- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Showing posts with label ஜெபம். Show all posts
Showing posts with label ஜெபம். Show all posts

Saturday, 13 August 2011

அசாதரண ஜெபவீரர்


“புகழ்பெற்ற மனிதர்“ என்ற பெயரை ஈட்டுவதற்கு ஒருவர் செல்வந்தவராகவோ அல்லது அநேகரால் அறியப்பட்டவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வுண்மையை வேதாகமம் சிலரது வாழ்க்கை மூலமாக விளக்குகிறது. இம்மனிதர்களைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் சர்வ வல்லவரின் கரத்தில் தங்களை அர்ப்பணித்தவுடன் இவர்களது வாழ்வில் கிடைத்த உயர்வுகளும் சிறப்புகளும் இவர்களை வியத்தகு சாட்சிகளாக மாற்றிவிட்டன. அத்தகைய மனிதர்களில் ஒருவர்தான் யாபேஸ்

சத்திய வேதத்தின் இரு நாளாகம பத்தகங்களும் இஸ்ரவேலரின் வரலாற்றை விளக்கும் காலக் குறிப்பேடுகளாகத் திகழ்கின்றன எனக் கூறுவது மிகையாகாது. 1 நாளா. 4:9 வரையுள்ள வம்ச அட்டவணையில் சுமார் 425 மனிதர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளும், சிறப்புக்களும் அதி்ல குறிப்பிடப்படவில்லை. இப்பட்டியலின் நடுவே 9,10 ம் வசனஙக்ளில் யாபேஸ் என்பவரது ஜெபம் காணப்படுகின்றது.

யாபேஸ் செல்வந்தர் அல்லர்; பெரும் பதவியை வகிகத்தவரும் அல்லர். ஆயினும் இவர் செய்த இச்சிறு ஜெபம் இவரை புகழ் ஏணியின் உச்சிக்குக் கொ்ண்டு சென்றது எனலாம். “யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய் : நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி : “தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்க என்னைத் துக்கப்படுத்தாத படிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்“ என்று வேண்டிக் கொண்டான். அவன் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.“ என்று தேவனோடும் மனிதனோடு்ம் போராடி மேற்கொண்ட கோத்திரப் பிதா யாக்கோபு வேண்டியதுபோலவே யாபேஸ் ஜெபத்தில் ஆசீர்வாதத்திற்காகப் போராடினார். “அவர் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார்“

யாபேஸ் தன் சகோதரரைப் பாரக்கிலும் கனம் பெற்றவராயிருந்தார். இவ்வதிகாரத்தின் வம்சவரலாற்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர் எவரும் தாழ்ந்தவர்களோ இழிவானவர்களோ இழிந்தவர்களோ அல்லர். அவர்களைப் பற்றிய மோசமான குறிப்புகளும் இங்கு தரப்படவில்லை. ஆயினும் தம்மைக் கனபப்டுத்துகிறவர்களை உயர்த்தும் தேவன், யாபேஸின் ஜெபத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டு, அவரைக் கனப்படுத்துகிறவர்களை உயர்த்தும் தேவன், யாபேஸின் ஜெபத்தை இவ்விடத்தில் குறிப்பிட்டு அவரைக் கனப்படுத்தியிருக்கின்றார். தேவன் உள்ளீடாக அருளியதை யாபேஸ் தனது ஜெபத்தில் வெளியீடாக தந்தார். நம் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வேதவசனம் கூறுகிறது. இக்கருத்தினை மாபெரும் ஊழியக்காரரான ஹட்சன் டெய்லர் ஒரு வாலிபர் கூடுகையில் செயல் விளக்கமாக காட்டினார். அவர் உரையாற்றுமிடத்தில் ஒரு மேஜையில் நீர் நிரம்பியிருந்த பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தனது சொற்பொழிவின் நடுவே அவர் அம்மேஜையை அடிக்கடி தட்டினார் அந்த அதிர்வில் பாத்திரத்திலிருந்த நீர் வெளியே சிந்தியது. “பாத்திரத்தின் உள்ளே என்ன இருக்குமோ அதுவே வெளியே வரும்“ என்பதை அழகாக வாலிபர்களுக்கு புரிய வைத்தார். 

யாபேஸின் ஜெபத்திலிருந்து அவரது இருதயத்தின் நினைவுகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதையே இயேசுக்கிறிஸ்துவும் “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.“ லூக். 6:45  இல் விள்க்கியுள்ளார். யாபேஸ் தன் சகோதரனைப் பார்க்கிலும் கனம் பெற்றவராய் இருந்தார். சிறந்த குணசீலர். ஆயினும் அவர் துக்கமுடையவராய்க் காணப்படுகிறார். யாபேஸ் என்ற சொல்லுக்கு துக்கம் என்று பொருள். அவருடைய தாயார், “நான் துக்கத்தோடே இவனைப் பெற்றேன்“ என்று கூறினதாக நாம் வாசிக்கிறோம். ஒருவேளை பிரசவத்தின்போது அதிக வேதனையையும் வலியையும் அவர் அனுபவித்திருக்கக் கூடும். ஆயினும் துக்கத்தோடே அவர் பெற்ற அம்மகன் ஜெபத்தினால் விலையேறப்பெற்ற மகனாக மாறினான். 

வம்சவரலாறு அட்டவணையில் இடம்பெற்ற நுற்றுக்கணக்கானவர்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளவர் இவரே “ஸ்த்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருககும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்“ (யோவான் 16:21) என்று இயேசு கூறினார். இந்தப் பிரசவவேதனையை அனுபவிக்கின்றவள் தனது சிசுவைக் கையில் ஏந்தியவுடன்  அவளது துக்கம் சந்தோஷமாக மாறிவிடுகிறது. ஆர்வத்துடன் காத்திருக்கும் உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைகின்றனர். நமது வாழ்விலும் பல நிகழ்வுகள் துக்கத்தில் ஆரம்பமானாலும் சந்தோஷத்தில் முடிவுறுவதை அறிவோம். யாபேசின் வாழ்க்கை துக்கத்தில் ஆரம்பமானாலும் அது வெகுவிரைவில் மகிழ்ச்சியாக மாறினது. நமது ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவும் ஸ்திரியின் வித்தாக இவ்வுலகில் வந்து பாடனுபவித்து நம்மை மீட்கும் இரட்சகராகி மகிமையடைந்தாரே.

பழைய ஏற்பாட்டு நூலில் நீதிமானாகிய நோவா முதல் அநேக பக்தர்கள் தேவனை நோக்கிக் கூப்பிட்டதாக நாம் வாசிக்கிறோம். இவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் தேவனோடு நெருங்கி உரையாடும் உறவை பெற்றிருந்தார்கள்.இவ்வரிசையில் யாபேசும் ஒருவர். இவர் சிறந்த பண்பாளராகத் திகழ்ந்தாலும் இவரது ஜெபமே அனைத்திலும் மகுடமாக அமைந்துள்ளது. இவரது ஜெபம் கேட்கப்படுவதற்கு இவரது குணமும் முக்கியக் காரணமாகும். 

பிரியமானவர்களே உங்களது ஜெபமானது கேட்கப்படவேண்டுமானால் உங்களுடைய வாழ்வு செம்மையாயிருத்தல் அவசியமாகும். “பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லை“ என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே நம்முடைய தனிப்பட்ட வாழ்வு ஒழுங்க்கமானதாகவும் தேவனிடம் நெருங்கி உறவாடும் நிலையையும் கொண்டிருத்தல் வேண்டும். யாபேசின் ஜெபம் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. என்னை ஆசீர்வதியும்
ஆசீர்வாதத்தை விரும்பி யாபேஸ் இந்த ஜெபத்தை ஏறெடுத்துள்ளார். தேவன் உங்களை ஆசீர்வதிக்கக்கேட்டு நீங்கள் ஜெபித்ததுண்டா? இவ்வாறு கேட்பது சரியா? தேவன் வாக்குப்பண்ணாததை அவர் கேட்கவில்லை. தேவன் வாக்களித்த தேனும் பாலும் ஓடு் தேசத்துக்குள் இஸ்ரவேலர் பிரவேசித்துவிட்டனர். ஆனால் அங்கே வசித்துவந்த கானானியரைத் துரத்தி விட அவர்களால் இயலவில்லை. ஆகவே யாபேஸ் தேவன் ஆணையிட்ட அக்காரியத்தை நிறைவேற்ற வஞ்சித்தார். மேலும், தேவனுடைய ஆசீர்வாதம் தனக்கு இல்லையெனில் தானும் வெற்றிபெற இயலாது என்பதை யாபேஸ் அறிந்திருந்தார். எனவேதான். “தேவனே நீர் கட்டளையிட்ட பணியை நான் நிறைவேற்ற என்னை ஆசீர்வதியும்“ என ஜெபித்தார் நாமும் கூட நமது முயற்சியில் வெற்றியடைய வேண்டுமெனில் நமககு தேவ ஆசீர்வாதம் தேவை என்பதை ஒத்துக் கொள்ள அதற்காக ஜெபிக்க வேண்டும். 

2. என் எல்லையை பெரிதாக்கும். 
அநேகர் “இது செழிப்பினை விரும்புவதாயும் சுயநலத்தை வெளிப்படுத்துவதாயும் உள்ளது“ ஆகவே இவ்வாறு நாம் ஜெபிப்பது தவறு எனக் கூறுகின்றனர். ஆனால் இவ்வாக்கியத்தை நாம் ஆராய்வோமானால் இது வெளிப்படுத்தும் கருத்து வேறு என்பதை நாமறிந்து கொள்ளலாம். “உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,“ (உபா 19:9) ஆனால் இதனை இஸ்ரவேலில் தனது இனத்தார்களோ, சகோதரர்களோ நிறைவேற்ற இயலாததால்தான் யாபேஸ் முயற்சிசெய்ய எண்ணினார். அதிக நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் மண்ணாசையில் இதனை அவர் கேட்கவில்லை என்பது தெளிவு.

3. தேவரீர் என்னோடிரும்
தேவனே எனக்கு அதிக செல்வத்தையும் தாரும் என்று எவரேனும் ஜெபித்தால் அவரது குணத்தை நாம் சந்தேகிக்கிறோம். ஆனால் வசனம் 9 இல், யாபேஸின் குணநலத்தையும் வசனம் 10ல் அவரது நோக்கத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம். மேலும், தேவரீர் என்னோடு இரும் என்று யாபேஸ் விண்ணப்பிக்கிறார். முதலாவது தேவனுடைய ஆசீர்வாதத்தையும் இரண்டாவது செழிப்பையும் மூன்றாவது தேவனுடைய பிரசன்னத்தையும் நாடுகிறார். இன்று அநேக விசுவாசிகள் தேவனுடைய ஆசீர்வாதத்தை மட்டும் தேடுகிறார்களேயன்றி அவரது பிரசன்னத்தையோ விரும்புவதில்லை. ஆனால் யாபேஸோ “தேவனே, இஸ்ரவேல் மக்களுக்கு நீர் கொடுத்த ஆணையை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். இது என்னால் கூடாத காரியம். ஆகவே, தேவரீர் என்னோடு கூட இருந்து என் கரத்தைப் பிடித்து வழிநடத்தும்.“ என்று கெஞ்சுகிறார்

தேவன் எம்மோடிருக்கிறார் என்ற வேதவசனம் நமக்கு ஆறுதலை அளிக்கிறது. “போ“ மற்றும் செய் என்று தேவன் நமக்கு கட்டளையிட்டுவிட்டு அவர் பரலோகத்தில் ஓய்வு எடுப்பதில்லை. “இதோ, உலகத்தின் முடிவுப்பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.“ என்று அவர் நமக்கு வாக்குப் பண்ணியுள்ளார். தேவன் நமக்கு முன்னே செல்கிறார். (ஏசா. 48:17) நமக்கு பின்னே இருக்கிறார் (ஏசா 30:1) அவருடைய நித்திய புயங்கள் நமக்குக் கீழே ஆதாரமாய் உள்ளது. (உபா. 33:27) தேவனுடைய ஆவி எனக்குள்ளே இருக்கிறது. (1 கொரி. 3:16) மேலே, கீழே, வலது, இடது, முன்னே, பின்னே எங்கு சென்றாலும் தேவனை நம்மோடு அழைத்துச் செல்கிறோம். அவர் விரும்பாத எந்த இடத்திற்கும் நாம் செல்லக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

அநேகர் நாம் விரும்பிக் கேட்கும் காரியத்தை தேவன் தர மறுத்துவிடுவார் என அஞ்சி சிலர் அவற்றை கேட்பது கிடையாது. நாம் தேவனிடத்தில் கேட்பதனால் அவரை நிர்ப்பந்திப்பது இல்லை. “தேவனே என்னைக் காப்பாற்றும்“ என்பதற்கும் “தேவனே, நான் இன்று செல்கிற பிரயாணத்தில் என்னைக் காப்பாற்றும்“ என்பதற்கும் வித்தியாசம் உண்டு். இரண்டாவது ஜெபம் குறிப்பிட்டுக் கேட்கும் ஜெபமாகும். அதேபோல் “எனக்கு வாழ்க்கைத் துணையைத் தாரும்“ என ஜெபிப்பது வேறு. எனக்கு இன்னாரைத் தாரும் என ஜெபிப்பது வேறு. நம்முடைய தேவைகளை நமது பரலோகப் பிதாவினிடத்தில் கேட்பதில் தவறில்லை. ஆனால் அவர் அவ்விதமான பதிலை தரவேண்டும் என அவரை நிர்ப்பந்திக்கக் கூடாது. 

பவுல் உரோமாப்புரியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதும் நிருபத்தில் ஜெபத்தை குறிப்பிடுகிறார். “எவ்விததிலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.“ தனது சூழ்நிலையில் தேவன் கிரியை செய்தற்கு பவுல் தன்னை அர்ப்பணிக்கிறார். இங்கு அவரது ஜெபம் தேவனை நிர்ப்பந்திக்காத முறையிலேயே உள்ளது. 

4. தீங்கிற்கு என்னை விலக்கிக் காத்துக் கொள்ளும். 
இங்கே, யாபேஸ் சொல்லும் தீங்கு சரீரத்தின் தீங்கைக் குறிக்கிறது. தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆணையிட்ட தேசத்தைதச் சுதந்தரிக்கும் முயற்சியில் அநேக தீங்குகள் நேரிடலாம். அத் தீங்கிலிருந்து தேவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும். தன்னைச் சுற்றிலும் பாதுகாப்பான வேலி போடப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். 

இஸ்ரவேல் தேசத்து மேய்ப்பர்கள் தங்கள் மந்தையைப் பாதுகாக்கும் முறை சற்று வித்தியாசமானது. அவர்கள் மந்தைகளைக் காவல் காப்பற்கு நாய்களை வைத்துக் கொள்வது கிடையாது. ஆனால் இரவில் அனைத்து ஆடுகளையும் அவர்கள் பட்டிக்குள் அடைத்துவிடுவார்கள். அதற்குள்ளேயே சென்றுவர ஒரேயொரு வாசல்தான் உண்டு. மேய்ப்பன் அந்த வாசலில் படுத்துக் கொள்வான். அவன் அறியாமலோ அவனைத் தாண்டியோ எந்த ஒரு ஆடு் வெளியே செல்ல முடியாது. அவ்வாறே, வேறு எந்த மிருகமும் அவனைக் கடந்து சென்று அடுகளுக்குத் தீங்கும் செய்ய முடியாது. இவ்விதமான பாதுகாப்பையே யாபேஸ் தேவனிடம் வேண்டுகிறார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தமது சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்திலும் இப்பாதுகாப்பை “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதபடிக்கு தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்.“ என்று கேட்கக் கூறுகிறார். 

யாபேஸின் வரலாற்றிலிருந்து அவரது சகோதரர்களிடமில்லாத பல நற்பண்புகளை அவர் பெற்றிருப்பதாக நாம் அறிந்து கொள்கிறோம். யாபேஸ் தேவனை நன்கு அறிந்திருந்தார். நீங்களும் நானும் தேவனை இவ்வாறாகவே அறிந்து கொள்ள வேண்டும். தேவாதி தேவனை அறிந்து கொள்ள நாம் சத்திய வேதத்தை நன்கு வாசித்து தியானித்து ஆராய வேண்டும். அப்பொழுது நாமும்கூட தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற நம்மை அர்பணித்து ஜெபிக்கமுடியும். நாம் வேண்டிக் கொள்வதையும் தேவன் நமக்கு அருளுவார். 


(ஆதாரம் :  சத்தியவசனம் April-June 2009, கட்டுரையாசிரியர் - டாக்டர் உட்ரோ குரோல்) 



Wednesday, 20 July 2011

மனவேதனையை மாற்றிடும் மன்றாடல்


கிறிஸ்தவ வாழ்க்கையானது பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் ஊடாகச் செல்லும் ஒரு வாழ்வாக இருந்தாலும், தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு ஆறுதலையும் மனச் சமாதானத்தையும் தருகின்றவராக இருக்கின்றார். (2 கொரி. 1:4; யோவான் 14:27). நாம் நம்முடைய உள்ளத்தின் வேதனைகளை அனைத்தையும் ஜெபத்தில் தேவனிடம் தெரிவிக்கும்போது நமக்கு மன ஆறுதலும் சமாதானமும் கிடைக்கின்றது. (பிலிப்பியர் 4:6-7)

13வது சங்கீதமானது இதனை அனுபவரீதியாக காண்பிக்கின்றது. இச்சங்கீதத்திலே மனக் கவலையுடன் இருந்த தாவீது (சங். 13:1-2) தன்னைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடுகின்றான். (சங்கீதம் 13:3-4). இது அவனுடைய உள்ளத்தில பெரியதோர் மாறுதலை ஏற்படுத்தியது. மனக்கவலையுடன் இருந்த அவன் மன ஆறுதல் அடைந்தவனாக, தேவன் தன்னை விடுவிப்பார் என்னும் நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் தேவனை மகிமைப்படுத்திப் பாடுகின்றான். (சங். 13:5-6) ஜெபம் மனிதனின் உள்ளத்தின் நிலையை மாற்றுகின்ற என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. 

1. தாவீதின் மனக்கவலை (சங். 13:1-2)
தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்னும் எண்ணத்தோடு தாவீது இருந்தான். தேவன் அவனை இஸ்ரவேலின் அரசனாக்குவதாக வாக்களித்திருந்தாலும், அவன் இன்னும் அரசனாக முடிசூட்டப்படவில்லை. சவுல் தாவீதைக் கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பியிருந்தான். தாவீது உயிருக்குப் பயந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்திருந்தான். இதனால், தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்னும் எண்ணம் தாவீதுக்கு ஏற்பட்டது. 

13.:1 “முகத்தை மறைத்தல்“ என்பது தேவனால் கைவிடப்பட்டதையும் தேவனுடைய சாபத்திற்குட்படுவதையும் குறிப்பிடுகின்றது. (சங்கீதம் 30:7; 44:24 ; 88:14) முகத்தைப் பிரகாசிக்கச் செய்வது ஆசீர்வாதத்தை எடுத்துக் காட்டுகின்றது. (எண். 6:25-26; சங்கீதம் 4:6; 31:16; 67:1,2; 80:3,7,19) தேவன் வாக்களித்த பாதுகாப்பு, கிருபை, சமாதானம் என்னும் ஆசீர்வாதங்கள் (எண். 6:25-26) எங்கே என்று தாவீது அங்கலாய்ப்பவராக இருந்தான்.  

தேவன் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய எதிரியின் கைகள் ஓங்கும்படி செய்வதினால் அவர் தன்னைக் கைவிட்டு விட்டார் என்றே தாவீது எண்ணினான். தான் நன்மை செய்தும் தேவன் தன் பக்கம் இராமல், தீமை தன்னுடைய எதிரியின் பக்கம் இருப்பதாக அவன் நினைத்தான். இத்தகைய நிலைமை எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்பதே தாவீதின் கேள்வியாக இருந்தது. நெருக்கடியான சூழலில் இருந்து நாம் ஜெபித்தும் தேவன் நமது ஜெபத்திற்குப் பதிலளிக்காவிட்டால் அவர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று எண்ணுகிறோம். மனிதர்கள் நம்மைக் கைவிட்டு நாம் தனிமைப்படும்போதும், இத்தகைய உணர்வு நமக்கு ஏற்படுகின்றது. தேவன் தன்னை உதாசீனப்படுத்துவாகவும், அவர் தன்னை நிரந்தரமாக கைவிட்டுவிட்டார் என்றும் தாவீது நினைத்தார்.

13:2 தனிமைப்பட்ட நிலைமையில், எவ்வளவு காலத்திற்கு சவுலின் கைக்கு எப்படி தப்பலாம் என்று யோசனை பண்ணிக் கொண்டிருப்பது என்று கேட்கிறான். எதிரியை சமாளிப்பதற்குத் தாவீது பல்வேறு விதமான திட்டங்களைத் தீட்ட வேண்டியவனாக இருந்தான். எவ்வளவு காலத்திற்கு் தன் எதிரி தன்னை இவ்வாறு துரத்திக் கொண்ருப்பான் என்று தாவீது விரக்தியடைந்தான். 

தேவன் தன்னைக் கைவிட்டு விட்டார் என்று தாவீது உணர்ந்ததற்கோ அவன் உயிருக்குப் பயந்து ஓடிப்போக வேண்டியிருந்ததற்கோ பாவம் காரணமாக இருக்கவில்லை. இச்சங்கீதத்தில், பாவத்தைப் பற்றியோ மனந்திரும்புதலைப் பற்றியோ எவ்வித குறிப்பும் இல்லை. மேலும் தேவன் தாவீதைக் கைவிடவில்லை. (எபி. 13:5, மத். 28:20; ஏசா. 43:2) தாவீதே தன்னுடைய நெருக்கடியான சூழ்நிலையில் இத்தகைய உணர்வுடன் இருந்தான். 

2. தாவீதின் மன்றாடல் (சங். 13:3,4) 
சவுலினுடைய மனிதர் எப்படியும் தன்னைக் கொன்று விடுவார்கள் என்னும் எண்ணத்துடன் இருந்த தாவீது (1 சாமு 27:1) தன்னைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடினான். ஆபத்தான சூழ்நிலைகளில் ஆண்டவரை நேக்கிப் பார்ப்பதைத் தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை என்பதை தாவீது அறிந்திருந்தமையால் அவன் மனித உதவியை நாடாமல், தன் உயிரைக் காப்பாற்றும்படி தேவனிடம் மன்றாடினான். 

13:3 தேவன் தன்னைப் பார்க்காமல் தம்முடைய முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டிருப்பதாக எண்ணிய தாவீது (13:1) தன்னை நோக்கிப் பார்க்கும்படி தேவனிடம் மன்றாடுகின்றான். 

“எனக்குச் செவிகொடுத்தருளும்“ என்னும் கோரிக்கை, முதலிரு வசனங்களிலும் அதாவது “எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்திருப்பீர்?“ என்னும் கேள்விக்கு பதிலளிக்கும்படியான விண்ணப்பமாக உள்ளது. 

“கண்களைத் தெளிவாக்கும்“ துயரம் காரணமாக எதைப் பற்றியும் தெளிவாகப் பார்க்கவும் சிந்திக்கவும் முடியாதவனாக தாவீது இருந்தான். சரீரம் பலவீனப்படும்போது கண்கள் மங்குவதாகவும், சரீரம் பலமும் புத்துணர்ச்சியும் அடையும்போது கண்கள் தெளிவடைவதாகவும் கூறுவது எபிரேய மரபு. (1 சாமுவேல் 14:27,29); எஸ்றா 9:8) தாவீது சரீரப்பிரகாரமாக பலவீனமாகவும், வியாதிப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 

13:4 - தன்னுடைய மரணம் தன் எதிரிக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்பதனால், அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது என்னும் எண்ணத்தில் தாவீது தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடினான். (சங்கீதம் 35:19-21; 38:16-17). இது சுயநலமான கோரிக்கை அல்ல. தேவனுடைய கனத்தைக் கருத்திற் கொண்டு ஏறெடுக்கப்பட்ட ஜெபமாகும். தேவனை நம்பி வாழும் மனிதனுக்கு ஏற்படும் தோல்வியை தேவநாமத்திற்கு ஏற்படும் கனவீனமாகத் தாவீது எண்ணினான். மோசேயும் இதே விதமாக ஜெபித்துள்ளார். (எண். 14:15-16)

3. தாவீதின் மனமகிழ்ச்சி (சங். 13:5-6) 
தன்னுடைய நிலைமையைத் தேவனிடம் தெரிவித்து தனனைக் காப்பாற்றும்படி ஜெபித்த தாவீது, அதுவரை காலமும் இருந்த மனக்குழப்பம் நீங்கியவனாக நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அடைந்தான். நம்முடைய மனப்பாரத்தை, பிரச்சினையைத் தேவனிடம் தெரிவிக்கும்போது, தேவன் நமக்கு மனஆறுதலையும், சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருகிறவராக இருக்கின்றார். தேவன் தாவீதின் சூழ்நிலையை அல்ல, தாவீதின் உள்ளத்தின் நிலையை மாற்றினார். 

13:5 - கிருபை என்பது மூலமொழியில் அன்பு என்றே உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையிலும் தேவன் தன்னை நேசிக்கிறார் என்பதைத் தாவீது அறிந்திருந்தான். தேவன் தன்னை நேசிப்பதனால் அவர் தன்னை நிச்சயம் சவுலின் மனிதர்களிடமிருந்து விடுவிப்பார் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆரம்பத்தில் தேவன் தன்னை கைவிட்டுவிட்டார் என்று புலம்பிய அவன், தன்னுடைய மனக்குமறலைத் தேவனிடம் தெரிவித்த பின்னர் அவர் தன்னை நேசிக்கிறார்; தன்னை விடுவிப்பார் என்பதை அறிந்துகொண்டான். 
தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான். 4:8) தேவன் பவுலை நேசித்ததுபோல (ரோமர் 8:36-39) நெருக்கடியான சூழ்நிலையிலும் தேவன் தன்னைக் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாடுகிறான். தேவன் செய்தவைகளை நினைவுகூருவது தேவன் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். 

ஆகவே தமது நிலைமையை் தேவனிடம் தெரிவிப்போம்!. அவரால் மட்டுமே நம்முடைய நெருக்கடியான சூழ்நிலைகளை மாற்ற முடியும் அந்த விசுவாசத்தோடு நாம் ஜெபங்களை ஏறெடுப்போமாக. 

(நன்றி சத்தியவசனம் - ஜூலை-ஆகஸ்ட் 2010 கட்டுரை ஆசிரியர் - எம்.எஸ். வசந்தகுமார்)

Saturday, 25 June 2011

ஜெபத்தின் மூலம் வழிநடத்தல்



கண்பார்வையற்றிருந்த பிரபல பாடலாசிரியை ஃபென்னி க்ரொஸ்பி, முழங்காற்படியிட்டு ஜெபிக்காமல் எந்த ஒரு பாடலையும் எழுதத் துணிவதில்லை

ஒரு தடவை இசையமைப்பாளரால் அனுப்பப்பட்டிருந்த ராகத்திற்கு ஏற்றபடி உடனடியாக ஒரு பாடலை எழுத வேண்டியிருந்தது. ஃபென்னி க்ரொஸ்பி எவ்வளவு முயன்றும் அவளால் குறிப்பிட்ட ராகத்திற்கு ஏற்ற பாடலை எழுத முடியாமல் போய்விட்டது. அப்போதுதான் தான் ஜெபிக்காமல் பாடலை எழுதத் தொடங்கியதை உணர்ந்த ஃபென்னி க்ரொஸ்பி ஜெபித்துவிட்டு மறுபடியும் பாடலை எழுதத் தொடங்கினாள். 

அன்று அவள் எழுதிய பாடல் இயேசுவே என்னை சிலுவையினருகில் வைத்துக் கொள்ளும்“. (Jesus keep me near the cross) என ஆரம்பிக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாகும். 

1874 இல் ஃபென்னி க்ரொஸ்பி ஒரு குறிப்பிட்ட காரியத்திற்குத் தேவையான பணத்தில் 5 டொலர்கள் குறைவாய் இருந்தது, எவரிடமும் போய்க் கேட்பதற்கும் நேரம் இருக்கவில்லை. உடனே அவள் பணத்திற்காக ஜெபித்துவிட்டு, தனது அடுத்த பாடலை எழுத் தொடங்கினாள். அச்சமயம் அவள் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. 

வாசற்கவைத் திறந்தபோது “தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக“ எனும் வாழ்த்துக்களுடன் ஒரு மனிதன் அவளது கைகை குழுக்கிவிட்டுச் சென்றான். அம்மனிதன் அவளது கையை குலுக்கும்போது அவளது கையில் 5 டொலர்கள் வைத்திருந்தான். உடனே முழங்கால்படியிட்டுத் தனக்குத் தேவையான 5 டொலர்கள் கிடைத்ததற்காக நன்றி செலுத்தி ஜெபித்த ஃபென்னி க்ரொஸ்பி, தனது அடுத்த பாடலை எழுதத் தொடங்கினாள். அதுவும் உலகப் பிரசித்தப் பெற்ற ஒரு பாடலாயிற்று. “சகல வழிகளிலும் என் இரட்சகர் என்னை நடத்துகிறார்“ என ஆரம்பமாகும் பாடலே அதுவாகும். (All the way my saviour leads me)

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். (எரேமியா 33:3) எனும் தேவனது வாக்குத்தத்தம் என்றும் மாறாதது. என்பதற்கு  ஃபென்னி க்ரொஸ்பியின் வாழ்வு சிறந்த விபரணமாய் உள்ளதோடு, நமக்கும் தேவ வழிநடத்துதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையைக் காண்பிக்கிறது. 


Wednesday, 20 April 2011

நாம் எப்பொழுது ஜெபிக்க வேண்டும்?

prayer ஜெபத்தைப்பற்றி நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கியமானதொரு காரியம் நம்முடைய ஜெப நேரத்தைப் பற்றியது. அதாவது எப்பொழுது ஜெபிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். எனினும், நாம் எந்த நேரத்தில் ஜெபிக்க வேண்டும் என வேதாகமம் குறிப்பிட்ட ஒரு காலத்தை வரையறை செய்யவில்லை வேதாகம காலத்தில் மனிதர்கள் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றவிதத்தில் ஜெபிக்கும் நேரத்தை வைத்திருந்தனர். இதனால் சிலர் காலையில் ஜெபித்தனர். (சங். 5:3, 108:, 119:147, 143: மாலையில் சிலர் ஜெபித்தனர்.(சங். 141:2) சிலர் நள்ளிரவிலும் ஜெபித்தனர். (சங். 119:62). சிலர் நாளொன்றுக்கு ஏழுதடவைகள் ஜெபிப்பவர்களாவும் இருந்தனர் (சங். 119:164( நெருக்கடியான காலங்களில் மனிதர்கள் நாள் முழுவதும் ஜெபித்து வந்தனர்.
சங்கீதம் 55:17 “அந்தி சந்தி மத்தியான வேளையிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன்“ என்று தாவீது குறிப்பிட்டுள்ளான். தாவீதின் கூற்றில்“அந்தி“ மாலைநேரத்தையும் “சந்தி“ காலை வேளையையும், “மத்தியானம்“பகற்பொழுதையும் குறிக்கின்றது. (யூதர்களுடைய நாட்கணிப்பீட்டு முறையின்படி மாலை 6.00 மணிக்கே புதிய நாள் ஆரம்பமாவதனாலேயே இவ்வசனத்தில் இவ்வசனத்தில் முதலில் மாலைவேளைளையும் அதன் பின்னர் காலையும் பகலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியாக புத்தகத்தில் ஒருநாளின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.) ஆதியாகம புத்தகத்தில் ஒருநாளின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிப்பிட “சாயங்காலமும் விடியற்காலமுமாகி“ என்னும் சொற்பிரயோகம் உபயோகிக்கப்பட்டிருப்பதும் யூதர்களின் நாட்குறிப்பீட்டு முறையை அறியத் தருகிறது. (ஆதி 1:5,8, 13, 19, 23, 31). இதனால் தாவீது நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிப்பவனாக இருந்தான் என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், இவ்வசனத்தை அடிப்படையாகக் கொண்டே தானயேலும் நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் பழக்கத்தை உடையவனாக இருந்தானென்று கருதப்படுகின்றது. (தானி. 6:10) எருசலேமின் பக்கமாக இருந்து ஜெபிக்கும் பழக்கம் சாலமோனுடைய காலத்திலிருந்து இயேசுவின் காலம்வரை இருந்தது. (2 நாளா. 6:34-39, யோவா. 4:20-24) எனினும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில், காலையும் மாலையுமாக நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிக்கும் பழக்கமே மக்கள் மத்தியில் இருந்துள்ளதை 1 நாளாகமம் 23:30 அறியத் தருகிறது. உண்மையில் கிறிஸ்துவுக்குப் பின் 2ம் நூற்றாண்டிலேயே நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் பழக்கம் யூதமார்க்கத்தில் உத்தியோகபூர்வமாக கட்டளையாக்கப்பட்டது. “மிஷ்னா’ (Mishnah) என்னும் யூத மத நூலில் “பெரேக்கா“ Berakah 4:1 என்னும் பகுதியில் இத்தகைய கட்டளையுள்ளது. அக்காலத்தில் கிறிஸ்தவர்களும், யூதர்களின் முறையைப் பின்பற்றிய நாளொன்றுக்கு மூன்று தடவைகள் ஜெபிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “டிடாக்கி“ Didache 8:3 இல் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கீதம் 55:17, “அந்தி சாயும் மத்தியானம்“ என்னும் சொற்பிரயோகங்கள், நாளொன்றில் மூன்று தடவைகள் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தையல்ல “நாள் முழுவதும் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தைப் பற்றிய குறிப்பாகவே உள்ளது. எனவே தாவீது நெருக்கடியான சூந்நிலையில் நாள்முழுவதும் ஜெபிப்பவனாகவே இருந்துள்ளதை இவ்வசனம் அறியத்தருகிறது. ஏனைய நாட்களில் அவன் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஜெபிப்பவனாக இருந்திருக்க வேண்டும். வயோதிப காலத்தில் தாவீது அந்த நியாயப்பிரமாண கட்டளையை அடிப்படையாகக் கொண்டு ஆலயத்தில் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளமையால் ( 1 நாளா. 23:1,20 யாத். 29:38-39, எண் 28:3-8 இக்கட்டளைக் கொடுக்கப்பட்டுள்ளன) இதுவே இதுவே அவனுடைய தனிப்பட்ட பழக்கமாகவும் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் மனிதர்கள் தாம் விரும்பி நேரங்களில் ஆலயத்தில் சென்று ஜெபிக்க கூடியதாக இருந்தாலும், காலையில் ஒன்பது மணியும் மாலையில மூன்று மணியுமே அவர்களுடைய ஜெப நேரங்களாக இருந்தன. (அப். 2:15, 3:1). யூதர்கள் சூரிய உதயத்திலிருந்தே நேரத்தை கணிப்பிட்டதினால் அப். 2:15ல் “பொழுது விடிந்து மூன்றாம் மணிவேளை“ காலை ஒன்பது மணியையும், அப் 3:1ல் ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணிநேரம“ மாலை மூன்று மணியையுமே குறிக்கின்றது.
சில கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகாலை நேர ஜெபமே தேவனால் கேட்கப்படும் என்றும், அதிகாலை ஜெபத்துக்கே வல்லமை அதிகம் என்றும் எண்ணுகின்றனர். நாம் ஒவ்வொரு நாளையும் ஜெபத்துடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் ஏனைய நேரங்களில் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் கேட்கப்படமாட்டாது என்றோ, அல்லது அவைகளுக்கு வல்லமை குறைவு என்றோ எண்ணுவது தவறாகும். நாம் எந்த நேரத்தில் ஜெபித்தாலும் தேவன் நம்முடைய ஜெபங்களை கேட்கிறவராகவே இருக்கிறார். காலையிலேயே வேலைக்கு செல்பவர்களும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புகின்றவர்களும் அந்நாளுக்கான உணவினை காலையிலேயே தயாரிக்கவேண்டிய நிலையில் இருப்பவர்களும் காலை நேரத்தில் அதிக நேரம் ஜெபிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள். இதனால் இவர்கள் காலையில் சிறியதொரு ஜெபத்துடன் அந்த நாளை ஆரம்பித்து பின்னர் மாலையில் வேதாகமத்தை வாசித்து, ஜெபிப்பதற்கு அதிக நேரத்தை ஒதுக்கி வைத்திருப்பதில் எவ்வித தவறுமில்லை.ஜெபிப்பற்கு நேரம் முக்கியமானதல்ல. நாம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கின்றவர்களாய் இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.
வேதாகம கால மக்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஜெபிப்பதை தம் பழக்கமாகக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய வாழ்வின் சூழ்நிலைக்கேற்றவிதத்தில் ஏனைய நேரங்களிலும் ஜெபிப்பவர்களாக இருந்தனர். எனவே, ஜெபிப்பதற்கு என்று நாம் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்திருந்தாலும், ஏனைய நேரங்களிலும் நாம் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும்.
“நாம் மிகவும் அதிகமாக நேசிக்கும் ஒருவரோடு பிரயாணம் செய்யும்போது எப்படி நாம் அவரோடு எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்போமோ அவ்விதமாகநாம் எப்பொழுதும் தேவனோடு பேசுகின்றவர்களாக இருக்க வேண்டும்“ஜெபம் தேவைகளுக்கான மன்றாடுதலாக இராமல், தேவனோடு தினம் உறவாடுவதாக இருப்பதனால். நாம் வீட்டில் மற்றவர்களுடன் எப்படிப் பேசுகின்றோமோ,. அவ்விதமாகவே தேவனோடும் பேவேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடுமப அங்கத்தினர்களுடன் பேசுவதற்காக ஒதுக்கி வைத்திருப்போம். எனினும் சிலநேரங்களில் இதையும் மீறி சில விஷயங்களைக் குறித்து மணிக்கணக்கில் பேசுவோம். சில நேரங்களில் சுருக்கமாக ஒரு சில நிமிடங்களில் மாத்திரமே பேசுவோம். நாம் ஜெபிக்கும் நேரமும் இவ்விதமாக நாளுக்கு நாள் வித்தியாசப்பட்டாலும் ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும். அதிகளவு நேரம் கிடைக்கும் நாட்களில் நாம் அதிக நேரம் ஜெபிக்கலாம். எனினும், நாம் அன்றாடம் வேதம் வாசிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பலநாட்கள் அல்லது பல மாதங்கள் ஜெபிக்காமலே இருந்து விடுவோம். “நம்மால் எப்பொழுதும் ஜெபிக்கக்கூடியதாயிருந்தாலும் ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிப்பதற்கென்று குறிப்பிட்ட நேரம் நமக்கு இருக்க வேண்டும்.
சோர்ந்து போகாகமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள் (லூக். 8:1) என்றும், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் ( 1தெச. 5:17, கொலோ. 4:2) என்றும் வேதாகமம் கூறுகின்றது. நாம் ஜெபிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் ஜெபித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது இக்கட்டளைகளின் அர்த்தம் அல்ல. நாம் ஒருநாள் ஜெபித்துவிட்டு மறுநாள் ஜெபிப்பதை கைவிடுபவர்களாக இருக்கக் கூடாது என்பதையே இக்கட்டளைகள் அறியத் தருகின்றது. மேலும், நாம் ஜெபிப்பதற்கு ஒதுக்கி வைத்துள்ள நேரத்தில் மாத்திரம் ஜெபிப்பவர்களாக இராமல், ஜெபம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் விதத்தில் நம்முடைய அன்றாட வாழ்வின் சகல காரியங்களிலும் ஜெபத்தை உள்ளடக்கியவர்களாக நாம் வாழ வேண்டும். ஜெபிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் வார்த்தைகள் வெளிப்படும் விதததில் ஜெபிக்கும் நாம் ஏனைய நேரங்களில் மனதிற்குள் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும். உண்மையில் “நம்முடைய வாழ்வு ஒவ்வொரு நிமிடமும் தேவனிலேயே சார்ந்திருக்கின்றது என்பதையும், நம்முடைய ஒவ்வொரு மூச்சும் தேவனுடைய ஈவாகவே இருக்கின்றது என்பதையும் உணர்கின்ற விதத்தில் எப்பொழுதும் ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும்.“. இதனால் நாம் நாள் முழுவதும் நம்முடைய வாழ்வின் சகல காரியங்களையும் குறித்து தேவனோடு பேசுகின்றவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், “எந்த நேரமும் ஜெபத்திற்கு ஏற்ற நேரமாகவே இருக்கிறது“
 
 
நாம் எங்கிருந்து ஜெபிக்க வேண்டும்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் ஜெபிக்க வேண்டுமென்ற வரையறை வேதாகமத்தில் இல்லாத்துபோலவே குறிப்பிட்ட இடத்திலிருந்து ஜெபிக்க வேண்டும் என்னும் கட்டளையும் கிறிஸ்தவர்களாகிய நமக்கு கொடுக்கப்படவில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ரேல் மக்களுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின்னர், அவர்களுடைய் ஜெபம் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மையமாகக் கொண்டிருந்தது. அக்காலத்தில் உடன்படிக்கைபெட்டி தேவனுடைய பிரசன்னத்திற்கான அடையாளமாக இருந்தமையால் இப்பெட்டி இருந்த ஆசரிப்புக் கூடாரத்திலும், அதன் பின்னர் ஆலயத்திலும் மக்கள் ஜெபிப்பதற்காக கூடிவந்தார்கள். தேவனுடைய ஆலயம் இருந்த எருசலேம் நகரத்தை விட்டு தூரமான இடங்களில் இருந்தவர்கள் ஆலயம் இருக்கும் அத்திசையை நோக்கியவாறு ஜெபித்தனர். ஆனால் ஜெருசலேம் ஆலயத்தை மையமாகக் கொண்ட ஜெபமுறை இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு முற்றுப்பெற்றது.அதன்பின்னர் மனிதர் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கக்கூடிய நிலைஏற்பட்டது. இயேசு இதைப்பற்றிக் கூறும்போது நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.“(யோவா. 4:21) என்று தெரிவித்தார். இத்தகைய காலம் இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு வந்தது. இதைப் பற்றி பழைய ஏற்பாட்டு கால தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்திருந்தனர். (செப். 2:11, மல். 1:11) எனவே, புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் நாம் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கக் கூடியதாகவுள்ளது.
தம்முடைய நாமத்தில் பக்தர்கள் எவ்விடத்தில் கூடி வந்தாலும், அவ்விடத்தில் தாம் இருப்பதாக இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார். (மத். 18:20) எனவே, நாம் ஜெபிப்பதற்காகச் சிறப்பான இடங்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. தற்காலத்தில் சிலர் ஜெபிப்பதற்காக சிறப்பான மண்டபங்களைக் கட்டிவைத்து , மக்களை அவ்விடத்தில் வந்து ஜெபிக்கும்படியும், அவ்விடத்திலிருந்து ஏறெடுக்கப்படும் ஜெபத்திற்கு தேவன் பதிலளிப்பாரென்றும் கூறி மக்களை வஞ்சித்து வருகின்றனர். நாம் இத்தகைய தவறான வழிநடத்துதல்களைக் குறித்து மிகவும் கவனமாயிருந்து, நாம் இருக்கும் இடங்களிலிருந்து அன்றாடம் ஜெபிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நாம் இவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார். இதனால்தான் நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பதிலளிப்பார். (மத் 6:6) என்று இயேசுக்கிறிஸ்து தெரிவித்துள்ளார். இவ்வசனத்தில் “அறைவீடு“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் “தாமியொன்“ (tameion) என்னும் கிரேக்கச் சொல்லானது அக்காலத்தில் வீட்டின் உள் அறை“ பொருட்களை சேகரித்து வைக்கும் அறை“, “படுக்கையறை“ என்பவற்றைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்டது மத்தேயு 12:26 24:26, லூக்கா 12:3, 12:24 போன்ற வசனங்களில் “வீட்டின் உள்அறை“ என்றும் லூக்கா 12:24 ல் “பொருட்களை சேகரித்து வைக்கும்அறை“ என்றும் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் ஏசாயா 26:20, 2 ராஜா 4:33 போன்ற வசனங்களில் “படுக்கை அறை“ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெரும்பாலான மக்களுடைய வீடுகளில் ஒரேயொரு அறை மாத்திரம் இருந்தமையால் இயேசுக்கிறிஸ்து பொருட்களை சேகரித்து வைக்கும் அறை பற்றியே இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளதாக வேதாகம ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவ்வசனத்தில் அறையானது தனிமையிலும் இதயத்திலும் ஜெபிப்பதை குறிப்பிடும் உருவக விவரணமாக இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
அறைவீட்டுக்குள் பிரவேசித்து“ “கதவைப் பூட்டி“ எனும் சொற்பிரயோகங்கள்,வீட்டுக்குள் இருக்கும் ஒரு அறையைப் பற்றியே இயேசுக்கிறிஸ்து குறிப்பிட்டுள்ளாரென்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அக்காலத்தில் வீட்டுக்குள் கதவுடன் இருக்கும் ஒரேயொரு அறை பொருட்களைச் சேகரித்து வைக்கும் அறை மட்டுமே. இதுவே எவருக்கும் தெரியாமல் இரகசியமாக தனிமையில் ஜெபிக்க்க்கூடிய இடமாக இருந்தது. எனவே நம்முடைய வீட்டில் எந்த அறை அல்லது எந்த இடம் ஜெபத்திற்குப் பொருத்தமான என்பதை கண்டறிந்து, அந்த இடத்திலிருந்து அனுதினமும் ஜெபிக்க வேண்டும்.
நாம் எவ்விடத்திலிருந்தும் ஜெபிக்கலாம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே தேவனை ஆராதிக்கலாம் என்று கருதலாகாது. தற்காலத்தில் சிலர் தொலைக்காட்சிகளில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் ஆலயத்திற்கு செல்ல வேண்டியதில்லை என எண்ணுகின்றனர். ஆனால் கிறிஸ்தவராகிய நாம் சபையாகக் கூடி தேவனை ஆராதிப்பது அவசியம். இதனால்தான் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.(எபி. 10:25) என வேதாகமம் கூறுகிறது. கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நேசித்து, ஆவிக்குரிய பிரகாரம் வளர்வதற்கு ஒருவருவருக்கொருவர் உற்சாகமும் தைரியமும் அளித்து, ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும் என்பதால் (எபி 10:24) சபை கூடிவருதலைக் கைவிட்டு வீடுகளிலேயே இருப்பவர்கள் தேவனுடைய கட்டளைகளை அவமதிப்பவர்களாகவே செயற்படுகின்றனர். நாம் சபை ஐக்கியத்தை தவிர்த்து கிறிஸ்தவ அன்பை நம்மால் அனுபவிக்க முடியாது. எனவே, நாம் இருக்கும் இடங்களிலிருந்த வண்ணம் அன்றாடம் ஜெபித்து வந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சபையாகக் கூடிவந்து தேவனை ஆராதிக்க வேண்டும்.
(நன்றி : சத்தியவசனம்)

Monday, 18 April 2011

நாமறியாத வழிகளில் வரும் பதில்


பர்மிய நாட்டில் மிஷனரியாக பணியாற்றிய அடோனிராம் ஜட்சன் மரிக்கும் தருவாயில் இருக்கும்போது, பர்மிய நாட்டில் தனக்கேற்பட்ட பாடுகளையும் உபத்திரங்களையும் பற்றிய சரிதையை வாசித்த துருக்கி நாட்டில் இருந்த சில யூதர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டார்.

“இது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது“ என தன் தன் மனைவியிடம் கூறிய அடோனிராம் “இது ஒரு நல்ல செய்தி. நான் இளைஞனாயிருந்தபோது எருசலேமிலிருக்கும் யூதர்களுக்கு சுவிஷேசத்தை அறிவிக்கும் மிஷனரியாக என்னை அனுப்பும்படி ஜெபித்தேன். ஆனால் தேவன் என்னை பர்மாவுக்கே அனுப்பினார். அங்கு நான் கடுமையான உபத்திரங்களுக்கும் கொடுமையான சித்திரவதைகளுக்கும் உட்பட்ட போதிலும், இப்போது எனது சித்திரவதைகளினதும் சிறையிருப்புகளினதும் மூலம் தேவன் துருக்கியிலுள்ள சில யூதர்களை இரட்சித்துள்ளார்“ என்றார்.


நம் ஜெபங்கள் நாம் அறியாத அற்புதமான முறைகளில் பதிலளிக்கப்படுவதற்கு இச்சம்பவம் சிறந்த விபரணமாக உள்ளது. யூதர்களின் இரட்சிப்புக்காக ஜெபித்த அடோனிராம் ஜட்சனின் ஜெபம், அவரது வேண்டுதலின்படி அவரை யூதர்களிடம் அனுப்பியதன் மூலமாக அல்ல. மாறாக, பர்மிய நாட்டில் அவருக்கேற்பட்ட உபத்திரங்களைப் பற்றிய சரிதையின் மூலம் யூதர்களைத் தேவன் இரட்சித்துள்ளதன் மூலம் பதிலளிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பலான சந்தர்ப்பங்களில் தேவன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் முறை நமது எண்ணத்திற்கும் அப்பாற்பட்டதாகவே உள்ளது. அதாவது நாம் நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் மேலாக அற்புதமான முறையில் அவர் பதிலளிக்கிறவராக இருக்கிறார்.

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். (எரே. 33:3) என்பது தேவனுடைய வாக்குத்தத்தமாய் உள்ளது.

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)