இயேசு கிறிஸ்துவினுடைய கூற்றுக்களில் இன்று அநேகருக்கு குழப்பதை ஏற்படுத்தியுள்ள வார்த்தைகள், அவர் தான் செய்த அற்புதங்களைப் பற்றி எவருக்கும் சொல்ல வேண்டாம் என அறிவுறுத்திய கட்டளையாகும். உதாரணத்திற்கு குஷ்டரோகி ஒருவனைக் குணமாக்கிய அவனிடம், “இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு“ (மத். 8:4) என்று கட்டளையிட்டார். (மாற். 1:43) அதேபோல் அசுத்த ஆவிகளைத் துரத்தும்போதும் இயேசு “தம்மைப் பிரசித்தம் பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாக கட்டளையிட்டார். (மாற். 3:12) மேலும், மரித்த சிறுமியை உயிரோடெழுப்பிய பின்னர் தான் செய்த அற்புதச் செயலை “ஒருவருக்கும் அறிவியாதபடி ……. உறுதியாக கட்டளையிட்டார். (மாற். 5:43) இயேசுவின் இத்தகைய அறிவிப்பை சுவிஷேசப் புத்தகங்களில் பல தடவைகள் வாசிக்கலாம். (மத். 9:30, 12:16, 16:20, 17:9, மாற். 7:36, 8:26, 9:9) இத்தகைய கூற்றுக்களை வாசிப்பவர்கள் அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்பதை அறியாமல், இயேசுவின் வார்த்தைகள் அறிவீனமானவைகள் எனக் கருதுகின்றனர்.
இயேசு கிறிஸ்து வாழ்ந்த பிரதேசத்தை கருத்திற் கொள்ளாமல் அவரது கூற்றுக்களை விளங்கிக் கொள்ள முற்படும்போதே அவை அறிவீனமானவைகளாகத் தென்படும். ஆனால், இயேசுவின் காலத்தைய பாலஸ்தீனவின் அரசியல் பொருளாதார மற்றும் மார்க்க விடயங்களைக் கருத்திற் கொள்ளும்போது அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவை என்பதை அறிந்திடலாம். உண்மையில், “மக்கள் தன்னைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இயேசு அற்புதங்கள் செய்யும் ஒருவராகப் பிரபல்யமடைய விரும்பவில்லை.(1) ஏனென்றால் அத்தகைய பிரபல்யம் பாலஸ்தீனாவில் அரசியல் பிரச்சினைகளைத் தோற்றவிக்க் கூடியதாக இருந்தது. இதனாலேயே தான் செய்த அற்புதங்களைப் பற்றி எவருக்கும் சொல்ல வேண்டாம் என இயேசு கட்டளையிட்டார். (2)
இயேசு கிறிஸ்துவினுடைய காலத்தில் அவர் வாழ்ந்த பலஸ்தீனா, ரோம சாம்ராட்சியத்தின் ஆளுகையின் கீழ் இருந்தது.(3) எனினும் யூதர்கள் மறுபடியும் தமக்கு சுயாதீன ராட்சியம் கிடைக்கும் எனும் நம்பிக்கையுடையவர்களாக, பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை அடிப்படையாகக் கொண்டு(4). தம்மை விடுவிப்பதற்குத் தேவனால் அனுப்பப்படும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இயேசு இவ்வுலகிற்கு வந்த காலம் யூதர்களைப் பொறுத்தவரை மேசியா வரும் காலமாகவே இருந்தது. எச்சந்தர்ப்பத்திலும் மேசியா வந்துவிடலாம் எனும் எதிர்பார்ப்புடன் மக்கள் அக்காலத்தில் இருந்தனர்.(5). மேலும், தேவனால் அனுப்ப்படும் மேசியா அற்புத அடையாங்களுடன் வெளிப்படுவார் என்றும், தமது முதற்பிதாக்களை மேசே எகிப்தின் அடிமைத்தனங்களிலிருந்து விடுவித்துக் கொண்டு வந்தது போல வரவிருக்கும் மேசியா அற்புதச் செயல்கள் மூலம் தம்மை ரோமஅடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என நம்பினர். இதனால், தான் அற்புதங்கள் செய்பவராகப் பிரபல்யமானினால், யூதர்கள் தன்னை அரசியல் ரீதியான ராஜாவாக கருதி, ரோம அரசுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் என்பதனால், பல தடவைகள், தான் செய்த அறபுதங்களைப் பற்றி எவருக்கும் சொல்ல வேண்டாம் எனக் கட்டளையிட்டார்.
“மேசியாவை யூதர்கள் அரசியல் ரீதியான இரட்சகராகவே எதிர்பார்த்தனர். (6). வரவிருக்கும் மேசியா தம்மை “ரோம அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து தமக்கு ஒரு சுயாதின ராட்சியத்தை உருவாக்கிக் கொடுப்பார் என்றே அவர்கள் எண்ணினார்(7). இயேசுவின் அற்புதங்கள் அவர் தேவனால் அனுப்பப்படும் மேசியாவாகய் இருப்பாரோ எனும் சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. இயேசு கிறிஸ்து ஐந்து அப்பங்களையும் இரு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த சம்பவம் அக்கால மக்களின் இத்தகைய மனநிலையை நமக்கு அறியத் தருகின்றது. இயேசு இவ்வற்புதத்தைச் செய்த பின்னர் “அவர்கள் (மக்கள்) வந்து தம்மை ராஜாவாக்கும்படி பிடித்துக் கொண்டு போக மனதாயிருக்கிறார்கள்“ என்று இயேசு அறிந்து மறுபடியும் விலகி தனியே மலையின் மேல் ஏறினார்“ என்று யோவான் 6.15 இனால் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதர்கள் மேசியாவை அரசியல் ரீதியான தலைவராக எதிர்பார்த்தமையால், தான் ஒரு அரசியல்வாதி எனும் எண்ணம் மக்கள் மத்தியிலிருந்து நீங்கும் வரை அதாவது சிலுவை மரணம் வரை தான் மெசியா என்பதை யூதர்களுக்கு வெளிப்படுத்தவில்லை.(8). இயேசுவின் அற்புதங்கள் அவரை அரசியல் ரீதியான மேசியாவாக மக்களுக்கு கண்பித்தமையால்(9). அவர் தான் செய்த அற்புதங்களைப் பிரபல்யப்படுத்த விரும்பாமல் அது பற்றி யாருக்கும் கூற வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
குறிப்புகள்
1. Leon Morris, The Gospel According to Mathew, p. 190
2. Donal A.Hagner, Matthew 1-13 p. 199
3. ரோமர்கள் கி.மு. … பலஸ்தீனாவைக் கைப்பற்றி அதைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இயேசு பிறந்த காலத்தில் ஏரோதுவும் அதை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இயேசு பிறந்த காலத்தில் ஏரோதுவும் அதன் பின்னர் அவனுடைய பிள்ளைகளும் பாலஸ்தீனாவை ரோமர்களுக்காகவே ஆண்டு வந்தனர்.
4. பழைய ஏற்பாட்டில் வரவிருக்கும் மேசிய யுகம் யூதர்களுக்கு வளமானதும் ஆசீர்வாதம் மிக்கதுமான காலமாக முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (ஏசா. 26-29, எசே. 40-48, தானி. 12, யோவே. 2:28- 3:21) இரு ஏற்பாடுகளுக்குமிடைப்பட்ட காலத்தில், மேசியா தாவீதின் வம்சத்தில் வரும் ராஜாவாக, இஸ்ரவேலரின் எதிரிகளை அழித்து, அவர்களுக்கு ஒரு உலக ராட்சியத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர் எனும் எதிர்பார்ப்புடனேயே யூதர்கள் இருந்தனர். (Donald Guthire, New Testament Theology, Leicester : Inter Varsity Press, 1981, p. 237)
5. இதனால்தான் கிழக்கில் தோன்றிய நட்சரத்திரத்தைப் பற்றி ஆராய்ந்த ஏரோதுவின் அரசியல் ஆலோசகர்கள், யூதருக்கு ராஜா பிறந்திருக்கிறார் என உடனடியாக கூறக்கூடியவர்களாயிருந்தார்கள். (மத். 2:3-5). அதுமட்டுமல்ல யோவான் ஸ்நானகனின் ஊழியத்தைப் பார்த்தவர்கள் அவன் மேசியாவாயிருப்பானோ என எண்ணத் தொடங்கினர். (லூக். 3:15) இதனால் அவன்தான் மேசியா அல்ல என அறிக்கையிட வேண்டியதாயிருந்த்து. (யோவான். 1:20) இயேசுவின் ஆரம்ப சீடர்கள் அவர் மேசியா என்றே முடிவுகட்டி விட்டனர். (யோவா. 1:41)
6. S. Mowwnckel, He That Cometh, Oxford : Oxford University Press, 1959, p.7
7. Donald Guthrie, New Testament Theology, p. 238
8. Ibid. p. 240 சமாரியர்கள் மத்தியில் மேசியாவைப் பற்றிய இத்தகைய அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகள் இராதமையினாலோயே இயேசு தன்னோடு உரையாடிக் கொண்டிருந்த சமாரிப் பெண்ணுக்கு தான் மேசியா என்பதை வெளிப்படுத்தினார். (யோவான். 4:25-26)
9. மேசியா எங்கிருந்து வருவார் என்பதைப் பற்றி எவருக்கும் தெரிந்திருக்காது என்று யூதர்கள் கருதியாமையாலேயே இயேசுவின் வாழ்விடத்தை அறிந்திருந்த சில யூதர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. (யோவான். 7:25-27) எனினும் வரவிருக்கும் மேசியா அற்புதங்கள் செய்வார் என்பதில் அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. (யோவான். 7:31)
நன்றி - சத்தியவசனம்
கட்டுரையாசிரியர் - Dr. M.S. வசந்தகுமார்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment