எழுப்புதலின் சரித்திரத்தை நாம் படிக்கையில். அந்த எழுப்புதல்களைத் தொடர்ந்து மிஷனரி இயக்கங்கள் எழுந்ததைக் காணக்கூடியதாக உள்ளது. 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட எழுப்புதலின் விளைவாக 19ம் நூற்றாண்டில் மிஷனரி இயக்கங்கள் உருவாகின.
1885ம் ஆண்டு கிறேஸ், றொபட் என்ற இருவர் இந்தியாவில் மிஷனரிப் பிள்ளைகளாக வளர்ந்தனர். அமெரிக்காவில் மிஷனரி ஊழியத்தை குறித்து பெரிதான ஊக்கம் வரவேண்டுமென பாரத்தோடு ஜெபித்தார்கள். அங்குள்ள சபைகள் நிர்விசாரமான நிலையில் இருந்தன. தேவன் ஆயிரம் மிஷனரிகளை எழுப்ப வேண்டுமென ஜெபித்தனர். றொபட் தனது தரிசனத்தை பிரின்ஸ்டன் செமினரியிலுள்ள தன்னுடைய உடன் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் ஐந்து பேர சேர்ந்து மிஷனரி ஊழியத்திற்காக ஜெபித்தனர்.
டி.எல். மூடி அவர்கள் பேச்சாளராக வருவதற்கிருந்த கருத்தரங்கில் பங்குபற்றும்படி றொபர்டின் சகோதரர்கள் அவரை வற்புறுத்தினார்கள். றொபர்ட் மற்ற மாணவர்களுடன் தனது தரிசனத்தைப் பகிர்ந்து கொண்டு ஜெபகூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். 5 பேராக தொடங்கிய ஜெபக்கூட்டம் 20 பேர்களைக் கொண்டதாக மாறியது.
நடக்கவிருந்த கருத்தரங்கில் டி.எல். மூடி அருட்பணியைக் குறித்துப் பேசுவதாக இருக்கவில்லை. ஆனால் இரண்டு மாலைச் செய்திகளை அதற்கு ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டார். அதில் ஒன்றினை மாணவர்கள் நடத்தினர். பத்து நாடுகளைப் பற்றி அங்குள்ளவர்களுக்கு எடுத்துக் கூறினார். அநேக மாணவர்கள் அருட்பணி ஊழியத்தறிகுத் தங்களை அர்ப்பணித்தனர். அதில் ஒருவர் பின்னர் பிரபலமாகிய ஜோன். ஆர். மொட் என்பவராவார். இவர் தன் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் “பரிசுத்தாவியானவர் வல்லமையோடு இந்த இடத்தில் செயற்படுகிறார். இன்று மதியம்வரை 80 இற்கும் அதிகமான மாணவர்கள் அந்நிய நாடுகளில் மிஷனரி ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்துள்ளனர். ஞாயிறு மாலையில் அது நூறாக மாறும் என நம்புகிறேன்“ என்று எழுதியுள்ளார். இதனை வாசிக்கும் நண்பனே! நீ வசிக்கும் இடம், சுற்றியுள்ள இடங்கள், தூரத்தே உள்ள இடங்கள் என்று எல்லா இடங்களுக்கும் அனுப்பும்படி தேவன் மிஷனரிகளை எழுப்ப வேண்டுமென இன்று நீ ஜெபிக்கத் தொடங்குவாயா?
ஜெபம்
“கர்த்தாவே, மிஷனரிப் பணிக்காக புறப்பட்டு செல்ல பலர் எழும்ப வேண்டுமென்ற வாஞ்சையுடன் ஜெபிக்க என்னை உமது ஜெப ஆவியினால் நிரப்பும். ஆமென்