கைக்கு ஒத்ததாயிருக்கின்றது. 

IV. பாவ மன்னிப்பு, பரிசுத்தம் இவைகளுக்கு ஆதாரமான கிறிஸ்துவையும், அவருடைய பிராயச்சித்தத்தையும் (atonement) மனப்பூர்வமாய் பற்றும் தன்மையே ரோ 3:28 இல் பார்க்கிறோம். இதுவே இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் பவுல் அப்போஸ்தலன் இந்தக் கருத்தை மனதில் கொண்டு அடிக்கடி இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றார். 

(ஆ) மாம்சம்.: இந்தச் சொல்லுக்கு குறைந்த்து மூன்று பொருள் உண்டு. 
I. சாதாரண கரத்து : யோவான் 1:14, ரோமர் 1:5, 9:3 மனிதத் தன்மை மாமிசம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. பாவம் என்பதைப் பற்றிய எண்ணமேயில்லை. 

II. பாவத்தால் தீட்டுப்பட்டுப்போன மாம்சம் அல்லது மனிதத் தன்மை. ரோமர் 8:5, எபே. 2:3

III. மாம்சம். – சடங்கு கலா. 3:3, 6:12, பிலி. 3:3

(இ) இரட்சிப்பு : என்ற சொல்லுக்கு குறைந்தது ஐந்து பொருள் உண்டு. 
I. இரட்சிப்பு – சரீர அல்லது நாட்டுப் பாதுகாப்பு. யாத். 14:13, நியா. 2:16, 3:9,15 அப். 7:25
இந்த இரட்சிப்பு … ஆன்மீக இரட்சிப்புக்கு நிழலாட்டமாயுள்ள ஒரு முன்னடையாளமாயிருக்கலாம்

II. இரட்சிப்பு – உடல் நலம் யாக். 5:15 விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் (ப.தி)

III. இரட்சிப்பு – இப்பொழுது அனுபவித்து வருகின்ற மீட்பு எபே. 2:8, லூக் 1:77

IV. இரட்சிப்பு – வருங்காலத்தில் வெளிப்படப்போகின்ற மீட்பு ரோமர் 13:11; 1 பேதுரு 1:5

V. இரட்சிப்பு – நற்செய்தி எபி. 2:4



2. முன்பின்னுள்ள வாக்கியங்கள் ஒரு சொல்லின் கருத்தை மட்டுப்படுத்தக் கூடும்.

(அ) “என் நீதியின்படி என்னை விசாரியும்” சங். 7:8, 18:20
தான் முழுவதும் நீதிமான் என்பது தாவீதின் கருத்தன்று. ஆனால் “கூஷ்” தன்பேரில் சாட்டின குற்றத்தில் தான் தாவீது கூறுகிறார். யோபும் இதேகருத்துடன் அடிக்கடித் தன்னை நீதிமான் என்று அழைக்கின்றார். 

(ஆ) இவன் செய்த பாவமுமல்ல…” (யோவான். 9:3)
இவனும் இவன் பெற்றோரும் எந்தப் பாவத்தையும் செய்த்தில்லை என்பது இதன் கருத்தன்று. இவனுடைய குருட்டு நிலைமைக்கு இவன் பெற்றோரோ அல்லது இவனது முன்னோரோ காரணம் அல்ல என்று ஆண்டவர் கூறுகின்றார். 

(இ) “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக். 5:15)
பிணியாளியைக் குணக்மாக்கும் என்பது பொருள் ரோமன் கத்தோலிக்க பாதிரியின் அவஸ்தை பூசைக்கோ (Extreme Unction) அல்லது தெய்வீக சுகமளிக்கும் மாபெரும் நற்செய்திக் கூட்டங்களுக்கோ இங்கு ஆதாரமில்லை என்பதைக் கவனிக்கவும். 

(ஈ) “பெண்ணைத் தொடாமலிப்பது நல்லது (1 கொரி. 7:1)
திருமணம் செய்யாதிருப்பது நல்லது என்பது கருத்தன்று. (திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக என்று எபி. 13:4 கூறுகின்றது) அக்காலத்தில் நிலவிய பயங்கர சூழ்நிலையினிமித்தம் திருமணம் செய்யாதிருப்பது நலமாயிருக்கும் என்று பவுல் எண்ணியிருக்கலாம். 
திருமணம் செய்யாத வாலிபர்கள் பெண்ணைத் தொடமலிருப்பது நல்லது என்ற பொருளும் இவ்வசனத்தில் காணக்கூடும். திருமணமான பின் கணவன் தன் மனைவியைத் தொடாமலிருப்பது குற்றமாகலாம். (1 கொரி. 7:3-5)


3. வஞ்சிப்புகழ்ச்சி அல்லது பரியாச முறையில் சொல்லப்படும் கூற்றுக்களைச் சொல்லுக்குச் சொல் பொருள் செய்யாமல் உடக்கருத்தைக் கவனிக்க வேண்டும் 

(அ) பிலேயாம் தான் போகவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தபின் தேவனின் அனுமதியைப் பெறும் பொருட்டு மீண்டும் மீண்டும் அவரைத் தொந்தரவு செய்த்தின் விளைவாக கடவுள் “போ” என்று அனுமதி அளித்தார். (எண். 22:20) ஆனால் பிலேயாம் செல்வது கடவுளுக்குச் சித்தமில்லை என்பது தெளிவு. (எண். 22: 22) 

(ஆ) “போம், உமக்கு வாய்க்கும்” (1 இரா. 22:15) தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளைப் பரியாசமாகப் பேசியதாக அரசரே அவனுடைய தொனியினாலோ முகத் தோற்றத்தினாலோ தெரிந்துகொண்டார். மிகாயாவின் உண்மையான கருத்து 17ஆம் வசனத்திலுள்ளது. 

(வளரும்)


Tuesday, 27 August 2013

திருமறையை விளக்கும் முறை - அத்.-2 -இலக்கணம் இன்றியமையாததே(3)

5. பெயர் வழக்கங்கள்

(அ) பல அரசர்களுக்கு ஒரே பெயர் இருந்தது. 

I. பார்வோன் : ஆபிரகாம் காலம் முதல் தானியேலின் காலம் வரை எகிப்து
        நாட்டின் அரசர்களுக்கெல்லாம் பார்வோன் என்ற பெயர் வழங்கியது. 

II. பித்தொலொமி : பேரரசன் அலெக்சாந்தரின் காலத்திற்குப் பின் மூன்று
        நூற்றாண்டுகளாக எகிப்து நாட்டின் அரசர்களுக்கு பித்தொலொமி என்ற
        பெயர் வழங்கப்பட்டது. 

III. அபிமெலேக்கு : பெலிஸ்திய அரசர்களுடைய பொதுப் பெயர் 
        (ஆதி. 20:2 ; 26:1; சங். 34 தலைப்பு)

IV. பெனாதாத் : சீரியா நாட்டின் அரசர்களுடைய பொதுப் பெயர் 
        (1 இராஜா 20:1, 2 இராஜா 8:7; 13:24)

V. ஏரோது : புதிய ஏற்பாட்டில் நான்கு அரசர்களுக்கு ஏரோது என்ற பெயர்
        வழங்கப்பட்டது. 


(ஆ) சிலருக்கு இரண்டு பெயர்கள் இருந்தன.

I. மேசேயின் மாமனுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாகத் தெரிகின்றது.
        எத்திரோ(யாத். 3:1) ஓபாப். (நியா 4:11)

II. லேவி. (மாற். 2:14) (மத்தேயு 9:9; 10:3)

III. திதிமு எனப்பட்ட தோமா(யோவான் 11:16; 20:24;21:2) திதிமு என்பது
       இரட்டைப் பிள்ளைகளைக் குறிக்கும்.
நான்காம் சுவிஷேசத்தில் மட்டும்
      திதிமு என்ற பெயர் வழங்கப்படுகின்றது. 

IV. சவுல் (அப். 7:58 முதல் அப். 13:9 முடிய)
        பவுல் (அப். 13:9 முதல் இறுதி வரை)

V. சீலா (அப். 18:5 சில்வானு (2 கொரி. 1:19)


(இ) ஒரே பெயர் கொண்ட இருவர்

I. யாக்கோபு யோவானுடைய சகோதரன் பன்னிருவரில் ஒருவன் (மத். 10:2)
        சிரச்சேதம் பண்ணப்பட்டவன். (அப். 12:2)
       யாக்கோபு இயேசுவின் சகோதரன் (மத். 13:55; கலா. 1:19) எருசலேம் சபை
       மூப்பர் (அப். 15:13) நிருபத்தை எழுதியவர் (யாக். 1:1)

II. பிலிப்பு பன்னிருவரில் ஒருவன் (மத். 10:3)
        பிலிப்பு எழுவரில் ஒருவன் (அப். 6:5; 21:8) நற்செய்திப் பணி செய்தவன் 
         (அப். 8:5; 21:8)


(ஈ) வெவ்வேறு இடங்களுக்கு ஒரே பெயர்

I. செசரியா – பிலிப்பு செசரியா மத். 16:13
கலிலேயா கடலுக்கு வடக்கே, யோர்த்தான் நதிக்கு கிழக்கே, எர்மோன் மலைக்குத் தெற்கே, செசரியா துறைமுகம் அப். 10:1; 12:19;23:23 முதலியன கடலோரமாயுள்ளது. சமாரியா நாட்டிலுள்ளது. 

தமிழ் வேதாகமப் புத்தகத்தில் மூன்றாவது தேசப்படத்தில் (பலஸ்தீனா தேசம் புதிய ஏற்பாட்டின் காலத்தில்) இவ்விரண்டு செசரியா பட்டணங்களும் தெளிவாக்க் காட்டப்பட்டிருக்கின்றன.)

II. அந்தியோக்கியா- சீரியா நாட்டு அந்தியோக்கியா (அப். 11:20,26: 13:1) தமஸ்குவுக்கும் தீரு சீதோனுக்கும் வடக்கே சீப்புரு தீவுக்கும் கிழக்கே உள்ளது. 

இது நான்காவது பாடத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அதைக் கண்டுபிடிப்பது சற்றுக் கடினம். கலாத்தியா என்ற நாட்டின் பெயருக்குப் பக்கமாகவும் “க” என்ற எழுத்துக்கும் “ல” என்ற எழுத்துக்கும் நடுவாகவும் போட்டிருக்கிற புள்ளிதான் பிசீதியா நாட்டு அந்தியோகியா


(உ) ஒரே இடத்திற்கு மூன்று பெயர்கள் 

I. எகிப்து நாடு
       காம் (சங். 78:51; 105:23) என்றும் ராகப் (சங். 87:4; 89:10;  ஏசாயா 51:9)  என்றும்
       அழைக்கப்பட்டது. ஏசாயா 30:7 இல் சும்மாயிருப்பது இறை மக்களுக்கப்
       பெலன் என்று பொருள்படுமா? அல்லது உதவி செய்ய விரைவாய்
       வரவேண்டிய எகிப்தியர் வராமல் சும்மாயிருப்பார்கள் (சும்மாயிருக்கும
       ராகாப்) என்று பொருள்படுமா?(புதிய திருப்புதலைப் பார்க்கவும்)

II. எருசலேம் 
       சீயோன் (சங். 137:1 என்றும் தாவீது வாசம் பண்ணின அரியேல் (ஏசாயா 29:1)
       என்றும் அழைக்கப்பட்டது.

III. சீனாய்மலை
        ஓரேப் (சங். 106:19) என்றும் அழைக்கப்பட்டது.

IV. கலிலேயா கடல்
       திபேரியா கடல்(யோவான் 21:1) என்றும் கின்னரேத் கடல் (எண். 34:11)
      என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 

V. சாக்கடல் (Dead Sea)
      இந்தப் பெயர் வேதத்தில் இல்லை. மாறாகச் சமபூமயின் கடல் (2 இரா. 14:25)
       என்றும் கீழ்க் கடல் (எசேக். 34:3,12) என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. 

VI. மத்திய தரைக்கடல்
        மத்திய தரைக்கடல் என்ற பெயர் வேதத்தில் இல்லை. வேத்த்தில்
      பெலிஸ்தரின் சமுத்திரம் (யாத். 23:31) என்றும் கடைசி சமுத்திரம் (உபா.                  11:24;34:2; யோவேல் 2:20) என்றும் பெருங்கடல் (எண். 34:6,7) என்றும்                           வழங்கப்பட்டுள்ளது. 


முதல் விதி நமக்கு கற்றுத் தருவது
இலக்கண விதிகளின்படி வசனத்திலுள்ள சொற்களின் சாதாரணப் பொருளை நாம் முதலாவது கண்டறிய வேண்டும். 


(அத்தியாயம் 2 முற்றிற்று)
(வளரும்)