- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 28 March 2013

இயேசு சிலுவையில் சங். 22ம் சங்கீதத்தை ஏறெடுத்தாரா? என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? (மத். 27.46)



இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே அதிக அறிவீனமானதாக இருக்கும் வார்த்தைகளாகக் கருதப்படுவது அவருடைய சிலுவைமொழிகளில் ஒன்றாகும். (1) இயேசு சிலுவையில் “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?“ என்று கூறினார். (மத். 27.46) உண்மையில் கிறிஸ்தவர்களுக்கும் கூட இயேசுவின் இக்கூற்று அதிக குழப்பதையே ஏற்படுத்தியுள்ளது. தேவனைப் பிதா என்று அழைத்துவந்த இயேசு, சிலுவையில் மரிக்கும்போது மட்டும் ஏன் தேவனே என அழைத்துள்ளார்? தேவனோடு எப்போதும் ஐக்கியப்பட்டிருந்த இயேசு ஏன் தேவனால் கைவிடப்பட்டிருந்தார்? எனும் கேள்விகள் நம் உள்ளத்தில் எழுவது இயற்கையே. இயேசுவின் கூற்றுக்கள் அனைத்தையும்விட இவ்வார்த்தைகள் வித்தியாசமானவையாய் இருப்பதனால், இன்று பலர் இவற்றை இயேசுவின் வாயிலிருந்து வந்தவைகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.(2) அதேசமயம் யெகோவாவின் சாட்சிகள் போன்ற இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கும் குழுக்கள் தமது உபதேசத்திற்கு ஆதாரமாக இவ்வசனத்தையும் உபயோகித்து வருகின்றனர். 

இயேசுக்கிறிஸ்துவின்  இவ்வார்த்தைகள் அவர் பேசிய அரமிக் மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்தேயு 27.46 இல் ”ஏலி, ஏலி லாமா சபக்தானி” என்னும் வாக்கியம் எபிரேய மற்றும் அரமிக் மொழிச் சொற்கள் கலந்த ஒரு கூற்றாக உள்ளது. “ஏலி“ எனும் வார்த்தை எபிரேய மொழியில் தேவனை “என் தேவனே“ என அழைப்பதாகும். “லாமா சபக்தானி“ என்பது அரமிக்மொழி வார்த்தைகளாகும். ஆனால் இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று மாற்குவில் அரமிக் மொழியில் மட்டுமே உள்ளது. இதனால்தான் மாற்குவில் ஏலி என்பதற்குப் பதிலாக “எலோயி“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது(3) உண்மையில் எச்சுவிசேஷசத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்பதையும், எதில் என் தேவனே எனும் வார்த்தை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடியாதுள்ளது. இயேசு அரமிக் மொழியிலேயே பேசியிருக்க வேண்டும் என்றும் மத்தேயுவே தேவன் எனும் வார்த்தையை எபிரேய மொழியில் குறிப்பிட்டிருக்க வேண்டும்“ என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இயேசு எம்மொழியில் பேசியிருந்தாலும் அவரது வார்த்தைகள் புரிந்து கொள்வதற்கு சிரம்மானவைகளாகவே உள்ளன. 

இயேசு கிறிஸ்து தேவனால் கைவிடப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் கிறிஸ்தவர்கள் அவரது கூற்றுக்கு பலவிதமான அர்த்தங்களைக் கற்பித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் 22ம் சங்கீதத்தின் ஆரம்ப வார்த்தைகளாக இருப்பதனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் முழுச் சங்கீத்த்தையும் தன் ஜெபமாக ஏறெடுத்திருக்க வேண்டும் எனச் சிலர் விளக்குகின்றனர். சங்கீதத்தின் இறுதிப் பகுதி விடுதலைக்கான மன்றாட்டாய் இருப்பதனால் (சங். 22.21-22) இயேசு உண்மையிலேயே தேவனால் கைவிடப்படவில்லை என்றும், 22ம் சங்கீதத்தை அவர் தன்னுடைய மரண நேரத்தின் தியானமாக்கியுள்ளதோடு அதைத் தன் ஜெபமாக ஏறெடுத்துள்ளார் என்றும் இவர்கள் தர்கிக்கின்றனர். (5) எனினும் மரிக்கும் தருவாயில் இயேசு 31 வசனங்கள் உள்ள “ஒரு சங்கீதத்தை சொல்லிக் கொண்டிருந்தார் என்பது பொருத்தமான ஒரு விளக்கமாக இல்லை (6) அத்தோடு இயேசு ஒரு வசனத்தை உபயோகிப்பதை ஆதாரமாகக் கொண்டு அவர் முழு சங்கீதத்தையும் சொன்னார் என முடிவிற்கு வருவது தவறாகும். இயேசு உண்மையில் முழு சங்கீதத்தையும் சிலுவையிலிருக்கும்போது  சொல்லியிருந்தால் சுவிஷேச நூலாசிரியர்கள் நிச்சியம் இதுபற்றி குறிப்பிட்டிருப்பார்கள்.(7) மேலும் “இயேசுவின் வார்த்தைகள் பயங்கரமானதொரு கதறலாக இருப்பதனால் அதை எவ்விதத்திலும் ஒரு வேதத் தியானமாகக் கருத முடியாது(8). அதேசமயம் இயேசு 22ம் சங்கீதத்தின் ஆரம்ப வரிகளைத் தான் சிலுவையிலிருக்கும்போது உபயோகித்தார் என உறுதியாக கூறமுடியாது. “அவர் சங்கீதத்தை உபயோகிக்காமல், ஏனைய சிலுவை மொழிகளைப் போல, மரணத் தறுவாயில், தன் அனுபத்தை இவ்வாறு கூறியிருக்கலாம். (9)    

சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு தன் வேதனைகளுக்கு மத்தியில், தான் தேவனால் கைவிடப்பட்டவிட்டேன் எனும் தவறான எண்ணத்தில் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருதுகின்றனர். “இயேசு சிலுவையில் தனிமையில் இருந்தமையினால், தேவனும் தன்னைக் கைவிட்டுவிட்டோரோ என்று அவர் கேட்டுள்ளார்“(10) என்பதே இவர்களது விளக்கமாகும். ஆனால் இவர்கள் கூறுவதுபோல தேவனே நீர் என்னைக் கைவிட்டுவிட்டீரா என இயேசு கேட்கவில்லை. மாறாக ஏன் என்னைக் கைவிட்டீர் என்பதே அவரது வாயிலிருந்து வந்த வார்த்தைகளாகும். “இயேசுவுக்கும் தேவனுக்குமிடையிலான உறவு சிலுவையில் எவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்மைவிட இயேசு நன்றாகவே அறிந்திருந்தார். (11) இதைப் பற்றி இயேசுவை விட நமக்கு அதிகமாகத் தெரியும் என நம்மால் தர்க்கிக் முடியாது. (12) எனவே, இயேசு தேவனால் கைவிடப்பட்டார் எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளாமல், இயேசு தவறுதலாக இவ்வாறு கூறிவிட்டார் எனக் கருதுவது தவறாகும். இயேசுவின் வார்த்தைகள் “அவர் உண்மையிலேயே தேவனால் கைவிடப்பட்டார் என்பதையே அறியத் தருகின்றன. (13) 

உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு சிலுவையில் என்ன நடந்து என்பதை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அவரது இக்கூற்றை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேசமயம், “தேவனோடு எப்போதும் ஐக்கியமாயிருந்த இயேசு தேவனால் கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளாத வரையில், அவரது சிலுவை மரணத்தையும் நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. (14). 


சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி. 5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக. 8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம் தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2). இதனால் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர் தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதுவரைகாலமும் அவருக்கும் தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. “பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி, தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால் அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இருந்தார். (15)

பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான தனிமையை அனுபவித்தார். (16) உண்மையில், ” இயேசுக்கிறிஸ்துவுக்கும் தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில் முறிவடைந்தது. (17) இதனால் “சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே இருந்தார் (18) இதனால் “சிலுவையில் மரிக்கும்போது “என் தேவனே என் தேவனெ ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக.  இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில் மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



Footnote & Reference

(1) இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில், சிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது பேசியவைகள் அவருடைய சிலுவை மொழிகள் என அழைக்கப்படுகின்றன. இயேசுவின் சிலுவை மொழிகள் சுவிஷேசப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிறிஸ்தவ சபை இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமையன்று அவரது ஏழு சிலுவை மொழிகளையும் தியானிப்பது வழமை.

(2) T.R. Glover, The Jesus of History, London 1917, p. 192

(3) இயேசுவின் சிலுவை மொழிகளில் இக்கூற்று மத்தேயுவிலும் மாற்குவிலும் உள்ளதோடு, இக்கூற்று மட்டுமே இவ்விரு சுவிஷேசங்களிலும் காணப்படும் ஒரேயொரு சிலுவை மொழியாக உள்ளது. ஏனைய ஆறு சிலுவை மொழிகளும் லூக்காவிலும் யோவானிலுமே குறிப்பிடப்பட்டுள்ளன. 

(4) Donald .A. Hagner, Matthew : The World Biblical Commentary, p 844

(5) M.Dibelius, from Tradition to Gospel, London, 1934, p. 193

(6) William Barclay, Mathew Vol. II in Daily Study Bible Edinburgh: St. Andrew Press, pp. 406-407

(7) Leon Morris, The Cross of Jesus Grand Rapids: Eerdmans Publishing Company, 1989, p71

(8) H. Maynard Smith, Atonement, London, 1925, p. 155

(9) Leon Morris, The Gospel According to Mathew, p. 721

(10) Karll Barth, Church Dogmatic IV, The Doctrine of Reconciliation, Edinburgh: 1958, p.168

(11) Leon Morris, The Gospel According to Mathew, p. 721

(12) Leon Morris, The Cross in the New Testament, Carlsle: Paternoster Press, 1995, p. 44

(13) Ibid 45

(14) J. Moltmann, The Crucified God: Cross of Christ as the Foundation of and Criticism of Christian Theology London : Student Christian Movement Press, P 149

(15) Peter. Green, Studies in the Cross, London, 1971,  p 101

(16) John. Marsh, The Fullness of Time, London 1952, p 100

(17) Leon. Morris, The Gospel According to Matthew, p. 722

(18) J.V.Langmead. Casserley, Christian Community. London, 1960, p 14



நன்றி  சத்தியவசனம் 2000
கட்டுரையாசிரியர் - Dr.M.S. வசந்தகுமார். 

Sunday 24 March 2013

பாலியல் விடயங்களில் கணக்கொப்புவித்தல்



எமது வாழக்கையிலுள்ள மிகவும் பெலவீனமான காரியங்களைக் குறித்து யாரொவதொருவர் அறிந்திருந்து அதனைக் குறித்து எம்முடன் அடிக்கடி ஆராய்நது பார்த்தல் மிகவும் கட்டாயமானதொன்றாகும்.  

வல்லமையான செயல் விளைவுள்ள கிறிஸ்தவ வளர்ச்சியைக் காணும்படிக்காக ஜோன் வெஸ்லி அவர்கள் பயனப்டுத்திய பிரபல்யமான வழிமுறையில் வகுப்புக்கூட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது, வெவ்வேறு வயதும், சமுதாயப் பின்னணியும் கொண்டவர்களும் ஒரே பகுதியில் வசித்தவர்களுமான ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கியதாயிருந்த்து. இக்குழுக்கள் கிரமமாகச் சந்தித்து, வேதத்தைப் படித்து, அதைத் தமது வாழக்க்கையில் பிரயோகித்தார்கள். குழுவில் காணப்பட்ட பலவகையான அனுபங்கள், அதில் பங்குபற்றியவர்களுக்கு விசேஷித்த வளமாக்கலைக் கொடுத்தது. வெஸ்லி அவர்கள் “குழாம்“ (Band) என்ற இன்னுமொரு குழுவையும் ஆரம்பித்தார். இது நாம் இன்று விபரிக்கும் கணக்கொப்புவித்தல் குழுவைப் போன்றது. இந்தக் குழு ஒரே வயதையும் ஒரே பாலையும் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய ஒரு வகைக் குழுவாயிருந்த்து.  

எமது வாழ்க்கையில் நாம் செய்யும் எந்தக் காரியமும் இரகசியமற்ற, வெளிப்படையான சிந்தனையைக் கொண்ட அணுகுமுறையாக இருக்கவேண்டும். இதற்கு, கணக்கொப்புவிக்கும் பங்காளி அல்லது பங்காளிகளை வைத்துக்கொள்வது மிகச் சிறந்ததாகும். அத்தோடு அவர்கள் நம்மைச் சந்திக்கும்போது எமது பலவீனதும் விழுந்து போகக்கூடியதுமான பகுதிகளைக் குறித்து கேள்வி கேட்கவேண்டும் என்பதான ஒரு புரிந்துணர்வு நமக்குள் இருக்க வேண்டும். எமது வாழ்க்கையிலுள்ள மிகவும் பெலவீனமான காரியங்களைக் குறித்து யாராவது ஒருவர் அறிந்திருந்து, அதனைக் குறித்து எம்முடன் அடிக்கடி ஆராய்ந்து அந்தந்தப் பகுதியில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் கவனித்துப் பார்த்தல் மிகவும் கட்டாயமானதொன்றுகும். 1 யோவான் 1:7 இல் இந்தக் கருத்தை நாம் கவனிக்கலாம். இங்கே இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எமது பாவங்களைச் சுத்தமாக்கும் என்று சொல்வதற்கு முன்பதாக, “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.“ என்று யோவான் சொல்கிறார். இந்தப் பகுதி பாவ அறிக்கையைக் குறித்து விளக்குகின்றது. எப்படியெனில் ஒளியில் நடப்பது என்பது ஐக்கியத்திற்கான கதவுகளைத் திறந்துவடுகின்றது. ஆகவே, எமது பாவங்களைக் குறித்து அறிக்கையிடுவதில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று இந்தப் பகுதியை நாம் வியாக்கியானம் செய்யலாம்.  

இன்றைய நாட்களில் மக்கள் மிகவும் உணர்வுப்பூர்வமான தமது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து ஆலோசகர்கள் போன்ற வெளிநபர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். எமக்கு மிகவும் பாரதூரமான பிரச்சினைகள் இருக்கும் வேளையில் அதனைத் தீரப்பதற்கு உதவக்கூடிய ஆலோசகர்களின் மதிப்பை நான் இவ்விடயத்தில் புறக்கணிக்கவில்லை. ஆனால், இப்படியான ஆலோசகர்கள் கணக்கொப்புவிக்கின்ற உறவுக்கு மாற்றீடானவரக்ள் அல்ல. எமது பலவீனங்களில் எமது நீண்ட கால அளவில் உதவக்கூடியவர்கள், எம்முடன் நெருக்கமாகப் பழகுபவர்களே! இவர்களிடம் நாம் எமது வாழ்க்கையின் விடயங்களை மறைக்க முடியாது. பிரபல்யமான உளநல மருத்துவர் தோமஸ் ஸ்சாஸ் அவர்கள் “நட்பை உருவாக்குதலே உள ரீதியான சிகிச்சை“ என்று குறிப்பிட்டுள்ளார். தங்கள் கதையைக் கேட்பதற்கு அவர்களுடைய நண்பர்களே உகந்தவர்களாக இருக்கும்போது, மக்கள், அதற்குரிய வல்லுனர்களிடம் பணம் கொடுத்துப் போகின்றார்கள்.  

எமது பலவீனங்களைக் குறித்து எமக்கு நெருக்கமானவர்கள்ளுடன் பேசுவது எப்போதும் சுலபமானாயிராது. எமது நடவடிக்கைகளின் விளைவுகளை நாம் அவர்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உதாரணமாக, எமது பலவீனங்களை தங்களது அலுவலக மேற்பார்வையாளர் அறிந்திருப்பதைவிட, ஒரு ஆலோசகர் அறிந்திருப்பதை பலரும் விரும்புவார்கள். தமது மேற்பார்வையாளர் அறிந்திருந்தால், தங்களது பதவி உயர்விற்கு அது பாதகமாக அமையலாம என அவர்கள் பயப்படக்கூடும். ஆனால், அது அப்படித்தானே இருக்கவேண்டும்? அதாவது நமது மேலதிகாரிகள்தான் நம்மைக் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் எமது தகைமைகளுக்கு ஏற்றபடிதானே பதவி உயர்த்தப்பட வேண்டும்? எமது பதவி உயர்விற்கு ஏற்றதல்லாத பலவீனமொன்று எம்மிடம் இருக்குமானால், அதை எமது பதவி உயர்வைத் தீர்மானிப்பவரிடமிருந்து மறைப்பது தவறான காரியமல்லவா? அநேகமான வேளைகளில் கிறிஸ்தவ குழுக்களில், தங்களுக்கு கீழே உள்ளவர்களை ஒரு மேய்ப்பனுக்கு கவனத்துடன் வழிடந்தும் பொறுப்பு தலைவர்களிடம் இருப்பதில்லை. மேய்பனுக்குரிய ஊழியத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களே அதைச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட செயல், அதிகாரங்களை செயற்கையான ரீதியில் பிரித்து  வத்திருப்பதாகும் என்று நான் நம்புகின்றேன். வேதாகமத்திலே தலைவர்களே தமது மந்தைகளைப் பராமரிக்கும் மேய்ப்பவர்களாய் காணப்படுகின்றார்கள்.  

பாலியல் பாவத்தில் விழுந்துபோனபோது, தமது இந்த தனிப்பட்ட பிரச்சினையைக் குறித்து யாரிடமும் கணக்கொப்புவிக்காத வேளைகள் தமது வாழ்வில் நேர்ந்தள்ளதாக, பாலியல் பாவத்தில் விழுந்துபோன பல பிரபல்யமான கிறிஸ்தவர்கள் கூறியுள்ளார்கள். உங்களுக்கு கணக்கொப்புவிக்கும் பங்காளி ஒருவர் இல்லையெனில் ஒருவரைத் தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு பங்காளியை ஏற்படுத்தித் தரவில்லை என்று நீங்கள் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தையோ அல்லது உங்களது சபையையோ குற்றஞ் சொல்லவேண்டாம். ஒரு குழு உங்களுக்கு ஒருவரைத் தரவில்லை என்ற காரணத்திற்காக, அதனூடாக உங்களுக்கு கிடைக்க்கூடிய மிகவும் முக்கியமான வளத்தையோ ஆதாரத்தையோ தவறிவிட்டு விடாதீர்கள். உங்களுடைய வேலைத்தாபனம் தமது ஊழியர்களுக்கென ஒரு வைத்திய உதவித் திட்டத்தை வைத்திராவிட்டாலும், உங்களுக்கு சுகவீனம் ஏற்பட்டால் மருத்துவரை நாடாமல் இருக்க மாட்டீர்கள் என நிச்சியமாய் நம்புகின்றேன்.  

தம்மிடம் இரகசியமாகச் சொன்ன காரியங்களை பிறரிடம் சொல்லாதபடி உண்மையுள்ளவர்களாக மக்கள் இருப்பார்கள் என்று கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பமுடியாத கவலைக்குரிய நிலைமை ஆசியாவிலுள்ள சபைகளில் காணப்படுகின்றது. எமது மக்களிடம் அந்தரங்கத்தைப் பேணுகின்ற உண்மைத்துவம் இல்லைபோலும் ஆக, அநேகர், தமது வாழ்க்கையைக் குறித்து வெளிப்படையாகச் சொல்லுவதற்குப் பயப்படுகிறார்கள். இரகசியங்களை அந்தரங்கமாய் வைத்திருக்கத்தக்க உண்மையுள்ள கிறிஸ்தவர்களைக் கொண்ட புதியதொரு சந்த்தியை உருவாக்குவது மிகவும் அத்தியாவசியமான ஒரு காரியமாகும். நீங்கள் ஒருமுறை மனம் நோகடிக்கப்பட்டிருந்தாலும் உண்மையுள்ள நண்பர்களைத் தேடும் பணியைக் கைவிட்டுவிடாதீர்கள்.  

கிறிஸ்துவுக்காக இளைஞர் இயக்கத்தில், பாலியல் சம்பந்தமாக நம்மிடையே பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரே பாலரின் விடயங்களை தமது துணைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எமது தலைவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளார்கள் ஏனெனில், அந்த விடயங்களை நமது துணைகளிடம் தெரியப்படுத்துவோமானால், தம்முடன் பகிர்ந்துகொண்ட நபர் தேவையில்லாமல் வெட்கப்பட நேரிடும். அதுமாத்திரமல்ல, நாம் நம் துணைகளுக்கு தெரியப்படுத்துவது தெரிந்தால் உணர்வுபூர்வமான பாலியல் சம்பந்தமான தமது பிரச்சினைகளை அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள்.  

சில வேளைகளில் இரகசிய தகவல்களை பிறருக்குத் தெரியப்படுத்துவதற்கு வேதாகம காரணங்கள் இருக்கக்கூடும். உதாரணமாக, ஒழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதான ஒரு பாவத்தை உங்களிடம் கணக்கொப்புவிக்கும் பங்காளியாருப்பவர் செய்திருக்கலாம். அப்படியான தருணத்தில் நாம் அதை ஏற்ற தலைவர்களிடம் சொல்லும்படியாக அவரை ஊக்குவிக்க வேண்டும். 

வியாபார  உலகிலே, தொழில் சம்பந்தமான வட்டத்துள் ஆண், பெண் பாலாரிடையே காணப்படும் உறவுகளைக் குறித்து மிகவும் உறுதியான கணக்கொப்புவிப்பு கோட்பாடுகள் இருக்கின்றது என்பது மிகவும் சுவாரஸ்யமான விடயம். அலுவலகங்களில் உறவுகள் ஏற்படுமாயின் அவை அலுவலகத்தை சுமுகமாகக் கொண்டு செல்வதற்குத் தடையாகும் எனக் கருதப்படுவதே இதற்குரிய காரணமாகும். என்னுடைய சகோதரர் ஒருவர் வியாபார உலகில் வேலை பார்க்கின்றார். அவரது அலுவலகத்தில் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கும், ஒரே பகுதியில் வேலை பார்க்கும் இருவருக்கிடையே உறவுகள் வைத்துக்கொள்வதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவர் என்னிடம் கூறியுள்ளார். உறவுகள் வைத்திருப்பவர், தனது மதிப்புப் பாதிக்கும்படி தகாத காரியங்களுக்கு இடமளிப்பதால், ஸ்தாபனத்தின் செயல்திறனுக்கு இடையூறு ஏற்படுவதனால், இப்படிப்பட்ட தடைகள் விதிக்கப்பட்டதன் காரணம் என்றும் கூறினார். நாம் இப்படியான காரியங்களில் மிகவும் கடுமையாகவிருப்பதற்கு உறுதியான காரணங்கள் உள்ளன. அதாவது, இந்த நடத்தையால், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் கர்த்தரின் நியமங்களை இவர்கள் மீறுவதுடன், தேவ நாமத்திற்கும் அபகீர்த்தியை உண்டு பண்ணி தம்மை தேவகோபத்திற்குள்ளாக்குகின்றார்கள்.  

நான் எனது அனுபவத்தில் அவதானித்த கவலைக்குரிய காரியமொன்றைக் குறிப்பிட வேண்டும். கிறிஸ்தவர்கள் பொய் சொல்லுவதும் அல்லது தகவல்களை மறைப்பதும் இந்த பாலியல் குறித்த விடயத்திலேதான். இவர்களில் அநேகர் தாம் நெருக்கமாயிருக்கும் நபர்களுடன் மிகவும் திறந்ததொரு ஐக்கியத்தை வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் தேவைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தாம் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டார்கள். ஆனால், பாலியல் பாவத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் உண்மையை மறைப்பார்கள். மெய் நிகழ்வுகளை மறைப்பார்கள். அநேகமான வேளைகளில் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் அவர்களை எதிர்கொள்ளும்வரை அறிக்கையிட மாட்டார்கள்.  

ஆதாரங்கள் இருந்தாலும்கூட மற்றவர்கள் அறிந்திருக்கும் காரியங்களை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில் மற்றவர்கள் கண்டுகொள்ளாத மிகவும் ஆழமான வேறு காரியங்களும் காணப்படலாம். அரைவாசி பாவமே அறிக்கையிடப்படும். அதனால் பாவத்திலிருந்து பூரணமான குணமாகுதல் கிடையாது. சரியான குணமாகுதல் கிடைக்காது. சரியான குணமாகுதல் இல்லாத பட்சத்தில் முதல் விழுந்துபோன அதேமாதிரியான பாவச்சோதனை மீண்டும் ஏற்படும்போது அவர்கள் திரும்பவும் பாவத்தில் விழுந்துபோவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாய் இருக்கும். இந்தப் பாவம் அந்த நபரின் வாழ்க்கையில் காணப்படும் ஒரு பலவீனத்தை வெளிப்படுத்தயிருக்கின்றது. இது சரியான விதத்தில் மேற்கொள்ளப்படாத விடத்தில் முழுமையான குணமாகுதல் நடைபெற மாட்டாது.  

கிறிஸ்துவின் சபையில் பாலியல் பாவம் தொடர்பாக நாம் ஒருவரை எதிர்கொள்ளும்போது அநேகமான நேரங்களில் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்க மாட்டார்கள் என்பதனை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் மனிதர்களை எதிர்கொள்ளும்போது அதன் மூலமாக ஏற்படுகின்ற மகிழ்ச்சியற்ற சூழ்நிலைகள் காரணமாக சிலவேலைகளில் உண்மையான காரியங்களைத் தவிர்த்துக் கொண்டு ஆழமான பிரச்சினையை மேலோட்டமாக அணுகக்கூடும் அப்படியான வேளைகளில் உண்மையான குணமாகுதல் நடக்க மாட்டாது.  


இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய  “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்