- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday, 12 December 2012

பூமியின் மேல் … சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன். (மத்தேயு 10:34)


இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அவர் உலகிற்கு அறிவிக்க வந்த செய்தியையே முரண்படுத்தும் கடினமான வாக்கியமாகப் பலரால் கருதப்படுவது, அவர் தான் பூமியின் மேல் பட்டயத்தை அனுப்ப வந்தேன் எனத் தெரிவித்தமையாகும். இயேசு சமாதானப் பிரபுவாகவும் (ஏசா. 9.6)(1) சமாதானக் காரணராகவும் (எபே. 2:14) இருப்பதோடு, அவர் உலகிற்கு அறிவிக்கும் செய்தி சமாதானத்தைப் பற்றியதாகவே உள்ளது. (எபே. 2.17, மத். 10.13) மேலும் அவர் தனது சமாதானத்தை நமக்குத் தருவதாகவும் வாக்களித்துள்ளார். (யோவான் 14:27) இதனால் இயேசுவின் சீடர்கள் அவர் உலகிற்கு சமாதானத்தையே கொண்டு வந்துள்ளதாக எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் இயேசுவோ அவர்களுடைய நம்பிக்கையை தகர்த்தெறியும் விதத்தில் “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.(மத். 10:34) எனக் கூறியமை கிறிஸ்தவர்களாகிய நம்மால் புரிந்துக் கொள்வதற்கு கடினமான வார்த்தைகளாகவே உள்ளன.
 
உண்மையில் இயேசு உலகிற்குக் கொண்டு வந்த சமாதானம் எத்தகையது என்பதை நாம் அறிந்திருந்தால் அவரது இக்கூற்றை முரண்பாடானதாகக் கருத மாட்டோம். “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்“ என இயேசு கூறுவதிலிருந்து அவரது சீடர்கள் “அவர் சமாதானத்தையே கொண்டு வந்துள்ளார்“ என்றே எண்ணிக் கொண்டிருந்தனர் என்பதை அறியத் தருகின்றது. இயேசுவின் காலத்தைய யூதர்கள் தேவனால் அபிஷேகம் பண்ணி அனுப்பப்படும் இரட்சகரை(2) எதிர்பார்த்துக் கொண்டிருந்த்தோடு, அவர் தம்மை ரோம இராட்சியத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து தமக்கு சமாதானமிக்க இராட்சியத்தைப் பெற்றுத் தருவார் என்றும் நம்பினர். (3) “மேசியாவின் வருகை உலகளாவிய சமாதானத்தைக் கொண்டு வரும்“ என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது.(4). எனினும் இயேசு இத்தகைய நோக்கதோடு வராதமையால்(5) தன்னை சமாதானத்தைக் கொண்டு வருபவராக எண்ண வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இயேசு கொண்டு வந்த சமாதானம் ஆவிக்குரியதாக இருந்தது வேதத்தில் சமாதானம் என   மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் சண்டைகளற்ற சகஜ நிலையைக் குறிக்கும் பதம் அல்ல. மாறாக இது ஒப்புரவாக்கப்படும் செயலையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது இயேசு மக்களைத் தேவனோடு ஒப்புரவாக்குகின்றவராய் செயல்படுகின்றார். இது பாவத்தினால் பிரிந்திருந்த தேவனையும் மனிதனையும் ஒப்புரவாக்கி தேவனுக்கும் மனிதருக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதாயிருந்தது. இதை அவர் சிலுவையில் மக்களுடைய பாவங்களை பரிகரித்ததன் மூலம் செய்துள்ளார். (6). இயேசு இத்தகைய சமாதானத்தைப் பற்றியல்ல. அதாவது அக்கால யூதர்களும் தனது சீடர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விதமான சமாதானத்தை தருவதற்காக தான் வரவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
 
யூதர்களின் எதிர்பார்த்த விதமான அரசியல் ரீதியான சமாதானத்தைக் கொண்டு வராத இயேசு தான் பட்டயத்தையே அனுப்ப வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் பட்டயம்“ எனும் வார்த்தை இங்கு சொல்லர்த்தமாக உபயோகிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உண்மையில் இயேசு ரோம இராட்சியத்தோடு போராடுவதற்காக இவ்வுலகிற்கு வரவில்லை. சில வேத ஆராய்ச்சியாளர்கள் லூக்கா 12.49 இல் இயேசு குறிப்பிட்ட விடயமே, அதாவது பூமியின் மேல் அக்கினியை போட வந்தேன்“ என்னும் அவரது கூற்று மத்தேயுவில் பட்டயத்தை அனுப்ப வந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளதாக கருதுகின்றனர். (7) எனினும் அக்கினியை போட வந்தேன் எனும் கூற்று நியாயத்தீர்ப்பைப் பற்றிய குறிப்பாக இருப்பதனாலும்(8) இயேசுவின் இக்கூற்று லூக்கா 12.51 குறிப்பிடப்பட்டிருப்பதனாலும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஷ
 
உண்மையில் “பட்டயம்“ எனும் வார்த்தை என்ன அர்த்தத்துடன் இயேசுவால் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதையும் லூக்கா 12.51 இன் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. லூக்காவில் பட்டயம் என்பதற்குப் பதிலாக “பிரிவினை“ என்னும் வார்த்தை உள்ளது. எனினும் இயேசுவின் கூற்றின் ஆரம்ப வரிகளில் எவ்வித மாற்றமும் இல்லை. “நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன்“ என லூக்கா 12.51 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்தேயுவில் “பட்டயத்தை அனுப்ப வந்தேன்“ எனக் கூறிய இயேசு அதைப் பற்றி விளக்கும்போது “எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன்.“ (மத். 10.35) “பட்டயம்“ என்னும் வார்த்தையை அவர் பிரிவினையைக் குறிக்கும் ஒரு உருவகமாகவே உபயோகித்துள்ளார்(9) என்பதை அறியத் தருகின்றது. இதிலிருந்து இயேசு அனுப்பும் பட்டயம் “குடும்ப அங்கத்தினர்களுக்கிடையிலான பிரிவினை என்பது தெரிகின்றது. (10)
 
இயேசு “பட்டயத்தை அனுப்ப“ (மத். 10.34) அதாவது பிரிவினையை உண்டாக்க“ (லூக்கா. 12.51) வந்ததாக்க் குறிப்பிட்டுள்ளமையினால், அவரது வருகை எவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ள விதமாக்க் குடுமப் அங்கத்தினரிடையே பிரிவினையையும் பகையையும் ஏற்படுத்தும் என்பதும் இன்று அநேகர் கேட்கும் கேள்வியாகவுள்ளது. உண்மையில் இயேசுவின் சுவிஷேசத்திற்கும் மக்கள் அளிக்கும் உத்தரவாத்தை அடிப்படையாக்க் கொண்டே குடும்பங்களில் பிரிவினைகள் ஏற்படுகின்றன. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் எப்போதும் ஒரேவிதமான முறையில் இயேசுவை ஏற்றுக் கொள்வதில்லை. “அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு அளிக்கும் உத்தரவாதம் வித்தியாசப்படுவதனால், அதை அடிப்படையாக்க் கொண்டு அவர்களுக்கிடையே பிரிவினைகள் ஏற்படுகின்றன(11) உண்மையில் ஒரு குடும்பத்திலேயே இயேசுவை ஏற்றுக் கொள்பவர்களும் நிராகரிப்பவர்களும் இருப்பதனால் அவர்களிடையே பிரிவினைகள் ஏற்படுகின்றன. (12) இதைப் பற்றியே இயேசு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புகள்.
(1) ஏசாயா 9:6 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தீரக்கதரிசனமாகும்.

(2) இவரே மேசியா என அழைக்கப்பட்டார். மேசியா என்பது எபிரேயப் பெயராகும். இதனது அர்த்தம் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும். கிரேக்கத்தில் இத்தகைய கருத்தைத் தரும் பதம் “கிறிஸ்டோஸ்“ என்பதாகும். இது தமிழில் கிறிஸ்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவே தேவனால் அபிஷேசிக்கப்பட்டு அனுப்பட்டவர் என்பதனாலேயே இயேசு என்னும் அவரது பெயரோடு கிறிஸ்து என்னும் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

(3) Donald Gulthire. New Testament Thelogy. P. 237 மத்தேயு 8:4 இற்கான விளக்கத்தையும் பாரக்கவும்.

(4) Robert H. Mounce, New International Biblical Commentary : Mathew. P. 98

(5) இதனாலேயே என்னுடைய இராட்சியம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்று இயேசு தெரிவித்தார்.

(6) எபேசியர் 2ம் அதிகாரத்தில் பவுல் இதைப் பற்றி விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

(7) Mathew Black, “Uncomfortable Words’ in The Expository Times. Vol XXXI[1969-1970], p. 118

(8) லூக்கா 12:49 இன் விளக்கத்திற்கு இந்நூலின்…… பக்கத்தைப் பாரக்கவும்

(9) Leon Morris, The Gospel According to Mathew p. 266

(10) லூக்காவின் சுவிஷேசத்தில் “52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். (லூக்கா 12:52-53)

(11) Donald A. Hagner, Word Biblical Commentary: Matthew, p. 292

(12) R. T. France, Tyndale New Testament  Commentary: Matthew,p 188
 
இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.) 
 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

5 comments:

  1. //“பட்டயம்“ என்னும் வார்த்தையை அவர் பிரிவினையைக் குறிக்கும் ஒரு உருவகமாகவே உபயோகித்துள்ளார் என்பதை அறியத் தருகின்றது. இதிலிருந்து இயேசு அனுப்பும் பட்டயம் “குடும்ப அங்கத்தினர்களுக்கிடையிலான பிரிவினை என்பது தெரிகின்றது.//

    லூக்கா 22:35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.

    லூக்கா 22:36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

    லூக்கா 22:38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

    அப்போ இங்கு வருகிற பட்டயமும் பிரிவினையை உண்டாக்க வருவதா இல்லை வேறு ஏதாவது பொருளை குறிக்கிறதா சொல்லுங்கள்...நண்பரே...

    ReplyDelete
  2. நீங்கள் கோட் பண்ணியது உருவகத்தை குறிக்கின்றது. லூக்கா 22:36, லூக்கா 22:38 பட்டயத்தை குறிக்கின்றது. இது உருவகம் அன்று.

    ReplyDelete
  3. ஒரே வார்த்தைக்கு பல பொருள்களை அருமையாக தருகிறீர்கள்

    ReplyDelete
  4. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.

    ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.

    நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

    எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.

    தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

    லூக்கா 12:49-53

    ReplyDelete
    Replies
    1. சகோதரி நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை. லூக் 12:49 இற்கான விளக்கம் இங்கேயே உள்ளது. தேடிப்பிடித்துப் படித்துப் பாருங்கள்

      Delete