- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 30 September 2013

பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி ......அவனே எனக்குச் சகோதரனும்..தாயுமாய்..(மத்தேயு 12:50)

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்(மத்தேயு 12:50)

இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அதிக சர்ச்சைக்குரியதாகவும், வித்தியாசமான முறைகளில் விளக்கப்பட்டு வருவதுமான வாக்கியம், அவர் தம் தாயையும் சகோதர்களையும் பற்றி கூறிய விடயமாகும். இயேசுவின் தாயாரும் அவரது சகோதரரும் அவரோடு பேசுவதற்காக, அவர் மக்களுக்கு போதகம் பண்ணிக் கொண்டிருந்த வீட்டுக்கு வெளியில் காத்திருக்கையில்(1) அவர் அவர்களோடு எதுவும் பேசாமல், அவர்கள் வந்திருப்பதைப் பற்றி தன்னிடம் கூறியவனிடம் “என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று கேட்டதோடு, தன்னுடைய சீடர்களே தனக்கு தாயும் சகோதரர்களாயும் இருப்பதாகத் தெரிவித்து, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறார்கள் என்றார்(மத். 12:46-50) இயேசுவின் வார்த்தைகள் தன் தாய்க்கும் சகோதர சகோதரிகளுக்கும் அவர் மதிப்பும் மரியாதையும் கொடுக்கவில்லை எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, அவரது கூற்றும் அநேகரால் புரிந்து கொள்ள முடியாதொன்றாகவே உள்ளது. 

உண்மையில், இயேசு தன் குடும்ப அங்கத்தினரை மரியாதைக் குறைவாக நடத்தினார் எனக் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவரது குடும்ப அங்கத்தினர்கள் அவர் மேசியா என்பதை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. (யோவான். 7:5)(2) மாற்குவின் சுவிஷேசம் தன்னோடு பேச வந்த தன் குடும்ப அங்கத்தினர்களை இயேசு சந்திக்க விரும்பாதற்கான காரணத்தை அறியத் தருகின்றது. இயேசு வியாதியஸ்தரைக் குணப்படுத்தி தேவராட்சியத்தைப் பற்றி பிரசங்கித்து வந்தமையால் திரளான மக்கள் அவரைப் பின்பற்றிச் சென்றனர். ஆனால், அவர் பிசாசுகளைத் துரத்தியபோது, அவர் பிசாசுக்களின் தலைவனைக் கொண்டு பிசாசுக்களைத் துரத்துகின்றார் என்று அவரது செயல் விமர்சிக்கப்பட்டது. (மத். 22-24) இயேசுவின் நடவடிக்கைகளைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதாவது அவரது தாயும் அவருடைய சகோதர சகோதரிகளும்(3) அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைத்து அவரைத் தம்மோடு வீட்டுக்குக் கொண்டு போவதற்காகவே அவர் இருந்த வீட்டுக்கு வந்தனர்(மாற்கு 3:21)(4).இதனாலேயே தன்னைத் தேடி வந்த தாயையும் சகோதரர்களையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. 

இயேசு தன் குடும்ப உறவுகளைத் துறந்தவராக தேவனுடைய சித்தத்தின்படி செய்கின்றவனே தனக்கு தாயும் சகோதரனுமாயிருக்கிறான் எனக் கூறியது அவர் தன் தாயையும் சகோதர்ர்களையும் மதிக்கவில்லை என்பதற்கான ஆதாரம் அல்ல. உண்மையில் அவர் தேவனுடைய குமானாய் இருந்தமையால், தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுவதே அவரது கடமையாய் இருந்தது. (லூக். 2:49). அவர் இவ்வுலகிற்கு ஒரு மனிதராக வந்தமையினால் அவருக்கு குடும்ப உறவுகள் இருந்தன. அவர் தன்னுடைய இறை பணியை ஆரம்பிக்கும் வரை தன் குடும்ப உறவுகளுக்கு உட்பட்டவராக வாழ்ந்த போதிலும்(லூக். 2:51) தன்னுடைய ஊழிய காலத்தில் அவர் குடும்ப உறவுக்கு வெளியில் வந்து தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுவதே அவரது கடமையாய் இருந்தது, (லூக். 2:49) அவர் இவ்வுலகிற்கு ஒரு மனிதராக வந்தமையினாலேயே அவருக்கு குடும்ப உறவுகள் இருந்தன. அவர் தன்னுடைய இறைபணியை ஆரம்பிக்கும்வரை தன் குடும்ப உறவுகளுக்கு உட்பட்டவராக வாழ்ந்த போதிலும் (லூக். 2:51) தன்னுடைய ஊழிய காலத்தில் அவர் குடும்ப உறவுக்கு வெளியில் வந்து தேவனுடைய சித்தத்தின்படி செயல்பட்டார் இதனால்தான் தன்னுடைய ஊழியக் காலத்தில் மற்ற பெண்களைப் போலவே தன் தாயையும் “பெண்ணே“ என்று அழைத்தார். (யோவான் 2:4)(3) இயேசுவைப் பொறுத்தவரை “தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுபவர்களே அவரது உறவினர்களாய் இருந்தனர். (6) 

இயேசுவின் கூற்றானது அதாவது தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுபவர்களே தனது தாயும் சகோதரரும் என அவர் கூறியமை, அவருக்கும் அவரது குடும்ப அங்கத்தினருக்கும் இடையிலான உறவு எத்தகையது எனும் சர்ச்சையையும் கிறிஸ்தவ உலகில் தோற்றுவித்துள்ளது. அதாவது புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சகோதர்கள் சகோதரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் உண்மையிலேயே அவரது சொந்த சகோதர்களா? இல்லையென்றால் இயேசு குறிப்பிடுவது போல ஆவிக்குரிய ரீதியிலான உறவில் இருப்பவர்களா? எனும் கேள்வி நீண்டகாலமாகவே கிறிஸ்தவ உலகில் இருந்து வந்துள்ளது. இயேசு தன் சொந்த சகோதரரை சகோதராக ஏற்றுக் கொள்ளாதமையால், அவர்கள் அவரது உண்மையான சகோதர்ரகள் அல்ல என அநேகர் எண்ணுகின்றனர். அதாவது அவர்கள் இயேசுவின் தாயான மரியாளுக்குப் பிறந்த அவரது சகோதர்கள் அல்ல என்பதே இவர்களது தர்க்கமாகும். புதிய ஏற்பாட்டில் இயேவின் சகோதர்கள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் “அவரது உடன் பிறவாத சகோதர்கள்“(7) எனக் கூறும் இவர்கள் “யோசேப்புக்கும் அவனது முதல் மனைவிக்கும் பிறந்தவர்களே“(8) அவருடைய சகோதர்கள் எனக் கருதுகின்றனர். ஆனால், மரியாள் யோசேப்பின் இரண்டாவது மனைவி என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை. மேலும், இயேசுவின் சகோதர்கள். யோசேப்பின் முதல் மனைவியின் பிள்ளைகள் என்றால் இயேசு அல்ல, மாறாக “அவருடைய மூத்த சகோதரனே தாவீதின் சிங்கானத்திற்கு உரியவனாக இருந்திருப்பான்“(9) ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுவே தாவீதின் சிங்காசனத்திற்கு உரியவராக இருப்பதனால், அவரே யோசேப்பின் மூத்த மகன் என்பது தெளிவாகின்றது. 

இயேசுவின் சகோதர்கள் அவருக்கும் மூத்தவர்கள் என்றால், இயேசு பன்னிரு வயதில் எருசலேம் தேவலாயத்திற்குச் சென்றபோது அவரது சகோதர்களும் அவருடன் சென்றிருந்ததாக வேண்டும். ஏனென்றால் “யூத ஆண் பிள்ளைகள் பன்னிரண்டாவது வயதிலிருந்து நியாயப்பிரமாணத்தின் மக்களாகக் கருதப்பட்டனர். அதன் பின்னர், அவர்கள் ஆக்க குறைந்தது வருடத்தில் ஒரு தடவையாவது எருசலேம் தேவலாயத்திற்கு செல்ல வேண்டும் என்பது யூதமார்க்கத்துச் சட்டாயிருந்தது“(10) நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பும் மரியாளும் வருடந்தோறும் பாஸ்கா பண்டிகைக்கு(11) எருசலேமுக்குப் போய் வருவதைத் தம் வழக்கமாய்க் கொண்டிருந்தனர். (லூக். 2:41) இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அக்காலத்தைய யூதமார்க்க சட்டத்தின்படி அவரையும் தம்மோடு எருசலேமுக்குக் கூட்டிச் சென்றனர். (லூக். 2:42) பன்னிரண்டு வயதுக்குப் பிறகு யூதப் பெற்றோர்கள் ஆண்டுதோறும் பண்டிகைக்குத் தம் பிள்ளைகளை எருசரேமுக்குக் கூட்டிக் கொண்டு போவதனால், இயேசுவின் சகோதரர்கள் அவருக்கு மூத்தவர்களாக இருந்திருந்தால், பக்திமிக்க தம்பதியினரான யோசேப்பும் மரியாளும் அவர்களையும் அச்சமயம் எருசலேமுக்குக் கூட்டிக் கொண்டு போயிருப்பார்கள். ஆனால், அவர்கள் எருசலேமுக்குச் சென்றது பற்றி லூக்காவில் எவ்வித குறிப்புகளும் இல்லை. இதிலிருந்து இயேசுவின் சகோதர்கள் அவரை விட வயது குறைந்தவர்களாகவே இருந்துள்ளது தெளிவாகின்றது. 

உண்மையில், இயேசுவிற்குப் பிறகு மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருக்கவில்லை. அவள் கடைசி வரைக்கும் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் எனும் இறையியல் உபதேசமே(12) இயேசுவின் சகோதரர்களை மரியாளின் பிள்ளைகள் அல்ல எனக் கூறுவதற்கான காரணமாயுள்ளது. எனினும் இது புதிய ஏற்பாட்டு உபதேசத்தை முரண்படுத்துவதாயுள்ளது. இயேசுவின் சகோதரர்களை அவரது உடன்பிறவா சகோதர்கள் என விளக்க முடியாது. சகோதரன் எனும் பதம் உடன் பிறவாதவர்களையும் குறிக்க புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டுள்ளது உண்மையென்றாலும் இயேசுவின் சகோதரரும் சகோதரிகளும் மற்றவர்களில் இருந்த வேறுபடுத்தப்பட்டவர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர். (அப். 1:13-14, கலா. 1:19) ‘சுவிசேஷப் புத்தகங்களில் அவர்கள் மரியாளுடன் சேர்த்தே குறிப்பிடப்பட்டுள்ளமையும் அவர்கள் அவளது பிள்ளைகள் என்பதை உறுதிப்படுத்துகின்றத.(13) மேலும், மரியாள் கடைசிவரைக்கும் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் என்பதற்கும் புதிய ஏற்பாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை. மத்தேயு 1:25 இல் “மரியாள் தன் முதற்பேறான குமாரனாகிய இயேசுவைப் பெறும் வரைக்கும் யோசேப்பு அவளை அறியாதிருந்தான்“ என்றே கூறுகின்றது. “அறிதல்” எனும் சொற்பிரயோகம் பாலுறவுக்கான இன்சொல்லணியாகும்” “இயேசு பிறக்கும்வரை அவர்கள் பாலுறவில் ஈடுபடவில்லை என்பதை இவ்வசனம் அறியத்தருகின்றது.(15) எனினும் “அதன் பிறகும் அவர்கள் அவ்விதமே பாலுறவைத் தவிர்த்து வந்தனர் என இவ்வசனம் எவ்விதத்திலும் கூறவில்லை. (16) அதன் பின்னர் அவர்களுக்குப் பிறந்தவர்களே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் சகோதரர்கள் என்றும் சகோதரிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

இயேசுவுக்கு உடன் பிறந்த சகோதரர்களும் உடன் பிறந்த சகோதரரரும் சகோதரிகளும் இருந்த போதிலும், அவர் தன்னைப் போல தேவனுடைய சித்தத்தின்படி செயல்படுபவர்களையே தன்னுடைய சகோதர்களாகவும் சகோதரிகளாகவும் கருதினார். அவருக்கு மானிட உறவுகளைவிட தேவனுடய சித்தமே முக்கியமானதாயிருந்தது. எனவே, அவரைத் தெய்வமாகக் கொண்டுள்ள நாமும் அவரைப் போலவே தேவசித்தத்தின்படி செயல்படுபவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.


குறிப்புகள்
(1) மாற்குவின் சுவிஷேசத்திலேயே இயேசு ஒரு வீட்டுக்குள் இருப்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (மாற்கு 3:20,31)

(2) இயேசு மரணத்திலிருந்து உயிர்தெழுந்த பின்பே அவரது குடும்பத்தினர் அவரை விசுவசித்தனர். (அப். 14) மரித்த இயேசு தன்னை உயிரோடிருக்கிறவராக அவர்களுக்குக் காண்பித்தமையே அவர்களது விசுவாசத்திற்குக் காரணமாயிருந்த்து, (அப்போஸ்தலர் 15:7 இல் குறிப்பிடப்பட்டிருப்பது  இயேசுவின் சகோதரன் யாக்கோபு)

(3) இயேசுவின் சட்ட ரீதியான தகப்பனான யோசேப்பைக் குறித்து எதுவும் குறிப்பிடப்படாததிலிருந்து அவர் இதற்கும் முன்பே மரித்திருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறோம். (Donald A. Hagner, Word Biblical commentary, Mathew, p. 359)

(4) அக்காலத்தில் அநேகர் இயேசுவை இவ்விதமாக விமர்சித்துள்ளனர்)

(5) இது பற்றிய மேலதிக விளக்கத்திற்கு 2:3 இற்கான விளக்கத்தைப் பார்க்கவும்

(6) D.A. Carson, The Expositor’s Bible commentary : Mathew p. 299

(7) Karl Keating, Catholicism and Fundamentalism. San Francisco : Ignatius Press, 1988. P. 283

(8) John McHugh, The Mother of Jesus in the New Testament. Garden City Doubleday, 1975, p. 200-201

(9) D.A. Carson, The Expositor’s Bible Commentary Mathew, p. 299

(10) William Barclay : The Daily Study Bible : The Gospel of Luke. P 29 யூத நூலான மிஷ்னாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்விடயம் அதாவது பன்னிரு வயதிலிருந்து யூத ஆண்களுக்கு கொடுக்கப்படும் மார்க்க கல்வி பற்றிய அறிவுறுத்தல்கள் (Niddah: 5:6 Megilla 4:6, Abot 5:12) இயேசுவின் காலத்திலும் இருந்துள்ளன. (Darrell L. Bock, The IVP New Testament Commentary: Luke p. 62) யாத்திராகமம் 23:14-17, 34:22-23, உபாகமம் 16:16 போன்ற வசனங்களில் குறிப்பிட்டுள்ளபடி, வருடத்தில் மூன்று தடவைகள் முக்கியமான பண்டிகைகளுக்கு தேவாலயத்திற்குப் போகும்படி புதிய ஏற்பாட்டுக்கால யூத மார்க்கம் வற்புறுத்தவில்லை. தூர இடங்களில் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை, அல்லது ஆயுளில் ஒரு தடவையாவது எருசலேம் தேவாலயத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியது, (Everett Ferguson Backgrounds of Early Christianity p. 521)

(11) இது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவனால் விடுவிக்கப்பட்டதை நினைவுகூருவதற்காக ஆசரிக்கப்படும் பண்டிகையாகும்

(12) இத்தகைய உபதேசம் படிப்படியாக கிறிஸ்தவ சபைக்குள் புகுத்தப்பட்ட தேவ ஆதாரமற்ற விளக்கமாகும். கி.பி. 451ல் சால்சிடோன் எனுமிடத்தில் கூடிய சபையின் ஆலோசனைச் சங்கக் கூட்டத்தில் மரியாளுக்குத் “தெய்வத்தை சுமப்பவள்“ அல்லது “தேவ தாய்“ என அர்த்தம் தரும் “தியோடொகொஸ்“ (theotokos) எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. (John H. Leith, ed. Creeds of the church, Richmond: John Knox Press. 1973, p. 36) அதன் பின்னர் கி.பி. 553ல் கூடிய இரண்டாவது சால்சிடோன் ஆலோசனைச் சங்கம் மரியாளுக்கு எப்போதும் கன்னி என்ற அடைமொழியை சேர்த்தது. (Elliot Miller & Kenneth R. Samples, The Cult of the Virgin: Catholic Mariology and the Apparitions of Mary: Grand Rapids: Baker Book House, 1994, p24) அதன் பின்னர் மரியாள் “பாவமற்றவளாக இருந்தாள்“ எனும் கருத்து உருவாகத் தொடங்கியது. எனினும் நான்காம் நூற்றாண்டிலேயே “மரியாள் பாவமற்றவள்“ எனும் உபதேசம் சிலரால் போதிக்கப்பட்டது. (Earmon R. Carroll, ‘Mary in the Documents if the Magisterium’ in Mariology Vol 1 ed. Juniper B. Carol, Milwaukee: Bruce Publishing Company, 1955, p. 14-15) ஆனால். பிற்காலத்திலேயே இது சபையின் உபதேசமாகியது. (lbid p. 17) 1854 இல் போப்பாண்டவர் 9வது பயஸ் என்பார் இதை சபையின் உபதேசமாகப் பிரகடனப்படுத்தும்வரை இது பற்றிய சர்ச்சை சபையில் இருந்தது. (E. Miller & K.R. Samples. The Cult of the Virgin p. 31-32) அதன் பின்னர் மரியாள் மரணத்தின் பின்பு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்றதாகவும் 1864இல் போப்பாண்டவர் 9வது பயஸ் அறிவித்தார்(Earmon R. Carroll ‘Mary in the Documents of the Magisterium’ p. 28) மேலும், காலத்திற்குக் காலம், மரியாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தது பற்றிய கதைகளும் ரோம சபையில் முன்வைக்கப்பட்டுள்ளன. (E. Miller & K.R. Samples, The Cult of the Virgin. P. 88-99) மரியாளைப் பற்றிய ரோம சபையின் இத்தகைய உபதேசங்களுக்கு எதிராக வேதாகமம் மரியாளையும் மற்றவர்களைப் போலவே பாவியான ஒரு பெண்ணாகவே சித்தரித்துள்ளது. அவள் தேவனைத் தன்னுடைய இரட்சகராகவே குறிப்பிட்டுள்ளாள். (லூக். 1:47) பெந்தகோஸ்தே நாளில் மற்றவர்களைப் போல மரியாளும் பரிசுத்தாவியானவருக்காக காத்திருந்து மன்றாடினாள். (அப். 1:14)

(13) E. Miller & K.R. Samples, The Cults of the Virgin p. 27

(14) A. Greek-English Lexicon of the New Testament and other early Christian Literature ஆதியாகமம் 4:1 ல் இதை நாம் அவதானிக்கலாம்

(15) Leon Morris, The Gospel According to Mathew, p. 32

(16) Herbert M. Carson, The Faith of the Vatican p. 114

நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் - Dr.M.S. வசந்தகுமார்.  
     
    

    




தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment