இன்றைய உலகத்தில் விபச்சாரம் மிக சாதாரணமானது என்று கருதப்படுவதால் வேதாகமம் இதனை எவ்வளவு பாரதூரமாகக் கருதுகின்றது என்பதனை குறித்து ஒரு குறிப்பை உள்ளடகத் தீர்மானித்து இருந்தேன். பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளை, “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” (யாத். 20:12, உபா. 5:18) என்று சொல்கிறது. பழைய ஏற்பாட்டில் விபச்சாரத்திற்கான தண்டனை மரணம். (லேவி. 20:10-12, உபா. 22:22-25) பண்டைய கிழக்குலகிலே விபச்சாரமானது, விவாக துணைக்கெதிராகச் செய்யப்படும் பாவமாக மட்டுமே கருதப்பட்ட வேளையிலும் யோசேப்பும் தாவீதும் குறிப்பிட்ட பிரகாரமாய் (ஆதி. 39:9, சங். 51:4) வேதாகமம் அதனை தேவனுக்கெதிரான பாவமாகக் கருதுகின்றது. தாவீதின் விபச்சாரத்தைக் குறித்து நாத்தான் தேவனின் வார்த்தையை வெளிப்படுத்திய வேளையில் “இப்போது நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டபடியால் ….(2 சாமு. 12:10) என்று குறிப்பிடுகின்றார்.
பீட்டர் கிறேய்ஜி என்பவர் பத்துக் கட்டளைகளில் விபச்சாரமானது எமது கவனத்திற்கென தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கான காரணம், வேறு எவ்விதமான பிழையான உறவு போலல்லாது, இது உடன்படிக்கை உறவுக்கு உண்மையற்றதாயிருப்பதாகும் எனக் குறிப்பிடுகின்றார். பழைய ஏற்பாட்டின் பிற்பகுதியில் விக்கிர ஆராதனையும் இஸ்ரவேலரின் சமயக்கொள்கை மீறல்களும் விபச்சாரத்திற்கு ஒப்பு உவமையாக விபரிக்கப்படுகின்றது. (ஏசா. 52:3, எரே. 3:8-9, எசே.23:43, ஒசி. 2:2) அதாவது, திருமணப்பிணைப்பு தேவனுக்கும் அவருடைய மக்களுக்குமிடையேயான பிணைப்பை பிரதிபலிக்கின்றது. அது மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சத்துடன் தொடர்புடையது. அதாவது, அது தேவனுடனும் துணையுடனும் பிணைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம்.
இஸ்ரவேல் சமூகத்துடன் தேவனுடைய உடன்படிக்கை உறவில் மிக முக்கியமான அம்சமாக குடும்பம் இருந்தது என்ற உண்மையின் நிமித்தம் விபச்சாரம் பாரதூரமானதாக இருக்கின்றது. தேவன் தம் ஜனங்களுக்காக, அவருடைய விருப்பங்களில் அநேகமானவற்றை குடும்பத்தினூடாகவே நிறைவேற்றியுள்ளார். தேவனுக்கும் மனிதடனான உடன்படிக்கை உறவிலும் ஒரு மனிதனுக்கும் அவன் மனைவிக்கும்இடையிலான உடன்படிக்கை உறவிலும் உள்ள ஒப்படைப்புக் கொள்கையை வேதாகமம் மிக முக்கியமானதாக் கருதுகின்றது. இந்தக் கொள்கையை மீறுதல், தேவன் மனிதர்களுடன் செயலாற்றும் விதத்தை மீறுதலுக்கு ஒப்பாகும். இது மிகவும் மோசமான குற்றச் செயலாகும். பெற்றோரைக் கனப்படுத்த வேண்டியதை தேவன் முன்னதாகவே பத்துக்கட்டளைகளில் உள்ளடக்கினார். ஏனெனில், இஸ்ரவேலுடனான உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தேவனுடனானதும், குடும்பத்துடனானதுமான பிணைப்பில் இதுவும் ஒரு அம்சமாகும்.
1 கொரிந்தியர் 6:12-20 இலே பவுல் விபச்சாரம் பாரதூரமானது என்பதற்கு மற்றுமொரு ஆழமான காரணத்தைத் தருகின்றார். இந்தக் காரியம் கிறிஸ்துவுக்கும் எமது சரீரத்திற்கும் இடையில் மிகவும் நெருங்கிய பிணைப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில் ஆனதாகும். பவுல் இந்தக் குறிப்பை பின்வரும் ஒரே பந்தியில் காணப்படும் நான்கு வாக்கியங்கள் ஊடாக வலியுறுத்துகின்றார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். (1 கொரிந்தியர் 6:13) உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? (1 கொரி. 6:15). அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். (1 கொரி. 6:17). உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும்,… (1 கொரிந்தியர் 6:19) கிறிஸ்துவுக்கும் எங்கள் சரீரங்களுக்கும் இடையேயான இப்படியான பிணைப்பின் காரணமாக, “உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். ,… (1 கொரிந்தியர் 6:20) என்ற பவுல் சொல்லுகிறார்.
தேவன் திருமணத்தை ஏற்படுத்தியபோது “அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்ற ஆதியாகமம் 2:24 ஐப் பயன்படுத்தியே, பாலுறவு சரீரங்களை ஒரு சரீரமாக்கும் என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். ஒரு மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் இடையிலான உறவு, கிறிஸ்துவுடனான எமது உறவின் ஒரு அம்சமாகும். இதனால், சரீரத்தின் ஒரு பகுதி கிறிஸ்துவுடன் ஒன்றாயிருப்பதை குலைக்கின்ற பிரகாரமாய் மற்றொருவருடன் ஒன்றாயிருக்கின்றது. வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? (1 கொரிந்தியர் 6:16) என பவுல் கேட்கின்றார். இம் மனிதன் கிறிஸ்துவை நிராகரித்துவிட்டு அவரை ஒரு வேசியினால் மாற்றீடு செய்கிறான்.
எமது சரீரத்தினால் செய்யப்படும் மற்றப் பாவங்களைவிட விபச்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமானது என பவுல் சொல்லுகின்றார். “மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். (1 கொரிந்தியர் 6:18). குடிப்பது போன்ற மற்றைய பாவங்களும சரீரத்திற்கு எதிரானவையே. ஆனால் விபச்சாரமோ, குறிப்பாக முக்கியமாக சரீத்திற்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறது. எப்படியெனில், கிறிஸ்துவுடனோடு மட்டுமே ஒன்றாயிருக்க வேண்டிய தன்மையை வேறொருவருடன் ஒன்றாயிருக்கும்படி ஆக்குகின்றது. இப்படியான விபச்சாரத்தினூடாக ஒன்றாயிருப்பதை கிறிஸ்து வெறுத்து ஒதுக்குகின்றார்.
விசுவாசிகளின் சரீரம் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்கின்றது என்பதனை நாம் முழுவதுமாக விளங்கிக் கொள்ளாவிடில் இவ் விடயங்கள் ஒன்றும் அர்த்தமுள்ளவையாகத் தெரியாது. மாணவனொருவன் வாகனத்தைச் செலுத்துகையில் பாடசாலையின் அதிபர் முன் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மாணவன் வாகனத்தை ஓட்டும் மற்றச் சாரதிகளைத் தூஷித்து சாலை விதிகளை மீறுவானானால் எப்படி இருக்கும்? அதிபருக்கு அது எவ்வளவு அவமதிப்பாயிருக்கும். விபச்சாரமானது கிறிஸ்துவுக்கு இதையும்விட அதிகமான அவமதிப்பை ஏற்படுத்தும். வாகனத்திலிருந்த (எமது சரீரம்) கிறிஸ்துவை உதைத்துத் தள்ளிவிட்ட தன்மைக்கு ஏற்ற ஒரு செயற்பாடாக இதனைக் கொள்ளலாம்.
விபச்சாரத்தினால் ஏற்படும் பாரதூரமான உலகியல் விளைவுகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. “இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். (2 சாமுவேல் 12:10) என்று தாவீதுக்கு சொல்லப்பட்டது. இதுவே தாவீதுக்கு நடந்தது. தேவனுடனான அவனது உறவு சீர்படுத்தப்பட்டது என்று சங்கீதம் 51:12 இல் அவன் விரும்பிக் கேட்ட இரட்சணியத்தின் சந்தோஷம் கிடைத்தது என்றும் நான் நம்புகிறேன். ஆனால் அவனது குடும்ப சரித்திரமோ விபச்சாரத்திற்குப் பின் அதிக மோதல்களை உடையதாக இருந்தது.
இன்றும் இது உண்மையானதாகவே உள்ளது. துணையானவள் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் இந்தக் காயத்துடனேயே வாழ வேண்டும். பிள்ளைகள் இக்காயத்துடன் வாழ்வது மட்டுமல்ல அவர்களுடைய பெற்றோர் செய்த காரியத்தின் காரணமாக கோபத்துடனும் வெட்கத்துடனும் வாழ்வார்கள்.
தேவன் எமது பாவங்களை மன்னிக்கும்போது அதனை மறந்து போனாலும் மனிதர்கள் மறப்பதில்லை. இது அந்த மனிதனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவே இருக்கும். இந்த விபச்சார உறவில் இன்னுமொரு நபரும் இருக்கிறார். அவரும் மிகவும் ஆழமாகக் காயப்பட்டிருக்கிறார். ஒரு போதகர் இளம் நங்கையுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் பின்னர் உண்மையான மனந்திரும்புதலின் காரணமாக தனது மனைவியுடன் தனது ஊழியத்திலும் மீண்டும் இணைந்து கொண்டார். ஆனால் அநேக வருடங்களின் பின்னர் அந்த இளம் நங்கை ஒரு விபச்சாரியாகிவிட்டாள் என்ற அவர் அறிந்து கொண்டார்.
இறுதியாக விபச்சாரமானது விசேடமாக ஒரு தலைவனால் செய்யப்பட்டிருந்தால் அது சபையில் அல்லது நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் குழப்பமடைந்தவர்களாயும் சோர்வற்றவர்களாயும் ஆகிறார்கள். காரணம், அவராலேயே முடியாமற்போனால் எங்களுக்கு என்ன நம்பிக்கை உள்ளது என்ற சிந்தனையேயாகும். உறுப்பினர்கள் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்த்த்தன் காரணமாக, தலைவர்களைக் குறித்து அதிகப்பட்டியான குழப்பமும் கோபமும் அடைகிறார்கள். தலைமைத்துவம் தவறிழைத்தவருக்கு எதிராக ஒழுக்காற்றல் நடவடிக்கை எடுக்கும்போதே அல்லது சரியாக எடுக்காமல் விடும்போதோ, உறுப்பினர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் குழுக்களாகப் பிரிவதன் காரணமாக உறுப்பினர்கள் மத்தியிலுள்ள ஐக்கியம் உடைக்கப்படுகின்றது.
ஆபத்திலிருந்து விலகியோடப் பயன்படுத்தும் பதத்தைப் பாவித்து பவுல், “வேசித்தனத்திற்க விலக்கியோடுங்கள்(1 கொரி. 6:18) என்று சொல்லுகிறார். கொள்ளை நோயை நாம் தடுப்பதுபோல இதனைத் தடுக்க வேண்டும். காட்டுத் தீயை விட்டு நாம் தப்பியோடுவதுபோல் அல்லது எம்மை தாக்கி அழிக்கப் பார்க்கும் ஒரு மிருகத்திடமிருந்து தப்பியோட வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. நாம் சோதிக்கப்படும்போது நாம் அதனைவிட்டு பயத்தோடு ஓட வேண்டும். ஊழியத்திலுள்ள எனது நண்பரொருவர் விபச்சார பாவத்தில் விழுந்துபோன தனது முன்னாள் மூத்தக போதகரிடம், இளம் போதகர்களுக்கு அவர் கொடுக்கும் ஆலோசனை என்ன என்று கேட்டார். அவரோ, “அதனைச் செய்ய வேண்டாம் என எளிமையாகச் சொன்னார்.
இவ்வாக்கமானது Dr. Ajith Fernando (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்